டார்க் மோடு, அப்டேட்டட் சிரி, அசத்தல் iOS 13... 'ஆஹா' சொல்ல வைத்த ஆப்பிள்! #WWDC19 | Apple introduces ios 13 beta... What's new?

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (05/06/2019)

கடைசி தொடர்பு:22:24 (05/06/2019)

டார்க் மோடு, அப்டேட்டட் சிரி, அசத்தல் iOS 13... 'ஆஹா' சொல்ல வைத்த ஆப்பிள்! #WWDC19

ஐஓஎஸ் 13 பீட்டா பதிப்பில் பல்வேறு புதிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஆப்பிள். கடந்த சில பதிப்புகளில் இல்லாத அளவுக்கு அதன் வடிவமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

டார்க் மோடு, அப்டேட்டட் சிரி, அசத்தல் iOS 13... 'ஆஹா' சொல்ல வைத்த ஆப்பிள்! #WWDC19

"இதெல்லாம் நாங்க பார்த்துப் பல வருஷம் ஆச்சுப்பா"... ஆப்பிள் இதற்கு முன்பு ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷனை அறிமுகப்படுத்தும்போது ஆண்ட்ராய்டுவாசிகளின் ரியாக்‌ஷன் அப்படித்தான் இருக்கும். கடந்த சில வருடங்களாக ஐஓஎஸ் புதிய பதிப்பு பெரிய அளவு வரவேற்பைப் பெறவில்லை. இருப்பதை வைத்தே சமாளித்துக்கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை அப்படியில்லை. இதில் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதுவும் ஆப்பிளால் மட்டுமே முடியும் என்ற விஷயங்கள் ஐஓஎஸ் 13-ல் அதிகம் இருக்கின்றன.

Dark mode

ஆப்பிள் Dark mode

வெள்ளை வெளேரென இருக்கும் டிஸ்ப்ளேவை நீண்ட காலமாகப் பார்த்து மக்கள் வெறுப்படைந்துவிட்டார்கள். அதே போல டிஸ்ப்ளேவை அதிக நேரம் பார்த்துக்கொண்டிருப்பதால் அதிலிருந்து வெளிப்படும் ஒளி கண்களையும் பாதித்து வந்தது. அதுபோன்ற சிக்கல்களுக்கான ஒரு சிறிய தீர்வுதான் இந்த டார்க் மோடு. இதன் மூலமாக டயல் பேடு, செட்டிங்ஸ், நோட்டிபிஃகேஷன் என ஒரு போனில் இருக்கும் அனைத்தையும் டார்க்காக மாற்ற முடியும். ஆண்ட்ராய்டில் இது ஏற்கெனவே வந்துவிட்ட ஒரு வசதிதான். இப்போது பகுதியாகக் கிடைத்து வந்தாலும் வரும் Q பதிப்பில் டார்க் மோடு முழுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

QuickPath

QuickPath

ஆப்பிள் புதிய வசதிகளைக் கொடுக்கிறதோ இல்லையோ ஆண்ட்ராய்டில் இருக்கும் வசதிகளைக் காப்பியடித்து அதற்கு புதிய பெயர்களை வைத்துவிடும். அதுபோலத்தான் இதுவும். ஆண்ட்ராய்டில் ஸ்வைப் கீபோர்ட் ஆப்கள் பிரபலம். ஒரு எழுத்தை டைப் செய்யும்போது தனித்தனியாகத் தொடாமல், தொடர்ச்சியாக அதை ஸ்வைப் செய்யலாம். இறுதியாக அந்த வார்த்தைகள் ஒன்றிணைந்து வாக்கியமாக மாறும். அந்த ஸ்வைப் கீபோர்டுக்கு QuickPath எனப் பெயர் வைத்திருக்கிறது ஆப்பிள். இது ஐஓஎஸ்ஸில் இன்பில்ட்டாகவே கிடைக்கும்.

Apple Maps

Apple Maps

ஆப்பிள் நீண்ட காலமாகச் சொதப்பிவரும் விஷயங்களில் ஒன்று மேப். எவ்வளவுதான் முயன்றாலும் கூகுள் மேப் அளவுக்குச் சிறப்பானதாகக் கொடுக்க ஆப்பிளால் முடியவில்லை. ஆனால், இந்த முறை மேப் ஆப்பை முழுவதுமாக மாற்றியமைத்திருக்கிறது. மேலும் கூகுள் மேப்பில் இருக்கும் ஸ்ட்ரீட் வியூ போன்ற வசதியையும் இதில் கொடுத்திருக்கிறது. இந்த ஆப் அமெரிக்காவுக்கு இந்த வருடமும் மற்ற இடங்களுக்கு அடுத்த வருடமும் கொடுக்கப்படவுள்ளது.

