இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்: ஸ்நேப்சாட்டின் க்யூட் வெர்ஷன்

ன்ஸ்டாகிராம் என்ற புகைப்பட பகிர்வு தளம், தனது புது அப்டேட்டில், 'இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்' என்ற புதிய வசதியை வெளியிட்டு இருக்கிறது. ஸ்நேப்சாட்டில் இருப்பது போல், இனி இன்ஸ்டாவிலும், புகைப்படங்களை வைத்தே கதை சொல்ல முடியும். 

இன்ஸ்டாகிராம் ஆப் வந்ததும், அது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதுவும் ஃபேஸ்புக்கின் மார்க் சக்கர்பெர்க், இன்ஸ்டாவை வாங்கியதால், அதன் மேல் பலருக்கும் ஈர்ப்பு அதிகமானது. இன்ஸ்டா படங்களை, தொடர்ந்து ஃபேஸ்புக்கில் விளம்பரமாக வைத்ததால், அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, கபாலி வசூல் வேகத்தில் உயர்ந்தது. 2012-ம் ஆண்டு ஏப்ரலில், இன்ஸ்டாவை ஃபேஸ்புக் வாங்கி இருந்தது. ஆனால், 2011-ம் ஆண்டு வெளியான ஸ்நேப்சாட்,  2012 அக்டோபர் வரை ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் இடம்பெறவே இல்லை. ஆப்பிளின் IOS-ல் மட்டும்தான் இருந்தது. அந்த ஆண்டு நவம்பர் வரை IOS ல் மட்டும் 1 பில்லியன் புகைப்படங்கள் ஸ்நேப்சாட் ஆப் மூலமாக பதியப்பட்டு இருந்தன. 

ஆனாலும், ஸ்நேப்சாட் இளசுகளிடம் மட்டும்தான் ஹிட் அடித்தது. அதில் இருக்கும் பல ஆப்சன்களுக்கு, இணைய அங்கிள்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் பெரும்பாலும், 'ஸ்நேப்சாட் இளைஞர்களை பாழ்படுத்துகிறது' என்றே குற்றம் சாட்டி வந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள், ஸ்நேப்சாட்டில் நாம் பகிரும் படங்கள் self timer முறையில் தாமாகவே முன்வந்து டெலிட் ஆகிவிடும். அது இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தும் என பெரியவர்கள் நம்புவது உண்மை என்றாலும், அதில் இடம்பெற்றுள்ள ஏகப்பட்ட ஃபில்டர்களும், குழப்பமான டிசைனுமே அவர்களுக்கு ஸ்நேப்சாட்  மீது அலர்ஜியை ஏற்படுத்தியது.

என்னதான் பெரியவர்கள் ஸ்நேப்சாட்டை பத்தடி தள்ளி இருந்து அணுகினாலும், அது இளசுகளின் ஆல் டைம் ஃபேவரைட்டாகவே மாறிவிட்டது.  ஹன்சிகா போன்ற கோலிவுட் பிரபலங்கள் 'ஸ்நேப்சாட்'டை  பயன்படுத்துபவர்கள்தான். சில சமயங்களில் மண்டகாய வைத்தாலும், வேறு வழியில்லாததால், ஸ்நேப்சாட்டில்தான் குடி இருந்து வருகிறார்கள் இளசுகள்.

ஸ்நேப்சாட்டில் இருக்கும் கடின ஆப்சன்களை MAKE IT SIMPLE என குறைத்து இருக்கிறது இன்ஸ்டா ஸ்டோரீஸ். ஸ்நேப்சாட்டைப் போல், இன்ஸ்டா ஸ்டோரீஸிலும், புகைப்படங்களில் ஜாலியாக கிறுக்கி விளையாடலாம். ஆனால், எளிமையான ஆப்சன்களில் அதை செயல்படுத்தி இருக்கிறது, இன்ஸ்டா. ஸ்நேப்சாட்டில், ஸ்வைப் செய்து ஒரு மெசேஜை அனுப்புவதற்கு பதில், இன்ஸ்டாவில் 'சென்ட் மெசேஜ்' -ஐ க்ளிக் செய்து, சுலபமாக அதே செய்தியை அனுப்பலாம். இன்ஸ்டாகிராம் CEO வான கெவின் சிஸ்ட்ரோமும் (Kevin Systrom) , "ஸ்நேப்சாட்டிற்கு, நாங்கள் கிரெடிட் கொடுக்கத்தான் வேண்டும்" என கூறி இருக்கிறார்.

'இன்ஸ்டாவில் இருக்கும் கோடிக்கணக்கான பயனர்கள் இதை பயன்படுத்த தொடங்கினாலே, ஸ்நேப்சாட் வசம் இருக்கும் பலர், இன்ஸ்டாவில் நிரந்தரமாக தங்க வருவார்கள்' என்பது மார்க் சக்கர்பெர்கின் எண்ணமாக இருக்கலாம். அது நிறைவேறியதா இல்லையா என்பதை, அவர் விரைவில் இன்ஸ்டா ஸ்டோரியாக சொல்வார், என நம்புவோம்.

- கார்த்திகேஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!