ஸ்மார்ட்போனில் 50x ஜூமிங் திறன்... பிரைவசிக்கு புதிய ஆபத்து? | Huawei P30 smartphone has a new optical zoom technology which raises a privacy concern

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (18/04/2019)

கடைசி தொடர்பு:12:13 (18/04/2019)

ஸ்மார்ட்போனில் 50x ஜூமிங் திறன்... பிரைவசிக்கு புதிய ஆபத்து?

சமீபகாலமாகத் தூரத்தில் இருக்கும் பொருள்களைக்கூட ஜூம் செய்து தெளிவாகப் போட்டோ எடுக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வருகின்றன. இதன் மூலமாக மற்றவர்களின் பிரைவசி பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்மார்ட்போனில் 50x ஜூமிங் திறன்... பிரைவசிக்கு புதிய ஆபத்து?

'ஸ்மார்ட்போன் கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோ அது. கேமரா ரெக்கார்டு செய்வதற்காக ஆன் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போனை ஜன்னலுக்கு அருகே கொண்டு செல்கிறது ஒரு கை. அப்படியே தரைப் பகுதியை நோக்கி ஜூம் (zoom) செய்துகொண்டே செல்ல செல்ல இறுதியாக இரண்டு சிறுவர்கள் செஸ் போன்ற ஏதோ ஒரு விளையாட்டில் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதில் உள்ள எழுத்துகள்கூட தெளிவாகத் தெரிகின்றன. இத்தனைக்கும் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருப்பவர் குறைந்தபட்சம் இருபது மாடிக்குச் சற்று மேலே உள்ள தளத்தில் இருந்து அந்த வீடியோவை எடுத்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவின் ஜூம் செய்யும் திறனைக் காட்டும் இந்த வீடியோ அண்மையில் வெளியான வாவே P30 புரோ என்ற ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்டது.

கேமரா

இதுமட்டுமல்ல Huawei P30 ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் கேமராவின் ஜூம் செய்யும் திறன்தான். இதுமட்டுமல்ல இதேபோல வசதியைக்கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து பல நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இது ஒரு நல்ல வசதியைப்போலத் தெரிந்தாலும், இதன் மறுபக்கத்தையும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது.

எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் பார்க்கலாம்!

பிரைவசியை பாதிக்குமா Huawei P30 கேமரா?

இப்போது இருக்கும் ஸ்மார்ட்போன் கேமராக்களிலேயே ஜூம் செய்யும் வசதி இருக்கத்தான் செய்கிறது. பின் எந்த வகையில் வாவே P30 புரோ அதை வேறுபடுத்திக் காட்டுகிறது? ஜூம் செய்யும் விதத்தைப் பொறுத்து அதை ஆப்டிகல், டிஜிட்டல் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் ஆப்டிகல் ஜூம் மட்டுமே லென்ஸை முழுமையாகப் பயன்படுத்தும் என்பதால் இதில் தெளிவான போட்டோக்களை எடுக்க முடியும். டிஜிட்டல் ஜூம் என்பது வெறும் சென்ஸார் லெவலில்தான் இருக்கும். இந்த இரண்டிலுமே சில நிறைகுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆப்டிகல் ஜூமைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் அதிகமான இடம் தேவைப்படும். ஆனால், டிஜிட்டல் ஜூம் அவ்வளவு அதிகமாகத் தேவைப்படாது. எனவே, இதுவே ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹுவாவே P30 புரோ

ஆனால், வாவே நிறுவனம் புதிய தொழில்நுட்பதைக் கேமராவில் பயன்படுத்தியதன் மூலமாக ஸ்மார்ட்போனில் அதிக அளவு டிஜிட்டல் ஜூமை சாத்தியமாக்கியிருக்கிறது. P30 புரோ ஸ்மார்ட்போனில் 5x optical, 10x hybrid, 50x digital zoom என கேமராவில் இருக்கும் ஜூம் செய்யும் திறனை அடுக்கியிருக்கிறது வாவே. இதன் மூலமாக வெகுதூரத்தில் இருக்கும் பொருளைக்கூட ஜூம் செய்து தெளிவாகப் போட்டோ எடுக்க முடியும். இந்தத் தூரம் என்பது இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது என்பதுதான் இதன் ஸ்பெஷல். 

இது போன்ற ஸ்மார்ட்போன் கேமராக்களால் பிரைவசிக்கு பாதிப்பு இருக்குமா?

வாவே P30 புரோ

கேமரா என்ற விஷயம் வரத்தொடங்கிய பிறகு, கேமரா மொபைல்களுக்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் அப்போதைய காலகட்டத்தில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பல மால்களில் கேமரா இருக்கும் மொபைல்களை உள்ளே எடுத்துவரத் தடை விதித்திருந்தார்கள். அதற்குக் காரணம் பிறரை அனுமதியின்றி போட்டோ எடுத்துவிடுவார்கள் என்பதற்காகத்தான். அதன் பிறகு அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் வரத் தொடங்கிய பிறகு, அந்தக் கட்டுப்பாடு தளர்ந்துபோனது. இப்போது அதிக ஜூம் செய்யும் திறன் கொண்ட கேமராக்களால் பிரைவசி பாதிக்கப்படுமோ என்ற அச்சம் மீண்டும் எழுந்திருக்கிறது. நமது ஊரில் பரவாயில்லை வெளிநாடுகளில் பெரும்பாலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள்தான் காணப்படும். ஒரு கட்டடத்தில் இருந்து பார்த்தால் அடுத்த கட்டடத்தில் நடக்கும் அனைத்தையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சரி இப்போது இருக்கும் ஸ்மார்ட்போன் கேமராக்களால் அதற்கான வாய்ப்பு இல்லையா என்றால், அதற்கான வாய்ப்புகள் கொஞ்சம் குறைவாகவே இருக்கின்றன. காரணம் இப்போது இருக்கும் கேமராக்களில் இந்த அளவுக்கு ஆப்டிகல் ஜூம் இல்லை. பெரும்பாலும் டிஜிட்டல் ஜூம்தான்.

கேமரா

அதன் மூலமாக நீண்ட தூரத்தில் இருக்கும் பொருள் ஒன்றை ஜூம் செய்து பார்த்தால் ஏதோ தெளிவில்லாத படம் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் இரவு நேரத்தில்கூட தூரத்தில் இருக்கும் பொருள்களைத் தெளிவாக போட்டோ எடுக்கலாம் என்கிறது வாவே நிறுவனம். மொபைல் போன்களால்தான் இந்த பிரைவசி பாதிக்கப்படுமா, அதற்கு வேறு வழிகள் இல்லையா என்று சிலருக்கு சந்தேகம் எழக்கூடும். ஒருவர் கையில் பைனாகுலரோ, வேறு ஏதாவது டிஜிட்டல் கேமராவையோ கையில் வைத்துக்கொண்டு தூரத்தில் இருக்கும் ஒன்றை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தால் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், வெறும் மொபைலை வைத்துக்கொண்டிருப்பவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாகவே இருக்கும். எனவே, இது போன்ற ஸ்மார்ட்போன்களால் பிரைவசிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டிருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்