Privacy

Privacy

கூகுளுடன் ஒப்பிடும்போது ஆப்பிள் தனியுரிமை விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த முறை இருப்பிடத்தை ட்ராக்கிங் செய்யும் ஆப்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது. அதன்படி இனிமேல் ஒரு முறை மட்டுமே ஆப்களுக்கு இருப்பிடம் பற்றிய தகவல் பரிமாறப்படும். அதேபோல கூடிய விரைவில் தேர்டு பார்ட்டி ஆப்கள் வைபை, மற்றும் ப்ளுடூத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியாது. மேலும் இருப்பதிலேயே மிக முக்கியமானது Sign in with Apple என்ற வசதிதான். இதன் மூலமாகத் தனிப்பட்ட தகவல்களைக் கொடுக்காமலேயே ஃபேஸ்புக் மற்றும் கூகுள் சேவைகளைப் பயன்படுத்த முடியும். மேலும், எந்தத் தகவல்களை ஆப்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்த முடியும்.

FIND MY

ஐபோனில் இருக்கும் Find My Friends மற்றும் Find My iPhone apps என்ற இரண்டு ஆப்களும் நீக்கப்பட்டு FIND MY ஆப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாகத் தொலைந்துபோன உரிமையாளரின் ஐபோனை ட்ராக் செய்வது மட்டுமன்றி நண்பர்கள், உறவினர்களின் ஐபோனையும் ட்ராக் செய்யலாம். ஒருவேளை ஐபோன் ஆஃப்லைனுக்கு போனால் அருகில் இருக்கும் மற்ற ஐபோன்களை ப்ளூடூத் மூலமாகத் தொடர்புகொள்ளும் வகையில் இது செயல்படும்.

அப்டேட்டட் சிரி

ஆப்பிளால் மட்டுமே செய்ய முடியும் ஒரு வசதியில் அதன் வாய்ஸ் அசிஸ்டன்ட்டான 'சிரி'யும் ஒன்று. இப்போது இருக்கும் மற்ற வாய்ஸ் அசிஸ்டன்ட்களுடன் ஒப்பிடும்போது இது பல வகைகளில் மேம்பட்டிருக்கிறது. அதை இப்போது மேலும் அப்டேட் செய்திருக்கிறது ஆப்பிள். இதன் மூலமாக சிரியின் ஒலி மனிதர்கள் பேசுவதைப்போல இயல்பானதா இருக்கும்படி மாற்றப்பட்டுள்ளது. மேலும், முதலில் ஷார்ட்கட்களை உருவாக்குவது சிக்கலானதாக இருந்தது. அதுவும் இப்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டளையிடும்போது ஆட்டோமேட்டிக்காக சில வேலைகளைச் செய்யும்படி டெம்ப்ளேட்களை 'சிரி'க்காக உருவாக்க முடியும்.

iPad OS

ஆப்பிள் வாட்ச்சுக்காக இருந்துவந்த WatchOS இப்போது தனியாகச் செயல்படும். முன்னர் இதை அப்டேட் செய்ய ஐபோன் தேவைப்படும், ஆனால், இப்போது தனியாகவே அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்டேட்டில் வாய்ஸ் மெமோ, ஆடியோபுக்ஸ் மற்றும் கால்குலேட்டர் ஆகிய ஆப்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஐபாட்களுக்காக iPad OS புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது iOS-ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தாலும் ஐபாட்டுக்கென பல புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்டு 18 வருடங்களுக்குப் பிறகு iTunes நீக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் ஒன்றுதான். கடந்த பல வருடங்களில் மாறாத ஒரு விஷயமாக அது இருந்து வந்தது. iTunes நீக்கப்பட்டு விட்டாலும்கூட  Apple Music, Apple TV மற்றும் Apple Podcasts ஆகியவை தனியாகக் கொடுக்கப்படும். புதிய மேக் புரோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் நான்கு லட்ச ரூபாய்கள். 1.5 டெராபைட்கள் அளவுக்கு நினைவகமும் இதில் இருக்கிறது. மேலும், வீடியோ எடிட்டிங்கை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் Afterburner என்ற புதிய அமைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது நொடிக்கு ஆறு மில்லியன் பிக்ஸல்களை புராசஸ் செய்யும் திறன் படைத்தது.

இப்போது வெளியிடப்பட்டிருப்பது  ஐஓஎஸ் 13-னின் பீட்டா வெர்ஷன்தான். இறுதிப் பதிப்பு வரும் செப்டம்பரில் வெளியாகும். அப்போது கூடுதலாகச் சில வசதிகள் சேர்க்கப்படும் வாய்ப்புகளும் உண்டு. இந்த ஐஓஎஸ் 13 அப்டேட் 6S மற்றும் அதற்குப் பின் வெளியான ஐபோன்களுக்கு மட்டுமே கிடைக்கும் என ஆப்பிள் தெரிவித்திருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்