பாப் அப் கேமரா, 5G, ₹ 50,000 பட்ஜெட்... ஒன்ப்ளஸ் 7-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்? #OnePlus7 | Features expected in oneplus 7 series smartphones

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:04 (03/05/2019)

பாப் அப் கேமரா, 5G, ₹ 50,000 பட்ஜெட்... ஒன்ப்ளஸ் 7-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்? #OnePlus7

விரைவில் அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கின்றன. அவற்றில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்?

பாப் அப் கேமரா, 5G, ₹ 50,000 பட்ஜெட்... ஒன்ப்ளஸ் 7-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்? #OnePlus7

லகம் முழுவதும் மொபைல் சந்தையை எடுத்துக்கொண்டால் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருப்பது வழக்கம். கடந்த சில வருடங்களாக ஒன்ப்ளஸ் நிறுவனமும் அதே போன்ற ஒரு நிலைமையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அதன் புதிய போன்களில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் புதுப்புது வசதிகளைக் கொடுத்து வருகிறது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட ஒன்ப்ளஸ் 6 சீரிஸுன் அடுத்த அப்டேட்டான ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது சந்தையைக் கலக்கத் தயாராக இருக்கின்றன. 

எப்போதும் போல இல்லாமல் இந்த முறை மொத்தம் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 14-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஒன்ப்ளஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றிய பல தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

இருப்பதிலேயே வேகமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனா ஒன்ப்ளஸ் 7 புரோ?

Oneplus 7 Pro

ஒன்ப்ளஸ் 7 புரோ ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை விடவும் வேகமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம் Geekbench benchmark என்ற மொபைல் திறனைக் கணக்கிடும் ஸ்கோர் ஒன்று முன்னரே வெளியானதுதான். அது Geekbench-ன் மல்டிகோர் டெஸ்ட்டில் 11,012 என்ற ஸ்கோரை இந்த போன் எட்டியிருக்கிறது. இந்த அளவுக்கு அதிகமான ஸ்கோரை இதுவரை எந்த ஸ்மார்ட்போன்களும் பெறவில்லை. இந்த அளவுக்கு ஸ்கோரை எட்டுவதற்கு மொபைலின் ஹார்டுவேர், மென்பொருள் ஆகியவை சிறந்ததாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அதற்கு ஏற்ற வகையில் ஒன்ப்ளஸ் 7 புரோ வடிவமைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

நாட்ச் கிடையாது, bezel கிடையாது

 

ஒன்ப்ளஸ்

கடந்த முறை வெளியான ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருந்த வாட்டர் டிராப் நாட்ச்சை ஒன்ப்ளஸ் 7 புரோவில் பார்க்க முடியாது. தற்போது ஒன்ப்ளஸ் 7 சீரிஸ்க்காக No bezel, No notch என்றே விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் முழுவதுமே டிஸ்ப்ளேதான் இருக்கப்போகிறது. அதை தற்போது வெளியாகியிருக்கும் போட்டோக்கள் அனைத்துமே உறுதி செய்திருக்கின்றன. அதே நேரம் ஒன்ப்ளஸ் 7 வாட்டர் டிராப் நாட்ச்சே இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் இந்த முறை Curved OLED Display மொபைலில் இடம் பெறப்போகிறது. மொபைல் டிஸ்ப்ளேக்களை ஆராய்ந்து அதன் தரத்தைச் சொல்லும் Display Mate என்ற அமைப்பு இந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்ப்ளேவுக்கு  A+ என்ற ரேட்டிங்கைக் கொடுத்திருக்கிறது. இது அந்த அமைப்பு வழங்கும் அதிகபட்ச ரேட்டிங்காக இருக்கிறது. 

முன்புறம் பாப் அப் கேமரா, பின்புறம் டிரிபிள் கேமரா

Oneplus 7 Pro

முன்புறம் முழுவதுமே டிஸ்ப்ளேவுக்குத்தான் என முடிவாகிவிட்டதால் முன்னால் இருக்கும் கேமரா பாப்அப் முறையில் கொடுக்கப்படவுள்ளது. அதே நேரம் பின்புறமாக மூன்று கேமராக்கள் கொடுக்கப்படவுள்ளன. அதில் முதலாவதாக இருக்கும் கேமரா 48MP திறன் கொண்டது. இரண்டாவதாகத் தூரத்தில் இருக்கும் பொருள்களை எளிதாக ஜூம் செய்யும் வகையில் 8MP 3X Zoom டெலிபோட்டோ கேமராவும் மூன்றாவதாக 117° பரப்பளவுக்குக் கவர் செய்யும் 16MP வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்ட கேமராவும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இதுவரை வெளியானதிலேயே அதிக விலை ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனா?

Oneplus 7 Pro

ஒன்ப்ளஸ் 7, 7 புரோ மற்றும் ஒன்ப்ளஸ் 7 புரோ 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் வரும் 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். இவற்றில் Snapdragon 855 புராஸசர் பயன்படுத்தப்படவுள்ளது. 6GB RAM/128GB மற்றும் 8GB/12GB - 256GB இன்டர்னல் மெமரி ஆகிய வேரியன்ட்கள் வெளியிடப்படவுள்ளன. மேலும் இதுவரை வெளியான ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 50,000 ரூபாய்க்குக் கீழ்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை ஒன்ப்ளஸ் 7 புரோ ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமாக அல்லது அதற்கு நெருக்கமான விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் இதுவரை மிட்ரேன்ஜ் பட்ஜெட்டில் இருந்த ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ப்ரீமியம் பட்ஜெட்டுக்கு மாறும் வாய்ப்புகள் உண்டு. இதுவரை ஒன்ப்ளஸ் வெளியிட்ட எந்த ஸ்மார்ட்போன்களும் விற்பனையில் சொதப்பியதில்லை இந்த முறையும் அதைத் தக்கவைக்க முயற்சி செய்யுமா ஒன்ப்ளஸ்?


டிரெண்டிங் @ விகடன்