`45 கி.மீட்டருக்கு யாரும் தப்பிக்கமுடியாது!' சீனாவின் புதிய `ரேடார்' கேமரா | China's new camera technology can identify objects from 45 kms away

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (13/05/2019)

கடைசி தொடர்பு:16:05 (13/05/2019)

`45 கி.மீட்டருக்கு யாரும் தப்பிக்கமுடியாது!' சீனாவின் புதிய `ரேடார்' கேமரா

இந்த கேமரா மூலமாக 45 கி.மீ தூரத்திலிருக்கும் பொருளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியும். இதை சீனா அதன் கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தக்கூடும்.

`45 கி.மீட்டருக்கு யாரும் தப்பிக்கமுடியாது!' சீனாவின் புதிய `ரேடார்' கேமரா

ண்காணிப்புக் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை எல்லாம் பார்க்கும்போது பலருக்கும் தோன்றும் கேள்வி, 'இது ஏன் தெளிவில்லாமல் இருக்கிறது?' என்பதாகத்தான் இருக்கும். இன்று பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவற்றின் உதவியுடன் சம்பவங்களின்போது என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் கண்காணிப்புக் கேமராக்களில் எடுக்கப்படும் காட்சிகள் தெளிவில்லாமல் இருப்பது, படம் பிடிக்கும் பரப்பளவு குறைவு எனச் சில குறைபாடுகளும் இதில் இருக்கின்றன. ஆனால் தற்போது சீனாவில் ஒரு கண்காணிப்பு கேமரா தற்போது இருப்பவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

45 கி.மீ தொலைவில் இருந்தாலும் படம் பிடிக்கும்

CCTV

மாதிரி படம் 

ஷாங்காய் நகரில் இருக்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஷெங்- பிங் லீ மற்றும் அவரது குழுவினர்தான் இந்த கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கேமரா மூலமாகக் கிட்டத்தட்ட 45 கி.மீ தூரத்தில் இருக்கும் பொருள்களைக் கூடச் சரியாக அடையாளம் கண்டறிய முடியும். சராசரியான கண்காணிப்புக் கேமராக்களின் அளவே இருக்கும் இது அவ்வளவு தூரத்திலிருக்கும் 23 இன்ச் அளவு இருக்கும் பொருள்களைக் கூடச் சரியாக அடையாளம் காட்டும் திறன் கொண்டது. இதை இவ்வளவு திறன் அதிகமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காக லேசர் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட இது ஒரு ரேடாரில் இருக்கும் தொழில்நுட்பத்தைப் போன்றதுதான். ரேடாரில் ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படும் அதேபோல இதில் லேசர் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கேமராவிலிருந்து வெளிப்படும் லேசர் கற்றைகள் எதிரே இருக்கும் பொருளின் மீது பட்டு எதிரொலித்துத் திரும்பி வரும் ஃபோட்டான்களை உள் வாங்கி பொருள்களை அடையாளம் கண்டு கொள்கிறது. மேலும் இதிலுள்ள AI தொழில்நுட்பம் குறிப்பிட்ட பொருளிலிருந்து வரும் ஃபோட்டான்களை மட்டும் தனியே பிரித்து எடுக்கிறது. மற்ற இடங்களிலிருந்து வருபவற்றைத் தவிர்த்துவிடும் என்பதால் துல்லியமாக அடையாளப்படுத்த முடியும்.

கேமரா

1550 நானோ மீட்டர் அளவுள்ள லேசர் கற்றைகளே இதிலிருந்து வெளியாகும் என்பதால் மனிதர்களின் கண்களுக்கும் பாதிப்பிருக்காது. சீனாவில் காற்றில் மாசு அதிகம் என்பதால் அதிகாலை நேரங்களில் மூடுபனி இருக்கும், சாதாரண நேரங்களில் கூட காற்றின் அடர்த்தி அதிகமாகவே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சாதாரண கேமராக்களால் தெளிவாகப் படம் பிடிக்க முடியாது. ஆனால் இந்தப் புதிய கேமரா அது போன்ற சூழ்நிலைகளிலும் கூட சிறப்பாகச் செயல்படும். சாதாரண கேமராக்கள் 2D போட்டோக்களை மட்டுமே உருவாக்கும் ஆனால் இதில் படம் பிடிக்கும் பொருள்களின் முப்பரிமாண வடிவத்தைக் கூட உருவாக்க முடியும். இதன் விலையும் குறைவு என்பதால் இதைத் தயாரிக்க குறைவாகவே செலவாகும். ராணுவப் பயன்பாடு, ட்ரோன்கள், மற்றும் ரிமோட் சென்ஸிங் ஆகியவற்றுக்கு இந்தப் புதிய கேமரா உதவும். இதைத் தவிர்த்து சீனாவுக்கு இது போன்ற அதிக சக்தி வாய்ந்த கேமராக்கள் வேறு ஒரு விஷயத்துக்காகவும் தேவைப்படுகின்றன.

சீன அரசின் கண்களிலிருந்து யாரும் தப்பமுடியாது!

சீனா

உலகில் பொது மக்களைத் தனது கண்காணிப்பில் வைத்திருக்கும் நாடுகளை பட்டியலிட்டால் அதில் சீனாதான் முதலிடத்தில் இருக்கும். திரைக்கும் பின்னால் இருக்கும் இணையம் மட்டுமல்ல பொது இடம் வரை அரசின் கண்கள் மக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. மக்களைக் கண்காணிக்கும் நோக்கில் உலகின் மிகப்பெரிய கண்காணிப்புக் கேமரா அமைப்பை சில வருடங்களுக்கு முன்னால் நிறுவத் தொடங்கியது சீனா. இது மக்களின் தனியுரிமையைப் பற்றிய கேள்வியை எழுப்பினாலும் அதற்கெல்லாம் அரசு கவலைப்பட்டது போலத் தெரியவில்லை. சீனா முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறைந்தே காணப்படுகின்றன. பொது இடங்களில் கூடும் மக்கள் அனைவருமே AI மூலமாகக் கண்காணிப்புக்கு உள்ளாகின்றார்கள். அந்தக் கட்டமைப்பை வலுப்படுத்த இதுபோன்ற கேமராக்கள் உதவலாம்.


டிரெண்டிங் @ விகடன்