``ஆமா... ஆப்பிளை ஏமாத்திதான் 6.5 கோடி சம்பாதிச்சேன்!”- உண்மையை ஒப்புக்கொண்ட மெகா திருடன் | Chinese young man confessed that he cheated apple

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (24/05/2019)

கடைசி தொடர்பு:12:15 (24/05/2019)

``ஆமா... ஆப்பிளை ஏமாத்திதான் 6.5 கோடி சம்பாதிச்சேன்!”- உண்மையை ஒப்புக்கொண்ட மெகா திருடன்

ஆப்பிள் நிறுவனம்

``ஆப்பிளை ஏமாற்றவே முடியாது. இது ஒண்ணும் ஆண்ட்ராய்டு இல்லப்பா” - ஆப்பிள் ரசிகர்கள் அடிக்கடி சொல்லும் பன்ச் டயலாக் இது. ஆனால், ஒருவர் ஆப்பிளை ஏமாற்றி 3000 போலி மொபைல்களைக் கொடுத்து 1500 புதிய மொபைல்களை வாங்கியிருக்கிறார். இதன் மூலம் ஆப்பிளுக்கு 8,95,000 அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டிக்கிறது. இந்திய ரூபாயில் ஏறத்தாழ 6.5 கோடி ரூபாய். 

ஜியாங் என்ற இந்த 30 வயது இளைஞர் சீனாவைச் சேர்ந்தவர். அமெரிக்காவிலிருக்கும் ஒரேகான் மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஆப்பிளை ஏமாற்றிய கதையே சுவாரஸ்யமானது. ஹாங்காங்கில் இருக்கும் நண்பர் மூலம் போலி ஆப்பிள் மொபைல்கள் இவருக்கு வரும். அவை ஆன் ஆகவே ஆகாது. அதைக் கொண்டு போய் ஆப்பிளிடம் நேரிடையாகவே தபால் மூலமோ அனுப்புவார். ஆப்பிளின் வாரன்ட்டி படி என்ன பிரச்னை என ஆராயும் முன்னரே இவருக்கு மாற்று ஆப்பிள் மொபைல் கிடைத்துவிடும். இப்படியே 3000 போலி மொபைல்களைக் கொடுத்து அதற்குப் பதிலாக 1500 ஒரிஜினல் ஆப்பிள் மொபைல்களைப் பெற்றிருக்கிறார். அவற்றை மீண்டும் ஹாங்காங்குக்கு அனுப்பினால் அவர் நண்பர் அதை விற்றுவிடுவார். அந்தப் பணம் ஜியாங்கின் அம்மாவிடம் தரப்படும். அவர் அதை வங்கியில் போட்டு, அமெரிக்காவிலிருக்கும் மகனும் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடுவார். 

2017ல் ஆப்பிள் உஷாரானது. ஒரே முகவரியிலிருந்து நூற்றுக்கணக்கான வாரன்ட்டி கிளைம் வந்ததும் அந்த முகவரிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. ஜியாங் அதைக் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஜியாங் மாட்டிக்கொண்டார். தான் செய்த தவற்றை ஒப்புக்கொண்டார். அவருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க