`100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற முதல் யூடியூப் சேனல்' - உலக சாதனை படைத்த T-Series | T-Series become a world most subscribed youtube channel

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (30/05/2019)

கடைசி தொடர்பு:07:15 (30/05/2019)

`100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற முதல் யூடியூப் சேனல்' - உலக சாதனை படைத்த T-Series

T-Series யூடியூப்

இந்தியாவைச் சேர்ந்த யூடியூப் சேனலான T-Series -க்கும் ஸ்வீடனைச் சேர்ந்த PewDiePie என்ற சேனலுக்கும் இடையே நடந்து வந்த கடுமையான போட்டி ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றுவிட்டதாக நேற்றைக்கு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது T-Series. ஒரு யூடியூப் சேனல் இவ்வளவு சப்ஸ்கிரைபர்களைப் பெறுவது இதுவே முதல் முறை. அதே வேளையில் போட்டியாளராகக் கருதப்பட்ட PewDiePie தற்போது வரை 96 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை மட்டுமே பெற்றிருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக PewDiePie சேனல்தான் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனலாக இருந்து வந்தது. அதைக் கடந்த மார்ச் மாதத்தில் முதல் முறையாக முறியடித்தது T-Series. இரண்டு சேனல்களுக்கும் இடையேயான போட்டி என்பது 2018 அக்டோபரில் தொடங்கியது. 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை யார் முதலில் அடைவார்கள் என்பதுதான் போட்டியின் இலக்காக இருந்து வந்தது. தொடக்கத்தில் விளையாட்டாக கருதப்பட்ட இந்தப் போட்டி நாள்கள் செல்லச் செல்ல கடுமையானதாக மாறியது.

PewDiePie

ஒரு கட்டத்தில் இந்தியர்களையும், T-Series சேனலையும் அவமதிக்கும் வகையில் வரிகளைக் கொண்ட வீடியோக்கள் PewDiePie சேனலில் அப்லோட் செய்யப்பட்டன. அந்த இரண்டு வீடியோக்களையும் நீக்க யூடியூப் நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மே மாதம் 21-ம் தேதி T-Series இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்பதையும், PewDiePie 100 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை ஜூன் 2-ம் தேதி எட்டும் என Social Blade இணையதளம் கணித்திருந்தது. ஆனால், சில நாள்கள் தாமதம் ஆனாலும் தற்போது T-Series உலக சாதனை படைத்திருக்கிறது.