எல்லா மொபைல்களுக்கும் ஏற்றவையா ஃபாஸ்ட் சார்ஜர்கள்? #MustKnow | Some details about the fast charging technology

வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (13/04/2019)

கடைசி தொடர்பு:14:09 (13/04/2019)

எல்லா மொபைல்களுக்கும் ஏற்றவையா ஃபாஸ்ட் சார்ஜர்கள்? #MustKnow

ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் ஃபாஸ்ட் சார்ஜிங் என்பது தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. சில நிமிடங்களில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் சார்ஜை இதன் மூலமாக ஏற்றிக் கொள்ள முடியும்.

எல்லா மொபைல்களுக்கும் ஏற்றவையா ஃபாஸ்ட் சார்ஜர்கள்? #MustKnow

டந்த சில நாள்களுக்கு முன்னால் ஷியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. வெறும் 17 நிமிடங்களில் 0-100 % சார்ஜ் ஏறும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பற்றிய விளக்கம் அதில் காட்டப்பட்டிருந்தது. இன்னும் கூடிய விரைவில் அந்த வசதியை ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல வேகமாக சார்ஜ் செய்து கொள்ளும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைப் பல ஸ்மார்ட்போன்களில் நிறுவனங்கள் கொடுக்கின்றன. மிகக் குறைவான நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் ஏற்றுவதை எப்படிச் சாத்தியப்படுத்துகின்றன ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பங்கள். 

ஃபாஸ்ட் சார்ஜர்தானா? கண்டுபிடிப்பது எப்படி?

சார்ஜிங்

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் ஒரு மொபைலை முழுவதுமாக சார்ஜ் ஏறுவதற்கு எவ்வளவு நேரம் பிடித்தது என ஞாபகம் இருக்கிறதா? ஆனால் இன்று சில நிமிடங்கள்போதும், ஒரு நாளைக்குத் தேவையான சார்ஜினை ஏற்றிக் கொள்ள முடியும் என விளம்பரப்படுத்துகின்றன மொபைல் நிறுவனங்கள். இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் அதிக நேரம் சார்ஜ் நிற்க வேண்டும் என்பதையே வாடிக்கையாளர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். எனவே அதற்குத்  தகுந்த வகையில் மொபைல் நிறுவனங்கள் அதிக திறன் கொண்ட பேட்டரிகளைக் கொடுக்கின்றன. இன்றைக்கு ஒரு ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் 3500 mAh-க்கு அதிகமான பேட்டரிதான் கொடுக்கப்படுகிறது. அவற்றைக் குறைந்த நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆனால் தொழில்நுட்பம் அனைத்து போன்களிலும் கொடுக்கப்படுவதில்லை. இந்த வசதி இருக்கும் மொபைல் அதற்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மின்சாரம் தொடர்பான இரண்டு அலகுகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். அவை மின்னழுத்தத்தை அளக்க உதவும் வோல்ட் (Volt) மற்றும் மின்னோட்டத்தை அளக்க உதவும் ஆம்பியர் (Ampere). ஒவ்வொரு சார்ஜரிலும் இந்த அலகுகளைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பார்கள். வோல்ட் அளவை ஆம்பியர் அளவுடன் பெருக்கினால் வாட்ஸ் கிடைக்கும். வாட்ஸ் என்ற அலகு திறனை அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ளலாம்.

10W சார்ஜர்

எடுத்துக்காட்டாக ஒரு சார்ஜரில் 5V மற்றும் 2A என்று குறிப்பிடப்பட்டுள்ளது என வைத்துக் கொள்வோம். அந்த இரண்டையும் பெருக்கினால் 10W என்ற அளவு கிடைக்கும். 10W என்பதுதான் அந்த சர்ஜரின் திறன். இது சராசரியான வேகத்தில் மொபைலை சார்ஜ் செய்து கொள்ள உதவும். சந்தையில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் 10W சார்ஜிங் திறனைக் கொண்டவைதான். எனவே அவற்றுடன் இந்த திறன் கொண்ட சார்ஜரே கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரின் திறன் என்பது அதிகமாக இருக்கும்.

ஃபாஸ்ட் சார்ஜர்

எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை எடுத்துக் கொள்வோம். அதன் வோல்ட் அளவு 5 (V) மற்றும் ஆம்பியர் அளவு 4 (A) இந்த இரண்டையும் பெருக்கினால் 20W கிடைக்கும். இதன் மூலமாக ஒரு சார்ஜரின் திறனை அறிந்து கொள்ள முடியும்.

ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் என்றால் என்ன?

