தொடரும் ஆபாச சர்ச்சை... நெகட்டிவ் இமேஜை மாற்ற டிக்டாக்கின் திட்டம் என்ன? #VikatanExclusive | Tiktok's future plans in India

வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (12/06/2019)

கடைசி தொடர்பு:09:32 (12/06/2019)

தொடரும் ஆபாச சர்ச்சை... நெகட்டிவ் இமேஜை மாற்ற டிக்டாக்கின் திட்டம் என்ன? #VikatanExclusive

``பிற சமூகஊடகங்களோட எங்களை ஒப்பிடவே நாங்க விரும்பலை. காரணம், டிக்டாக் ஒரு சமூக ஊடகம் கிடையாது. கிரியேட்டர்களுக்கான ஓர் இணைய சமூகம். இங்க ஒரு யூசர் தன்னோட கருத்துகளை வெளிப்படுத்த மட்டும் வரல. எங்களோட டூல்ஸ பயன்படுத்தி புதுசா ஒரு விஷயத்தை கிரியேட் பண்ண வர்றார்."

தொடரும் ஆபாச சர்ச்சை... நெகட்டிவ் இமேஜை மாற்ற டிக்டாக்கின் திட்டம் என்ன? #VikatanExclusive

Creative Economy... கடந்த சில வருடங்களாகப் பொருளாதாரம் சார்ந்த விவாதங்களில் அதிகம் இடம்பெறும் ஓர் அம்சம். உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தகமாகட்டும்; அல்லது ஒரு தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியாகட்டும். இரண்டிலும் இந்த கிரியேட்டிவ் எகானமியின் பங்கு நிச்சயம் இல்லாமல் இருக்காது. இசை, சினிமா, ஓவியம் போன்ற கலைத்துறை சார்ந்த தொழில்களை Creative Industry என்பார்களே? அதேபோல அதன்மூலம் நடக்கும் வர்த்தகத்தை, அதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைத்தான் `Creative Economy' என்கிறார்கள். இது வெறும் பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மென்பொருள் உருவாக்கம், வடிவமைப்பு, தொழில்நுட்ப ஆராய்ச்சி, டிஜிட்டல் ஊடகங்கள் எனப் பலவும் இதற்குள்தான் அடங்கும். தற்போது அதிகரித்துவரும் தேவையால் உலகளவில் அனைத்து நாடுகளுமே தன்னுடைய கிரியேட்டிவ் எகானாமியை வலுப்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்த விஷயத்தில் தற்போது முன்னணியில் இருப்பது சீனா.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐ.நா.வின் தொழில்வளர்ச்சி கூட்டமைப்பு வெளியிட்ட `Creative Economy Outlook' என்ற ஆய்வறிக்கையில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. சீன அரசு, கடந்த 30 வருடங்களாக கிரியேட்டிவ் எகானாமியில் காட்டும் ஆர்வமே இதற்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. எப்படி சினிமா, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவுகளில் அமெரிக்கா உலகளவில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதைவிடவும் பலமடங்கு வேகமாக வளர்ந்துநிற்கிறது சீனா. அப்படி அந்த நாட்டின் கிரியேட்டிவ் எகானாமியில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம் பைட் டான்ஸ் (ByteDance). இன்றைக்கு நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் டிக்டாக், ஹலோ போன்ற சேவைகள், இந்த நிறுவனத்தினுடையதுதான். உலகின் தற்போதைய Most Valuable Startup-ம் இதுதான். முதலில் சீனாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த பைட் டான்ஸ், தற்போது வெளிநாடுகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக வேரூன்றி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் டிக்டாக்கிற்கு நாம் கொடுத்த வரவேற்பால், அடுத்தடுத்து புதிய புராடக்ட்களை இங்கே களமிறக்கி, தொடர்ந்து கல்லா கட்ட திட்டமிட்டிருக்கிறது பைட் டான்ஸ். இப்படி பிரமாண்ட திட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பைட் டான்ஸிற்கு கடந்த ஏப்ரல் மாதம் திடீரென விழுந்தது ஓர் அடி.

