64 MP போட்டோ, VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்... ரெட்மி நோட் 7 புரோவை விஞ்சும் ரியல்மீ 3 புரோ! | Realme launched new smartphone realme 3 pro

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (24/04/2019)

கடைசி தொடர்பு:15:20 (24/04/2019)

64 MP போட்டோ, VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்... ரெட்மி நோட் 7 புரோவை விஞ்சும் ரியல்மீ 3 புரோ!

ரியல்மீ 3 புரோ ஸ்மார்ட்போன் மூலமாக ரெட்மி நோட் 7 புரோவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது ரியல்மீ நிறுவனம். அதற்காக அதே விலையில் கூடுதல் வசதிகளுடன் ரியல்மீ 3 புரோவை உருவாக்கியிருக்கிறது.

64 MP போட்டோ, VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்... ரெட்மி நோட் 7 புரோவை விஞ்சும் ரியல்மீ 3 புரோ!

ட்ஜெட் செக்மென்டில் சமீபமாக அதிகம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 புரோ-வுக்குப் போட்டியாக ரியல்மீ 3 புரோ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரியல்மீ நிறுவனம். சந்தையில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே மிகப்பெரிய அளவு வளர்ச்சியடைந்திருக்கும் ரியல்மீ தனது போட்டியாளர் ஷியோமி நிறுவனம்தான் என்பதை இதன் மூலமாக உறுதிப்படுத்தியிருக்கிறது. ரெட்மி நோட் 7 புரோவுக்குப் போட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதே விலையில் இந்த ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 6T-யின் கேமரா சென்ஸார், VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

ரியல்மீ 3 புரோ

சந்தையைக் கலக்கிக்கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 புரோவின் முதன்மையான சிறப்பம்சமாக ஷியோமி நிறுவனம் குறிப்பிட்டது அதன் கேமராவைத்தான். அதில் இருக்கும் கேமராவால் 48 MP போட்டோக்களை எடுக்க முடியும் என்று விளம்பரம் செய்தது ஷியோமி. தற்போது ரியல்மீ நிறுவனமும் அதேபோல விளம்பரம் செய்திருக்கிறது. ரியல்மீ 3 புரோ ஸ்மார்ட்போனில் 16 MP+5 MP டூயல் கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 16MP கேமராவில் சோனியின் IMX519 என்ற சென்ஸார் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7 புரோவின் 12 MP கேமரா எப்படி 48 MP போட்டோவை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டதோ அதே தொழில்நுட்பம் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் இருக்கும் 16 MP கேமரா மூலமாக 64 MP போட்டோவை எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இருக்கும் Sony IMX519 சென்ஸார்தான் ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிட்டத்தட்ட அதே தரத்தில் போட்டோ கிடைக்கும் என நம்பலாம்.

ஸ்லோ மோஷன்

மேலும் படம்பிடிக்கும் காட்சிகளை மெதுவாக நகரச் செய்யும் ஸ்லோமோஷன் வசதி பட்ஜெட் செக்மென்டில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவ்வளவு சிறப்பானதாக இருப்பதில்லை. இதில் 720p வீடியோவை 960fps அளவுக்கு ஸ்லோமோஷனில் படம் பிடிக்க முடியும். இது பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கொடுக்கப்படாத வசதி என்கிறது ரியல்மீ. ரெட்மி நோட் 7 புரோவில் இருக்கும் அதே 6.3 இன்ச் அளவு டிஸ்ப்ளே இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பாதுகாப்புக்காகக் கொரில்லா கிளாஸ் 5 இருக்கிறது. மேலும் ரெட்மி நோட் 7 புரோவை விடச் சற்று அதிக திறன்வாய்ந்த Snapdragon 710 புராஸசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக கேமிங் பெர்ஃபாமன்ஸ் சிறப்பாக இருக்கும். 4045 mAh பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒரு முழு சார்ஜில் ஒரு நாளை தாண்டியும் போனைப் பயன்படுத்தமுடியும். சமீபமாக மொபைலை வேகமாக சார்ஜ்செய்து கொள்ள உதவும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் என்பது வாடிக்கையாளர்களால் அதிகம் கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. ஷியோமியும் ரெட்மி நோட் 7 புரோவில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொடுத்திருந்தது. ஆனால் அதற்கேற்ற சார்ஜரை கொடுக்கவில்லை என்பது அதை வாங்கியவர்கள் சொன்ன குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால் அந்த தவற்றை ரியல்மீ செய்யவில்லை. இதில் 20W திறன் கொண்ட VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்

இதன் மூலமாக வெறும் அரை மணி நேரத்தில் 50% சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். 80 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் என்பது இதன் சிறப்பம்சம். இதே வேகத்தில் சார்ஜ் செய்வதற்கு அதற்கேற்ற சார்ஜர் தேவைப்படும். எனவே ஷியோமி போல வாடிக்கையாளர்களை ஏமாற்ற விரும்பாமல் அதற்கான சார்ஜரையும் கூடவே கொடுக்கிறது ரியல்மீ. 

இப்படி எல்லா விதத்திலும் சிறந்த வசதிகளைக் கொடுத்திருக்கும் ரியல்மீ, ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்தாமல் விட்டிருக்கிறது. அதில் ஒன்று இதன் பில்டு குவாலிட்டி. ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் மெட்டல் பில்ட் என்பதிலிருந்து மாறி கிளாஸ் பேக் என்பதற்கு வந்து விட்டது. ஆனால் ரியல்மீ இன்னமும் அதன் ஸ்மார்ட்போன்களில் பிளாஸ்டிக்கையே பயன்படுத்தி வருகிறது.

அடுத்ததாக Type-C போர்ட்டை இதில் கொடுக்கவில்லை என்பது மற்றொரு குறையாக இருக்கிறது. அதே நேரம் கொடுக்கும் விலைக்கு இந்த இரண்டு குறைகளும் அந்த அளவுக்குக் கவலைப்பட வேண்டியவை அல்ல. ஷியோமி அதன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் MIUI-ல் காட்டும் விளம்பரங்களால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது. ரியல்மீ 3 புரோ ஸ்மார்ட்போனில் இருக்கும் ColorOS-ல் அந்தத் தொல்லை கிடையாது என்பது இதில் இருக்கும் நல்ல விஷயம். மேலும் ஹைபிரிட் சிம் ஸ்லாட் கிடையாது என்பதால் இரண்டு சிம் கார்டு மற்றும் ஒரு மெமரி கார்டை ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படிப் பல விஷயங்களில் ரெட்மி நோட் 7 புரோவை விட விஞ்சி நிற்கிறது ரியல்மீ 3 புரோ. 4 GB+64 GB வேரியன்ட் 13,999 ரூபாய்க்கும், 6 GB+128 GB வேரியன்ட் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும். கிளாஸ் பேக், Type-C போர்ட் என்ற இரண்டு விஷயங்களும் பெரிதாகத் தேவையிருக்காது என்பவர்கள் ரியல்மீ 3 புரோவைத் தேர்ந்தெடுக்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்