உலக நாடுகளே பார்த்து பயப்படும் வாவே.. உண்மையிலேயே சீனாவுக்காக உளவு பார்க்கிறதா? | Is Huawei spying world countries for china?

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (02/06/2019)

கடைசி தொடர்பு:17:15 (02/06/2019)

உலக நாடுகளே பார்த்து பயப்படும் வாவே.. உண்மையிலேயே சீனாவுக்காக உளவு பார்க்கிறதா?

வாவே மொபைல்களை மட்டும் தயாரிக்கவில்லை. அதனிடம் மொபைல் புராஸசர்கள், நெட்வொர்க் கருவிகள் உட்பட பல்வேறு தயாரிப்புகள் இருக்கின்றன. அதில் மொபைல் நெட்வொர்க்குகளைக் கட்டமைக்க உதவும் உபகரணங்கள் மூலமாக உளவு பார்க்கிறது என்பது வாவே மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

உலக நாடுகளே பார்த்து பயப்படும் வாவே.. உண்மையிலேயே சீனாவுக்காக உளவு பார்க்கிறதா?

``ஆம் சில உளவாளிகள் இருக்கலாம். ஆனால் அப்படி உளவு பார்க்க மலேசியாவில் என்ன இருக்கிறது. நாங்கள் ஒரு திறந்த புத்தகம்" இப்படிச் சொன்னவர் மலேசியாவின் பிரதமர் மஹாதிர் பின் முகமது. தொழில்நுட்ப உலகில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் வாவே விவகாரம் தொடர்பாக அவரது கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரது கருத்தில் பலருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. வணிகம் தொடர்பான பிரச்னையில் உளவு என்ற வார்த்தையை ஏன் அவர் பயன்படுத்த வேண்டும் ?

வாவே-வைப் பார்த்து பயப்படும் உலக நாடுகள்

சீன நிறுவனமான வாவே உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வந்த நிலையில்தான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வணிக ரீதியான யுத்தம் தொடங்கியது. ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு உலக நாடுகளுக்கும் வாவேவுக்கும் இடையே வேறு விதமான பிரச்னைகள் தொடங்கிவிட்டன. வாவே மொபைல்களை மட்டும் தயாரிக்கவில்லை. அதனிடம் மொபைல் புராசஸர்கள், நெட்வொர்க் கருவிகள் உட்பட பல்வேறு தயாரிப்புகள் இருக்கின்றன. அதில் மொபைல் நெட்வொர்க்குகளைக் கட்டமைக்க உதவும் உபகரணங்கள் மூலமாக உளவு பார்க்கிறது என்பது வாவே மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதுவும் சீன அரசுக்காகத்தான் வாவே உளவு பார்க்கும் வேலையைச் செய்கிறது என்கின்றன சில நாடுகள். சீனாவில் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு முழுவதுமாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கே உள்நாட்டில் உருவாக்கப்படும் கருவிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்படும். உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வாவே போனைத்தான் பயன்படுத்த வேண்டும் ஐபோனைத் தவிர்க்க வேண்டும் என்று சீன அரசு கட்டளையிட்டிருக்கிறது. ஆனால், மற்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் அப்படிக் கிடையாது. சீனாவின் தயாரிப்புகள் விலை குறைவானவை என்பதால் அதன் பயன்பாடும் அதிகம். உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், மொபைல் நிறுவனங்கள் ஆகியவை வாவேவின் உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அதில் அரசு நிறுவனங்களும் அடக்கம். இந்த உபகரணங்கள் மூலமாக நாட்டின் ரகசியங்களை சீனா திருடக்கூடும் என்று சில உளவு அமைப்புகள் எச்சரிக்கை செய்திருந்தன. அதைத் தொடர்ந்து அமெரிக்கா அதன் ராணுவ அமைப்புகளில் வாவேவின் உபகரணங்களைப் பயன்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தடை விதித்துவிட்டது.

சீனா அமெரிக்கா

கடந்த வருடம் ஆஸ்திரேலியா 5G தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளை வாவேவிடமிருந்து வாங்க அந்நாட்டு மொபைல் நிறுவனங்களுக்குத் தடை விதித்திருக்கிறது. மேலும் ஜப்பான், கனடா, இங்கிலாந்து போன்ற முக்கியமான நாடுகளும் வாவேவுடனானா வணிகத் தொடர்பை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்திருக்கின்றன. உலக நாடுகளின் இந்தப் பயத்துக்குக் காரணம் வாவேவின் கருவிகள் மூலமாக சீனா உளவு பார்க்கலாம் என்பதுதான். அதை நிரூபிக்கும் வகையில் அவர்களிடம் சில வலிமையான ஆதாரங்களும் இருக்கின்றன. உலக நாடுகள் இப்படி இருக்க மலேசியா இந்தப் பிரச்னையை வேறு விதமாக அணுகியிருக்கிறது. அதனால்தான் தங்களிடம் எந்த ரகசியமும் இல்லை எனவே உளவு பார்த்தாலும் சிக்கல் இல்லை என்று  மஹாதிர் தெரிவித்திருக்கிறார். மேலும் வாவே நிறுவனத்துடன் எப்போதும் போல இணக்கமாகச் செயல்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். உண்மையில் அவர் தெரிவித்திருக்கும் கருத்து வாவேவுக்கானது மட்டுமல்ல. அதைப் பார்த்துப் பயப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கானது. உலக நாடுகளிடமிருந்து மறைக்கும் அளவுக்கு ஏதோ ஒரு ரகசியம் இருந்தால்தானே பயப்பட வேண்டும், இல்லையெனில் உளவு பார்த்தால் கூட பயமின்றி இருக்கலாமே என்பதுதான் அவர் மறைமுகமாகச் சொல்ல வரும் செய்தி. 

உளவு பார்க்கிறதா வாவே?

வாவே என்ன சொல்கிறது?

ஒருவேளை உண்மையாகவே சீனாவுக்காக வாவே நிறுவனம் உளவு பார்த்தால் கூட அதை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. அது மட்டுமல்ல எந்த நிறுவனமும் இப்படி ஒரு குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாது. வாவேவும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த விஷயத்தில் வாவே மீதான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக நிராகரிக்கவும் முடியவில்லை. ஏனெனில்  உளவு பார்த்தது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அதற்கான வழிகள் வாவேவின் உபகரணங்களில் இருந்தது பல முறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் இப்படிப் பயப்படுவதால் அரசுகளுடன் 'நாங்கள் உங்களை உளவு பார்க்க மாட்டோம்' என்ற ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளவும் வாவே முடிவு செய்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்