பைட் டான்ஸ்

ஆபாசத்தை ஊக்குவிப்பதாகச் சொல்லி, டிக்டாக் ஆப்பை முழுமையாகத் தடைசெய்ய சொன்னது சென்னை உயர்நீதிமன்றம். இதைத்தொடர்ந்து சில நாள்களில் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அந்தச் சமயத்தில் டிக்டாக்கின் மீது விழுந்த எதிர்மறையான பிம்பம் அந்த நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவு. அதை மாற்றுவதற்காகவும், இந்தியாவின் கிரியேட்டிவ் எகானமி வளர்ச்சியைக் கொண்டாடுவதற்காகவும் அண்மையில் 'டிக்டாக் கிரியேட்டர்ஸ் லேப்' என்ற பெயரில் புது நிகழ்ச்சி ஒன்றை மும்பையில் நடத்திமுடித்திருக்கிறது அந்நிறுவனம். நாடு முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட டிக்டாக் கிரியேட்டர்கள் இதில் கலந்துகொண்டனர். மியூசிக்கலி நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2018-ல்தான் டிக்டாக் உதயமானது. அதன்படி பார்த்தால் டிக்டாக்கிற்கு இன்னும் ஒருவயதுகூட முடியவில்லை. ஆனால், இந்தியாவின் ஷார்ட் வீடியோ பிளாட்ஃபார்மில் போட்டியே இன்றி, பிரமாண்டமாக வளர்ந்துநிற்கிறது டிக்டாக்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டிக்டாக் இந்தியாவின் விற்பனைப் பிரிவு இயக்குநர் சச்சின் ஷர்மா, ``டிக்டாக் என்றாலே லிப் சிங்கிங் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்கள்தான் என்ற பிம்பம் இருக்கிறது. அதைத் தாண்டியும் இங்கே நிறைய கிரியேட்டிவ்வான விஷயங்கள் அப்லோடு செய்யப்படுகின்றன. நகைச்சுவை, விளையாட்டு, ஃபேஷன், கல்வி எனப் பல டிரெண்டிங்கான விஷயங்கள் டிக்டாக்கில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ஊக்குவிப்பதும், இந்தியாவின் கிரியேட்டிவ் எகானாமியில் பங்கு வகிப்பதும்தான் எங்களின் விருப்பம்" என்றார். 

இதைத் தொடர்ந்து சச்சின் ஷர்மாவிடம் விகடனுக்காக பிரத்யேகமாக சில கேள்விகளை முன்வைத்தோம். அந்த உரையாடலிலிருந்து...

டிக்டாக் இந்தியாவின் விற்பனைப் பிரிவு இயக்குநர் சச்சின் ஷர்மா

``அதிகரிக்கும் ஆப் டவுன்லோட்ஸ், வளர்ந்துட்டே போற யூசர்கள்ன்னு டிக்டாக்கின் வளர்ச்சி குறித்து நிறைய செய்திகள் வருகின்றன. ஆனா, ஆப் வருமானம், டிக்டாக்கின் லாபம் குறித்தெல்லாம் பாசிட்டிவான செய்திகள் எதுவும் இல்லையே? இந்த ஏரியாக்களில் டிக்டாக்கோட நிலை என்ன?"

``மிகக் குறுகிய காலத்தில் இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பேருக்கு மேல் யூசர்களை சம்பாதிச்சிருக்கோம். இவர்களுக்கான ஒரு பாதுகாப்பான பிளாட்ஃபார்மா டிக்டாக் இருக்கணும்றதுதான் எங்களோட முதல் நோக்கம். இதுவரைக்கும் அதில்தான் எங்களுடைய முழு கவனமும் இருந்தது. இப்போ அதைத் தாண்டி பிராண்ட் பார்ட்னர்ஷிப்களை உருவாக்குறதுல கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கோம். நிறைய புது விளம்பர வடிவங்களை முயற்சி செய்துட்டு வர்றோம். இந்தியாவின் முக்கியமான FMCG பிராண்ட்களோட பேசிட்டிருக்கோம். விரைவில் அவர்களோட இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா இந்த ஏரியாவிலும் வளர்ந்துட்டு வர்றோம்."

``ஒரு பிராண்டோட இமேஜ் ஒரு நிறுவனத்திற்கு ரொம்பவே முக்கியம். அண்மையில் நீதிமன்றத் தடையால் அந்த இமேஜ் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு. நிறுவனத்திற்கு இந்தத் தடை எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது?"

