உங்கள் தொகுதி வேட்பாளர் யார்? இப்போ ஃபேஸ்புக்லயே பார்க்கலாம்! | Facebook has new option it shows candidates of Lok Sabha election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (17/04/2019)

கடைசி தொடர்பு:16:40 (17/04/2019)

உங்கள் தொகுதி வேட்பாளர் யார்? இப்போ ஃபேஸ்புக்லயே பார்க்கலாம்!

ன்னும் சில மணி நேரங்களே மிச்சமிருக்கின்றன. தமிழகத்தில் தேர்தல் களைகட்டவிருக்கிறது. இந்திய தேசத்தின் ஜனநாயகத் திருவிழாவில், தமிழகம் தன் பங்கை ஆற்றவிருக்கிறது. கடந்த சில தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இதற்கு முன்பிருந்ததைவிடவும் அரசியல் கட்சிகளின் பிரசாரம், தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் என எல்லாமே தொழில்நுட்பத்தின் உதவியால் டிஜிட்டலாக மாறியிருக்கின்றன. இதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றன. அந்த வரிசையில், அந்தந்தத் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள் பற்றி அறிந்துகொள்வதற்குப் புதிய வசதி ஒன்றை அறிமுகம்செய்திருக்கிறது ஃபேஸ்புக். இதைக் கடந்த சில நாள்களாகவே ஃபேஸ்புக் ஆப்பில் செயல்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.

ஃபேஸ்புக்

வேட்பாளர்கள் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?

ஃபேஸ்புக் ஆப்பில் லாகின் செய்ததும், வலதுபக்கம் மேலே உள்ள மெனு பட்டனை அழுத்த வேண்டும். அதில் 2019 Election என்ற ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், திரையில் See the Candidate என்ற வசதி தோன்றும். இதில், இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களையும் பார்க்கமுடியும். குறிப்பாக, உங்கள் தொகுதிகுறித்து தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், See the Candidate என்பதை க்ளிக் செய்து, அதன்பின் தமிழ்நாடு என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும்.

Facebook

உடனடியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளின் பெயரும் பட்டியலாகத் தோன்றும். எந்தத் தொகுதியை க்ளிக் செய்தாலும் அந்தத் தொகுதியில் உள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர் வரை அனைவரின் பெயர், புகைப்படம், அவர்களின் கட்சி என அனைத்துத் தகவல்களும் அடங்கிய பட்டியல் திரையில் தோன்றும். அந்த குறிப்பிட்ட வேட்பாளர்கள் ஃபேஸ்புக்கில் இருந்தால், அவர்களின் பக்கத்திற்கான இணைப்பும் அதிலேயே இருக்கும். அதில், அவர்களின் மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இதேபோல, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையை க்ளிக் செய்து படியுங்கள்.