ஆழ் துளை கிணறு அபாயம்: குழந்தையை மீட்க நவீன இயந்திரம்!

 இந்த செய்தியை குறைந்தது ஒரு மாதத்துக்கு  ஒரு முறை செய்திகளில் காண முடியும். 2014-2015 ல் மட்டும் 36 குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து  இருப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. எத்தனை நாள் தான் அரசாங்கத்தையும், ஆள்துளை கிணறுகளை மூடி வைக்காதவர்களின் அலட்சியத்தையும்  குறை கூறிக் கொண்டே இருக்க முடியும்.

இதற்கான தீர்வை கண்டுபிடித்திருக்கிறார்க்கள் பெங்களூருவை சார்ந்த மூன்று பொறியியலாளர்கள் ஷரத் பாபு, தனுஷ் குமார், கிரிதரா.

தங்கள் பகுதியில் ஒரு குழந்தை ஆழ்துளை கிணறில் விழுந்து இறந்தது இவர்களை பெரிதும் பாதித்தது. ஆசிரியரின் ஊக்கத்துடன் வேலையில் இறங்கினர். சாதாரணமாக உள்ளே விழுந்தவர்களை மீட்க பயன்படும் இயந்திரத்தை மாற்றியமைத்து, அதனை குழந்தைகளை காப்பாற்ற ஏதுவாக பல சிறப்பு அம்சங்கள் பொருத்தியுள்ளனர்.

இந்த இயந்திரத்தை ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தியதும், மேலே இருந்து ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே சிக்கி இருப்பவருக்கு செலுத்த முடியும். இதில் எல்.ஈ.டி விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. கேமரா இருப்பதால் குழந்தை எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை அறிய எளிதாக இருக்கும். சாதகமான சூழ்நிலையில் இயந்திரத்திலிருந்து வெளி வரும் ரோபோட் கைகள், குழந்தையை பிடித்து கொள்ளும். பாதுகாப்பு பலூன்  போன்ற ஒன்று வெளி வந்ததும், குழந்தை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர தயார்.

பயன்படுத்திய  காட்போர்ட், அலுமினியம், கம்பிகள், கால்பந்து கொண்டு மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த மாணவர்கள். அடுத்த கட்டமாக இதனை தரமான பொருட்கள் கொண்டு உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றனர். இதனால் ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

-ஐ.மா.கிருத்திகா

(மாணவப்பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!