`100 பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செஞ்சா ஒரு ஸ்பீக்கர் செய்யலாம்!'- ஒரு `வாவ்’ ஐடியா | These youngsters made Bluetooth speaker via 100 recycled plastic bags... Read how!

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (08/05/2019)

கடைசி தொடர்பு:14:00 (08/05/2019)

`100 பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செஞ்சா ஒரு ஸ்பீக்கர் செய்யலாம்!'- ஒரு `வாவ்’ ஐடியா

பிளாஸ்டிக் கழிவுகள் பூமியின் மிகப்பெரிய பிரச்னை என்பது நமக்குத் தெரியும். இந்த பிளாஸ்டிக் குப்பைகளில் 9 சதவிகிதத்தை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும். இந்தக் கழிவுகளை தீயிட்டு எரிக்கும் செயல், பசுமையக வாயுக்கள் அதிகரிக்கவும், புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது. இதைக் குறைக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. முதற்கட்டமாகப் பல்வேறு மாநில அரசாங்கங்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன.

பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஸ்பீக்கர்

இருப்பினும் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்துகொண்டுதான் வருகிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க நிறைய இளைஞர்கள் வித்தியாசமான ஐடியாக்களுடன், பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் தற்போது லண்டனைச் சேர்ந்த டாம் மேட்ஸ், பவன் சுன்யா, ரிஷி குப்தா ஆகிய இளைஞர்கள் பிளாஸ்டிக் பைகளைச் சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து அதை புளூடூத் ஸ்பீக்கர்களாக மாற்றி விற்பனை செய்துவருகிறார்கள்.

கழிவுகள்

அதாவது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் எதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து 2017-ம் ஆண்டு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை கோமி (Gomi) என்ற பெயரில் தொடங்கி குப்பைகளிலிருந்து பயனுள்ள பொருள்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். பின்னர் அதற்கான பிளான்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் சமர்ப்பித்து நிதி உதவி பெற்று அதன் மூலம்  தேவையில்லாத குப்பை என வீசப்படும் பிளாஸ்டிக் பைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளை (பைகளை) சேகரித்து மறுசுழற்சி செய்து புளூடூத் ஸ்பீக்கர் தயாரித்து அசத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்பீக்கர்

ஒவ்வொரு ஸ்பீக்கரும் 100 பிளாஸ்டிக் பைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. அவை முதலில் உருக்கப்பட்டு, ஒரு `பளிங்கு மாவை' போல் உருண்டையாகப் பிணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உருண்டை உயர்அழுத்தத்திறன் கொண்ட அச்சுகளுக்கிடையே வைக்கப்பட்டு ஸ்பீக்கர் வடிவில் மாற்றப்படுகிறது. பின்னர் ஸ்பீக்கர் மற்றும் மின்னணு உபகரணங்களைப் பொருத்திப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புளூடூத் ஸ்பீக்கருக்கு தற்போது இணையம் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்த இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.