செல்ஃபி ஸ்பெஷல் Y3, ஆல்ரவுண்டர் ரெட்மி 7... ஷியோமியின் அதிரடி பட்ஜெட் மொபைல்கள்! | Xiaomi launches Redmi Y3 and Redmi 7 smartphones in India

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (24/04/2019)

கடைசி தொடர்பு:20:23 (24/04/2019)

செல்ஃபி ஸ்பெஷல் Y3, ஆல்ரவுண்டர் ரெட்மி 7... ஷியோமியின் அதிரடி பட்ஜெட் மொபைல்கள்!

செல்ஃபிக்காக Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய ஷியோமி அந்த வரிசையில் Y3 என்ற ஸ்மார்ட்போனையும் ரெட்மி சீரிஸில் ரெட்மி 7 என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. முற்றிலும் புதிய வடிவமைப்பில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செல்ஃபி ஸ்பெஷல் Y3, ஆல்ரவுண்டர் ரெட்மி 7... ஷியோமியின் அதிரடி பட்ஜெட் மொபைல்கள்!

ரெட்மி Y3 மற்றும் ரெட்மி 7 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களைப் புதிதாக அறிமுகம் செய்திருக்கிறது ஷியோமி நிறுவனம். சந்தையில் நிலவும் கடும்போட்டியால் மொபைல் நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குள் புதிய மொபைல்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதற்கு ஷியோமி நிறுவனமும் விதிவிலக்கல்ல. பட்ஜெட் செக்மென்டில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போன்களில் ரெட்மி Y3-க்கு போட்டி கொஞ்சம் குறைவுதான்.

செல்ஃபி ஸ்பெஷல் Y3, ஆல்ரவுண்டர் ரெட்மி 7

ஷியோமி

10,000 ரூபாய்க்குக் கீழே செல்ஃபிக்காக மட்டும் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன்களை சில நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்கின்றன. சமீப காலமாக ஷியோமிக்கு கடும் போட்டியாக இருந்துவரும் ரியல்மீ நிறுவனம் Realme U1 என்ற மொபைலில் 25 MP ஃபிரன்ட் கேமராவை கொடுத்திருக்கிறது. அதைத் தவிர்த்து ஷியோமியின் ரெட்மி Y சீரிஸ் மட்டுமே செல்ஃபிக்கென ஸ்பெஷல் மொபைலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகத்தான் செல்ஃபி என்ற விஷயம் டிரெண்ட் ஆனது, அதைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன்னால் ரெட்மி Y சீரிஸில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் ஃபிரன்ட் கேமராவின் திறன் பேக் கேமராவைவிட அதிகமாக இருக்கும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Y3-யிலும் அதேதான். 32 MP செல்ஃபி கேமரா இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் செல்ஃபிக்காக பல்வேறு ஃபில்டர்கள், மோடுகளும் தரப்பட்டுள்ளன. ரெட்மி 7-ல் 8 MP முன்புற கேமரா இடம்பெற்றுள்ளது.

ரெட்மி Y3

ரெட்மி Y3 மற்றும் ரெட்மி 7 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையே வசதிகள், வடிவமைப்பு, அளவு, எடை எனப் பல விஷயங்கள்  ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே நேரம் இதன் முந்தைய போன்களுடன் ஒப்பிடும்போது வடிவமைப்பை முற்றிலுமாக மாற்றியிருக்கிறது ஷியோமி. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இருப்பது ஒரே அளவுள்ள டாட் நாட்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 6.26 இன்ச் அளவு கொண்ட டிஸ்ப்ளே 720 x 1520 பிக்ஸல் கொண்டதாக இருக்கிறது. பாதுகாப்புக்காக Gorilla Glass 5 தரப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சீரிஸில் பின்புறமும் கண்ணாடி வடிவமைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்த ஸ்மார்ட்போன்களில் பின்பக்கமாகக் கண்ணாடிபோலத் தோற்றமளிக்கும் பிளாஸ்டிக்கால் ஆன கிளாஸி வடிவமைப்பைக் கொடுத்துள்ளது ஷியோமி.

ரெட்மி 7

முன்புற கேமரா தவிர்த்து இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 MP + 2 MP திறன்கொண்ட பேக் கேமராக்கள் இருக்கின்றன. இந்த முறை புராஸசர் விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது ஷியோமி. ரெட்மி 7-னுக்கு முன்னால் வெளியான ரெட்மி 6-ல் முதல்முறையாக மீடியாடெக் புராஸசரை கொடுத்திருந்தது. ஆனால், அதன் செயல்திறன் காரணமாக அந்த மொபைல் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை, எனவே இந்த முறை மீண்டும் குவால்காம் புராஸசருக்குத் திரும்பியிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Snapdragon 632 என்ற புராஸசரே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஷியோமி ஸ்மார்ட்போன்களில் பொதுவான விஷயமாக இருக்கும் 4000 mAh பேட்டரியே இவற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு சார்ஜ் செய்து கொள்வதற்காக 10W திறன் கொண்ட சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Y3 & Redmi 7

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஓரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தவறுதலாகத் தண்ணீர் ஸ்மார்ட்போன் மீது படும்போது அதன் பாதிப்பைக் குறைப்பதற்காக இந்த ஸ்மார்ட்போன்களில் P2i என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மொபைலை முழுமையாக வாட்டர் ஃப்ரூப் ஆக மாற்றாது என்றாலும். தண்ணீரிலிருந்து ஓரளவுக்குப் பாதுகாக்கும். ரெட்மி Y3-யின் 3GB + 32GB வேரியன்ட் ரூ.9,999 மற்றும் 4 GB + 64 GB வேரியன்ட் ரூ.11,999 ரூபாய் என்ற விலையில் வரும் 30-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. ரெட்மி 7- 2GB + 32GB வேரியன்ட் 7,999 ரூபாய்க்கும், 3GB + 32GB வேரியன்ட் 8,999 ரூபாய்க்கும் 30-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.


டிரெண்டிங் @ விகடன்