``அந்தத் தடை ரொம்பவும் வருத்தமான விஷயம். இருந்தாலும், கூடிய சீக்கிரமே தடை நீங்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி. வணிகரீதியா அந்த இடைக்காலத் தடை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆப் ஸ்டோர்களிலிருந்து டிக்டாக் தூக்கப்பட்டாலும் ஆப் தொடர்ந்து இயங்கிட்டுதானிருந்தது. இந்தச் சமயத்தில் பெரும்பாலானோர் சொன்ன விஷயம் எங்களுடைய ஆப் பாதுகாப்பானதாக இல்லைங்குறதுதான். ஆனால், அதை நாங்க முதலிலிருந்தே மறுத்துட்டு வர்றோம். ஒரு வீடியோ தவறாகவோ, ஆபாசமாகவோ இருந்தால் எந்த ஒரு யூசரும் அதை Flag செய்யவோ ரிப்போர்ட் செய்யவோ முடியும். அதைக் கண்காணிக்க தனிநபர்களைப் பணிக்கு வைத்திருக்கிறோம். இந்தியாவின் 15 மொழிகளில் அதற்காக ஆட்களை வைத்திருக்கிறோம். யூசர்களின் சைபர் பாதுகாப்புக்காகவும் நிறைய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துட்டு வர்றோம்."

Tiktok's Creator Lab 2019

``வணிகரீதியாக மட்டுமல்லாமல் இது உங்களின் கிரியேட்டர்கள் மேல கூட ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கே? உதாரணமாக ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோ Influencer-ராக இருக்கும் ஒருத்தர் மேல இருக்கும் பிம்பமும், டிக்டாக்ல அதிக ஃபாலோயர்ஸ் வச்சிருக்கிற ஒருத்தர்மேல இருக்குற பிம்பமும் வேற வேற. அங்க அவங்கமேல ஒரு Intellectual அல்லது Creative Persons-ன்ற மாதிரியான பிம்பம் இருக்கு. ஆனால், இங்க இவங்க மேல ஒருவிதமான எதிர்மறை பிம்பம்தான் இருக்கு..."

"உண்மைதான். ஆனால், அதை மாத்தணும்றதுதான் எங்களோட விருப்பம். உதாரணமான ஒருவர் டிக்டாக் பயன்படுத்துனா அவர் பார்க்கிற சில வீடியோக்கள் மட்டும்தான் சினிமா, நடனம்னு பொழுதுபோக்கு சார்ந்து இருக்கும். மீதி வீடியோக்கள் எல்லாமே விளையாட்டு, சமையல், பயணம், சுயமுன்னேற்றம்னு பல்வேறு விஷயங்கள் சார்ந்துதான் இருக்கும். இப்படி இன்னும் எத்தனையோ தலைப்புகளில் எங்களோட பயனாளர்கள் டிக்டாக் பண்ணிட்டிருக்காங்க. ஆனால், சினிமா சார்ந்த கன்டென்ட்களை மட்டுமே எல்லோரும் பார்க்குறதால உருவாகிறதுதான் அந்த எதிர்மறை பிம்பம். பிற சமூக ஊடகங்களோட எங்களை ஒப்பிடவே நாங்க விரும்பலை. காரணம், டிக்டாக் ஒரு சமூக ஊடகம் கிடையாது. கிரியேட்டர்களுக்கான ஓர் இணையச் சமூகம். இங்க ஒரு யூசர் தன்னோட கருத்துகளை வெளிப்படுத்த மட்டும் வரல. எங்களோட டூல்ஸப் பயன்படுத்தி புதுசா ஒரு விஷயத்தை கிரியேட் பண்ண வர்றார். அந்த கிரியேட்டர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதும், அவர்களை ஊக்குவிப்பதும்தான் எங்களோட வேலை."

``UGC பிளாட்ஃபார்ம்கள் எல்லோருக்குமே இருக்குற ஒரு சவால் காப்பிரைட் பிரச்னைகள். அதுவும் இசையை மட்டுமே பிரதானமா வச்சிருக்கும் டிக்டாக்கிற்கு அந்தப் பிரச்னைகள் இன்னுமே அதிகமா இருக்கணும். அதை டிக்டாக் எப்படிச் சமாளிக்கிறது?"

