வெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக? #OneDollarSalary | Twitter CEO gets 97 rupees as salary, Do you know about this 'One dollar salary' trend!

வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (11/04/2019)

கடைசி தொடர்பு:11:12 (11/04/2019)

வெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக? #OneDollarSalary

நம்மில் பலருக்கும் மாதத்தில் மிகமுக்கிய நாள் சம்பள நாளாகத்தான் இருக்கும். அன்று உங்கள் கணக்கில் வெறும் ஒரு டாலர் (70 ரூபாய்) சம்பளமாக போடப்பட்டால் எப்படி இருக்கும்? ஆனால் பெரிய டெக் நிறுவனங்களின் CEO-க்கள் இந்த சம்பளத்தைத்தான் மொத்த வருடத்திற்கே பெறுகின்றனர். இது ஏன்? இந்த 'One dollar salary' யின் பின்னணி என்ன?

வெறும் 97 ரூபாய் சம்பளம் பெறும் ட்விட்டர் CEO... எதற்காக? #OneDollarSalary

பொதுவாக பெரிய டெக் நிறுவனங்களின் CEO-க்களின் வருடாந்திர சம்பள  விவரங்கள் வெளிவரும்போது அவை பெரியளவில் செய்தி ஆகும். காரணம் அந்தளவுக்குப் பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருப்பர் . உதாரணத்துக்கு ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்கின் 2018-க்கான சம்பள விவரங்களைப் பார்ப்போம். கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து இவர் ஏற்படுத்திய முன்னேற்றங்களுக்காக போனஸாக மட்டும் 12 மில்லியன் டாலர்களைப் பெற்றார். அவரது சம்பளத்தையும் கடந்த வருடம் 22 சதவிகிதம் அதிகரித்து 3 மில்லியனாக கொடுத்தது ஆப்பிள். இதுபோக பிரைவேட் ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்கள் பெற்றார் குக். 

Tim cook

நிலைமை இப்படியிருக்க, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (CEO) ஜாக் டார்சி, கடந்த ஆண்டுக்காக வாங்கிய மொத்த சம்பளமும் வெறும் 1.40 டாலர்கள்தான் என்று அமெரிக்க அரசின் SEC ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்களில் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 97 ரூபாய். சொல்லப்போனால் இதுவே அவருக்கு அதிகம்தானாம். 2015 முதல் 2017 வரை இந்தப் பதவியில் இருக்க எந்த ஒரு பணமும் பெறவில்லை. இதுமட்டுமல்லாமல் இவர் தொடங்கிய 'ஸ்கோயர்' என்ற மொபைல் பேமன்ட் நிறுவனத்திலும் இவர் CEO-வாக இருக்கிறார். அதில் அவர் பெரும் சம்பளமும் 2.75 டாலர்கள்தான். 

இது ஏனென்றால் இந்த நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகள் அவரிடம்தான் இருக்கிறது. தற்போது ஜாக் டார்சியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 4.7 பில்லியன் டாலர்கள். இதில் இவர் வைத்திருக்கும்  `ஸ்கோயர்' நிறுவனப் பங்குகளின் மதிப்பு மட்டும் 3.9 பில்லியன் டாலர்கள். ட்விட்டர் பங்குகளின் மதிப்பு 600 மில்லியன் டாலர்கள். ட்விட்டரை நிறுவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இவ்வளவு சொத்துகள் வைத்திருக்கும் இவர் ஏன் அந்த சொற்ப 1.40 டாலர்களைச் சம்பளமாக பெறவேண்டும் அதையும் பெறாமல் இருக்கலாம்தானே என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் ஒரு காரணம் உண்டு.

இந்த ஒரு டாலர் சம்பளத்தின் பின்னணி என்ன?

சொல்லப்போனால் இந்த 1 டாலர் சம்பளம் என்பதை இவர் மட்டும் பெறவில்லை. ஃபேஸ்புக்கின் CEO மார்க் சக்கர்பெர்க் 2012-ல் 770,000 டாலர்களைச் சம்பளமாகவும், போனஸாகவும் பெற்றார். ஆனால், இப்போது ஃபேஸ்புக்கில் மிகக்குறைந்த சம்பளம் வாங்குவது அவர்தான். மேலும் ஆரக்கிளின் லாரி எலிசன், கூகுளின் லாரி பேஜ் எனப் பலரும் இந்த ஒரு டாலர் சம்பளமே பெறுகின்றனர். இப்படி சம்பளம் பெறுவதை 'One dollar salary' என்று குறிப்பிடுகின்றனர்.

Mark ஒரு டாலர் சம்பளம்

இந்த வழக்கம் 1900-களில் பிரபலமடையத் தொடங்கியது. உலகப்போர் மற்றும் பிற போர்களின்போது பல தொழில்துறை தலைவர்கள் அமெரிக்க அரசுக்காக சேவை ஆற்றினர். ஆனால், அதற்காக எந்த ஒரு சலுகைகளையும் பெற அவர்கள் விரும்பவில்லை. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரு கணக்குக்காக ஒரு டாலர் சம்பளம் பெற்றனர். இவர்களை `டாலர் ஏ இயர் மென்' (Dollar-a-year men) என்றழைத்தனர். இந்த ட்ரெண்ட் மீண்டும் 1990-களில் எட்டிப்பார்க்கத்தொடங்கியது. பல வசதி படைத்த CEO-க்கள் ஒரு டாலர் சம்பளம் பெறத்தொடங்கினர். இப்படி 'One dollar salary' பெறுவது அவர் பங்குதாரர்களை மனதில் வைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமையும். மேலும், பெரிய சம்பளம் எதுவும் இல்லாததால் நிறுவனத்தின் பங்குகள் வளர்ச்சியடைவதில் அவரது முழு கவனம் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்குப் பங்குகள் மூலம் வருவது மட்டுமே வருமானம். இப்படி பல காரணங்கள் இதற்கு உண்டு. சம்பளம் வாங்குவதை விட இப்படி பங்குகள் மூலம், வருமானம் ஈட்டினால் வரிகள் குறையும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

டாலர் எ இயர் மென்

தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் என்றில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் சிலரும்கூட இந்த ஒரு டாலர் சம்பளத்தை பெற்றிருக்கின்றனர். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவும் தனது முதல் ஆட்சிக்காலத்தில் (1991-1996) இப்படி மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். ஓஹியோ பல்கலைக்கழகம் (Ohio State University) 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வு இப்படி 'One dollar salary' பெறுபவர்கள் அனைவரும் பணம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்கள் என்றும், மிகப்பெரிய தாக்கத்தை அவர்களால் ஏற்படுத்தமுடியும் என்றும் தெரிவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்