ஒவ்வொரு மொபைலும் அது செயல்படுவதற்குத் தேவைப்படும் மின்சாரத்தை அதனுள்ளே இருக்கும் பேட்டரியின் மூலமாகப் பெறுகிறது. பேட்டரிக்கு தேவைப்படும் மின்சாரத்தை சார்ஜர்தான் அளிக்கிறது. சார்ஜரில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்துத்தான் சார்ஜ் ஏறும் வேகமும் இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் சார்ஜரில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தின் அளவு அதிகமாக இருக்கும். எனவேதான் சில நிமிடங்களில் பேட்டரியை அதிகமாக சார்ஜ் செய்து கொள்ள முடிகிறது. இப்போது இருக்கும் பல மொபைல்கள் 10W சார்ஜரில் இருந்து வெளிப்படும் மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளும். 2013-ம் ஆண்டுக்கு முன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல்களுடன் 5W சார்ஜரே கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குவால்காம் நிறுவனம் Quick Charge 1.0 என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தயாரிக்கப்பட்ட சார்ஜரின் திறன் 10W என்ற அளவில் இருந்தது. இறுதியாக அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய Quick Charge 4+ தொழில்நுட்பத்தின் படி உருவாக்கப்படும் சார்ஜர் அதிகபட்சமாக 30W திறன் கொண்டதாக இருக்கிறது.

Dash Charging

ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன் சார்ஜரில் இருந்து வெளிப்படும் அதிக அளவு மின்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஸ்மார்ட்போனில் இருக்கும் அந்த புராஸசர் மொபைலுக்குள்ளே வரும் மின்சாரத்தைச் சரியாக நிர்வகித்து பேட்டரிக்குக் கொடுக்கும்.  இன்று சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான மொபைல்கள் குவால்காம் நிறுவனத்தின் புராஸசரைத்தான் பயன்படுத்துகின்றன. எனவே அந்த புராஸசர் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் நிச்சயம் ஏதாவது ஒரு Quick Charge தொழில்நுட்பம் இருக்கவே செய்யும். குவால்காம் மட்டுமல்ல பல புராஸசர் தயாரிப்பு நிறுவனங்கள் இதே போல ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கைவசம் வைத்திருக்கின்றன. அவர்கள் வெவ்வேறு பெயர்களில் ஸ்மார்ட்போன்களில் அதைக் கொடுக்கிறார்கள்.  ஆனால் அதைப் பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரிவரத் தெரியப்படுத்துவதில்லை அல்லது அதற்கேற்ற சார்ஜரை உடன் கொடுப்பதில்லை. அண்மையில் வெளியான ரெட்மி நோட் 7 புரோ ஸ்மார்ட்போனில் Quick Charge 4 வசதி இருக்கிறது. இது அதிகபட்சமாக 18 W திறன் கொண்ட சார்ஜரை ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதனுடன் கொடுக்கப்படும் சார்ஜரின் திறன் 10W-தான். அந்த மொபைலை வேகமாக சார்ஜ் செய்ய வேண்டும் என்றால் மார்க்கெட்டில் தனியாகக் கிடைக்கும் சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தினால்தான் உண்டு. 

ஃபாஸ்ட் சார்ஜரை அனைத்து மொபைல்களுக்கும் பயன்படுத்தலாமா ?

சார்ஜர்

சாதாரண சார்ஜருடன் ஒப்பிடும் போது ஃபாஸ்ட் சர்ஜரில் இருந்து வெளிப்படும் மின்னோட்டம் அதிக அளவில் இருக்கும். அதைத் தாக்குப்பிடிக்கும் வகையில் அந்த மொபைல் இருப்பது அவசியம். ஸ்மார்ட்போனில் உள்ள புராஸசரும் மின்சாரத்தைச் சரியான அளவில் நிர்வகிக்கும் வகையில் இருக்கும். 10W அளவை மட்டும் தாங்கும் மொபைலை 20W சார்ஜர் மூலமாக சார்ஜ் செய்யும் போது நிச்சயம் மொபைலின் பேட்டரி பாதிக்கப்படும். அவசரத்துக்கு என்றால் எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொடர்ச்சியாக  நீண்ட நாளுக்குப் பயன்படுத்தும் போது மொபைலில் பிரச்னைகள் உருவாகும் வாய்ப்புகள் உண்டு. அதன் காரணமாகவே மொபைலுக்கென கொடுக்கப்பட்ட சார்ஜரை மட்டும் பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களை வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு நிறுவனங்களும் அவர்களுடைய ஸ்மார்ட்போன்களில் கொடுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்கு வெவ்வேறு பெயர்களை வைத்திருக்கின்றன.

ஒன்பிளஸ் டேஷ் சார்ஜிங்

இந்த வசதியைப் பொறுத்தவரையில் பிரபலமானது குவால்காம் நிறுவனத்தின் Quick Charge தொழில்நுட்பம்தான். பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இந்த நிறுவனத்தின் புராஸசரே பயன்படுத்தப்படுவதால் இந்த வசதியைப் பல மொபைல்களில் பார்க்க முடியும். சாம்சங் Adaptive Fast Charging என்ற பெயரில் பல வருடங்களாக இந்த வசதியை அதன் மொபைலில் கொடுத்து வருகிறது. ஓப்போ Super VOOC என்ற பெயரிலும், ஒன்பிளஸ் டேஷ் சார்ஜிங் என்ற பெயரிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொடுத்து வருகின்றன. 


டிரெண்டிங் @ விகடன்