டிக்டாக், பப்ஜி செயலிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு - சீனா நடவடிக்கை! | China plans to implement new restrictions to short video platforms and pubg

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (17/04/2019)

கடைசி தொடர்பு:18:40 (17/04/2019)

டிக்டாக், பப்ஜி செயலிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு - சீனா நடவடிக்கை!

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது, உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவு போன்றவற்றால், மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது டிக்டாக் செயலி. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இதனைப் பயன்படுத்துவதால், அவர்கள் சீரழியும் நிலை உருவாகும் என்பது இதை எதிர்ப்பவர்களின் வாதம். இதேபோல, சமீபத்தில் பப்ஜி விளையாட்டிற்கு எதிராகவும் நிறைய எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. சில இடங்களில் இதற்குத் தடையே விதிக்கப்பட்டது. இப்படி இந்தியா போலவே சீனாவிலும் இவற்றைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, புதிதாக ஒரு கட்டுப்பாடு விதிக்கவிருக்கிறது சீனா. 

பப்ஜி

இதன்படி டிக்டாக், விகோ போன்ற ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்ம்கள் அனைத்தும் 'யூத் மோடு' என்ற ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டும். இதன்படி சிறுவர்கள் ஒருநாளைக்கு 40 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆப்களைப் பயன்படுத்த முடியும். அதற்கும் மேல் இவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்றால் பெற்றோர்கள், சிறுவர்களின் கணக்குகளைப் பரிசோதித்து மட்டுமே பயன்படுத்த முடியும். இதேபோல பப்ஜி விளையாட்டிலும் பயனர்களின் வயது வரம்பை உறுதிசெய்யும் வகையில் புதிய வசதி ஒன்று வருகிறது.

டிக்டாக்

இதன்படி, ஃபேஷியல் ரெககனைஸ் மூலம் பயனர்களின் வயது உறுதிசெய்யப்படும் என டென்சென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், இப்போதைக்கு டிக்டாக்கிற்குத் தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ எதுவும் இல்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இது நிரந்தரமாக நீக்கப்படுமா, தடை செய்யப்படுமா அல்லது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.