வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (12/02/2016)

கடைசி தொடர்பு:16:25 (12/02/2016)

மகாமகப் பெருவிழாவிற்கு தமிழில் வழிகாட்டும் 'மகாமகம்' செயலி!

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பெருவிழா,  வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழில் வழிகாட்டுவதற்கென செயலி ஒன்றைத் தயார் செய்துள்ளனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இச்செயலி,  மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ செயலி ஆகும்.
 

பண்டைய காலம் முதல் இன்று வரை இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். மகாமக திருக்குளம் எவ்வாறு உருவானது, ஸ்தல வரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் செயலியில் இடம்பெற்றுள்ளது.

கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கோயில்களின் வரலாறு, திருவிழாக்கள், வழிபாட்டு நேரம், தொலைபேசி, அமைவிடம் உள்ளிட்டவை விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல்கள், திருக்கோயில்கள் வழிகாட்டியின் உதவியுடன் தொகுக்கப்பட்டிருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்காக, கோயிலுக்கே அமைந்துள்ள விடுதிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் இணையதள முகவரியோடு தரப்பட்டிருக்கிறது. விடுதிகளோடு, உணவகங்களின் பெயர்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

முக்கிய விழாக்கள் நடைபெறும் நேரங்களில், போக்குவரத்துதானே மிகவும் முக்கியம்? செயலியில் போக்குவரத்துக்காகவும் தனிப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துகளான ரயில், அரசுப் பேருந்துகள், விரைவுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றுக்கான வழித்தடமும், ரயில் பேருந்து பெயர்களும், எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தனிப் போக்குவரத்தை விரும்புவர்களுக்கு, கால்டாக்ஸி விவரங்கள் மற்றும் அவற்றின் தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
 

விழாவில் கலந்து கொள்வதே தீர்த்தத்தை பெறுவதற்காகதான் என்பவர்களுக்காக, மகாமகம் விழா குறித்த சிறப்பு அரசு இணையதளங்களின் முகவரியோடு, மகாமக தீர்த்தத்தை பெறுவதற்கான முன்பதிவு இணைப்பும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. கோயில்களின் புகைப்படங்களும், படத்தொகுப்புகளுக்கான இடுகைகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. நகர வரைபடம் குறித்த கூகுள் மேப்புகளும், பேருந்து, கார், இரு சக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை மற்றும் வெளியேறும் பாதைகளின் இணைப்புகளும் இதில் அடங்கும்.

இப்போது ஆண்ட்ராய்ட் தளத்தில் மட்டுமே இயங்கும் செயலியை, விண்டோஸ் மற்றும் ஆப்பிள் தளத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சியில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுளனர். அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலும், எளிதாய்ப் புரியும் விதத்திலும் இருப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

மகாமகம் செயலியை ப்ளேஸ்டோரில் பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்:http://bit.ly/1Q4KYG2

-மு.ஜெயராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க