``எங்களோட பிளாட்ஃபார்மில் இருக்கும் பெரும்பாலான இசை வடிவங்களுக்கு, அதற்குரிய நிறுவனங்களுக்கு நாங்கள் பணம் செலுத்துகிறோம். நாங்களே நிறைய இசை நிறுவனங்களோட ஒப்பந்தமும் செய்திருக்கிறோம். பிரபல தயாரிப்பு நிறுவனங்கள், தங்களோட படம் வரும்போது எங்களோட இணைஞ்சிருக்காங்க. இதெல்லாம் தாண்டியும் சில சமயம் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து காப்பிரைட் பிரச்னைகள் வரும். அப்போதெல்லாம் அந்த நிறுவனங்கள் எங்களுக்கு ரிப்போர்ட் பண்ணிடுவாங்க. அதை நாங்க டிக்டாக்ல இருந்து தூக்கிடுவோம். அவ்வளவுதான்."

``இடைக்காலத் தடையின்போது பயனாளர்கள் பாதுகாப்புக்காக நிறைய விஷயங்கள் புதுசா செய்யப்போறதா சொல்லியிருந்தீங்க. அதெல்லாம் இப்போ எந்தக் கட்டத்துல இருக்கு?"

``டெக்னிக்கலா டிக்டாக்கின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடுகளும் இல்லை. தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடுதான் ஆப் இருக்கிறது. ஆனால், யூசர்களின் பயன்பாட்டில்தான் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதைத் தடுக்கவும் கமென்ட் ஃபில்டரிங், ஆப் டைமிங் கன்ட்ரோல்ன்னு புதுப்புது அம்சங்களைச் சேர்த்திருக்கோம். இதுதவிர தவறான வீடியோக்களை நீக்குவதற்காக டிக்டாக்கின் ஊழியர்களும் தொடர்ந்து கண்காணிச்சிட்டுதான் இருக்காங்க."

Tiktok Creator Lab

``இந்தியாவுக்காக அடுத்து என்ன திட்டங்கள் வெச்சிருக்கீங்க?"

``இப்போ இருக்குற யூசர்களோட ஆப் அனுபவத்தை மேம்படுத்துவது, புதுப்புது கன்டென்ட்களை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பை உண்டாக்கி தருவது, தொடர்ந்து அவர்களுக்கான சைபர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆகிய மூன்று விஷயங்கள்தான் எங்களோட இப்போதைய நோக்கம். அதற்கான பணிகளை அடுத்தடுத்து நிறைய செய்யவிருக்கோம்."

``ஸ்ட்ரீமிங்கில் யூடியூப் போல, ஷார்ட் வீடியோஸ்க்கு டிக்டாக்தான் என்ற நிலை வந்தாச்சு. ஆனால், இன்னமும் யூடியூப் போல கிரியேட்டர்களுக்கு நேரடி வருமானம் வருவதற்கான எந்த ஆப்ஷனும் டிக்டாக்ல இல்லையே?" 

``ஆமாம், இப்போது எங்களோட நோக்கமெல்லாம் டிக்டாக் கிரியேட்டர்களுக்கு உலகளவிலான ஒரு டிஜிட்டல் மேடையை உருவாக்கித் தருவது மட்டும்தான். அதனால்தான் அப்படி எந்தவொரு வசதியும் கொடுக்கல. இருந்தாலும்கூட எங்க கிரியேட்டர்ஸ்கூட எத்தனையோ பிராண்ட்கள் சேர்ந்து வேலை செஞ்சிட்டிருக்காங்க. அதன்மூலம் அவர்கள் சம்பாதிச்சிட்டுதான் இருக்காங்க."

``இன்ஸ்டாகிராமில் இருப்பது போல In app Shopping மாதிரியான ஆப்ஷன்களாவது கொண்டுவரலாமே? Influencers நேரடியா வருமானம் பெறுவதற்கான ஒரு வழியாகவாவது இருக்குமே?"  

``கண்டிப்பா. ஆனால், யோசிச்சு பாருங்க... டிக்டாக்கிற்கு இன்னும் ஒரு வயசு கூட முழுசா ஆகல. நாங்க போகவேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கு. அதனால எதிர்காலத்துல இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்கலாம்."

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்