டோரென்ட்டுகளின் கூகுள் மூடப்பட்டது. அடுத்து என்ன?

' மக்க கலங்குதப்பா பாடிக்கொண்டே கண்கள் வியர்த்தபடி இருக்கிறார்கள் டோரென்ட்வாசிகள். மூன்று வாரங்களுக்கு முன் உலகின் நம்பர் ஒன் டோரென்ட் தளமான kickass-ஐ தளத்தை முடக்கியதோடு, அதன் உரிமையாளரான அர்டெமை போலாந்தில் கைது செய்தது காவல் துறை. kickass தளம் முடக்கப்போட்டபோதே, வார்னஸ் ப்ரோஸ், 20த் சென்ச்சுரி ஃபாக்ஸ் போன்ற பெரும் ஹாலிவுட் நிறுவனங்கள் விழா எடுத்து கொண்டாடி இருப்பார்கள்.அப்படியும் செய்யாதவர்கள், இப்போது கொண்டாடுவார்கள். தற்போது Torrentz.eu என்ற தளத்தை, அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடையை இழுத்து சாத்தி இருக்கிறார்கள்.

நேற்று வழக்கம் போல்,  Torrentz.eu தளத்திற்கு சென்றவர்களுக்கு பேரதிர்ச்சி. 'பல்வேறு தளங்களில் இருந்து தேடி எடுத்து ஃபைல்களைத் தரும் ஒரு இலவச , அதிவேக தளமாக டோரென்ஸ் இருந்தது ' என குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சர்ஸ் பட்டனை க்ளிக் செய்தால், 'டோரென்ட் உங்கள் மீது அன்பாகவே இருக்கும். பிரியாவிடை' என மற்றொரு குறிப்பு இருந்தது.

 

அவ்வளவுக்கும், Torrentz.eu வில் டோரென்ட் ஃபைல்கள் எதுவும் இருக்காது. அப்படியிருந்தும் , டோரென்ட் தளம் பறிபோனது தான், நேற்றைய டெக் உலகின் அதிர்ச்சிகர செய்தி. காரணம், ஒரு குறிப்பிட்ட ஃபைல் இந்த தளத்தில் இருக்கிறதென கண்டுபிடிப்பது டோரென்ட் தளங்களில் அவ்வளவு எளிதானதல்ல. ஒவ்வொன்றையும் kickass(தற்போது மூடப்பட்டுவிட்டது), piratebay, extra torrent, yify, பிட் ஸ்னூப் தளங்களில் சென்று தேட முடியாது. அதைத்தான் தொகுத்து வழங்கியது Torrentz.eu . சுருக்கமாக சொல்வதென்றால், அது டோரென்ட்டுகளின் கூகுள். கூகுள் போல், டோரென்ட் ஃபைல்களை தொகுத்துத் தரும் ஒரு சர்ச் இஞ்சின்.

இது வெறும் பைரசி தளங்கள் தானே?

காலைல டிபன் சாப்பிட்டீர்களா என்பது போல், சகஜமாக மாறிய வார்த்தைகள் திருட்டு விசிடிக்களும், டவுன்லோடு செய்து படம் பார்ப்பதும். திருட்டு  சிடிக்கள் என்பதை 'குடி குடியைக் கெடுக்கும்' என்னும் லேபிளோடு குடிக்கும் குடிமக்களைப் போல , மிக இயல்பாக வாங்கி செல்கின்றனர் மக்கள். அமீர்கானின் முந்தைய படமான PKவை, ஒரு மாநிலத்தின் முதல்வர், ' டவுன்லோடு செய்து பார்த்தேன்.இதற்கு வரிவிலக்கு அளிக்கலாமே' என சில ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு பைரசிகளுக்கு பழகிவிட்டோம். ' அட , நான் எல்லாப் படமுமே, திரையில் தான் பார்ப்பேன் ' என மார்த்தட்டுபவர்கள் கூட, தங்களது மொபைலில் தங்களுக்கே தெரியாமல் பைரசி பாடல்களையும், தங்கள் கணினிகளில் பைரசி மென்பொருள்களையும் பயன்படுத்தி இருப்பார்கள்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், piratebay தளம் முடக்கப்பட்ட போது, அதன் தாக்கம் அதிகளவில் இல்லை. ஆனால், தற்போதைய நிலை வேறு.13 ஆண்டுகளாக கொடிகட்டிப்பறந்த kickass-ம், Torrentz.eu-ம் மூன்று வார இடைவேளையில் மூடப்பட்டு இருக்கிறது.  கபாலி படத்திற்காக tamilgun.com மூடப்பட்டது. அது மூடப்பட்டும். tamilrockers தளத்தில் படம் முதல் நாளே  வெளியானது. தற்போது tamilgun தங்கள் டொமைனை மாற்றி இருக்கிறார்கள். ஆனால், இதே நிலை, தொடர்ந்து நீடிக்காது. இனி, எல்லா தளங்களும் மூடப்படலாம். குறைந்தது, அதன் வீச்சு குறைய வாய்ப்பு இருக்கிறது. திரைப்படம் என்பதைத் தாண்டி, புத்தகங்கள், மென்பொருள்,கேம்ஸ், போன்றவற்றிற்காகவும், அதிகளவில் டோரென்ட்டுகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

 

டோரென்ட் தளங்கள் மூடப்படுவதன் ஒரே நல்ல விஷயம். உலக சினிமா ரசிகர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் , இனி ஃபேஸ்புக்கில், ஈர மனங்களை அள்ளும் இரானிய சினிமா எனவெல்லாம் எழுத முடியாது. புதுப்படங்களை அப்லோடு செய்யும் தளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இல்லையெனில், பழைய படங்களை வைத்தே ஒப்பேற்ற வேண்டியது தான். இனி, ஒரு படத்திற்கு 480p,720p,1080p, HDRIP,TCRIP,DVDSCR,BLURAY  போன்ற  பல வெர்ஷன் எல்லாம் வராது.இல்லாவிட்டால், ஒரு வழி இருக்கிறது. ஒரிஜினல் டிவிடிக்களை ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்து வாங்கி கருத்துக்களை தெரிவிக்கலாம்.

க.மணிவண்ணன்
(மாணவ பத்திரிகையாளர்)

Kickass முடக்கப்பட்டது எப்படி தெரியுமா?

 

   


பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது பழமொழி. ஆனால், பலநாள் திருடன், திருடாமல் நியாயமாக ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கியபோது மாட்டிக்கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இது தான் நடந்து இருக்கிறது கிக்ஆஸ் நிறுவனர் ஆர்டெம் வௌலினுக்கு. நேற்று காப்பிரைட் வழக்கில், அவரை போலாந்தில் வைத்து கைது செய்து இருக்கிறது அமெரிக்க காவல்துறை. 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக காப்பிரைட் ஃபைல்களௌ பகிர்ந்துள்ளதால், அவரைக் கைது செய்திருப்பதாக சொல்கிறார்கள்.


இவரைக் கைது செய்து, இவரின் வலைதளத்தை முடக்கினாலும், சில மணி நேரத்தில், புதிய வலைதளம் ஒன்றை ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் டோரென்ட்டில் டவுன்லோடு செய்வது டெக்னிக்கலாக குற்றம் கிடையாது.

டோரென்ட் சந்தைகளின் ராஜாவக திகழ்ந்து வருவது கிக்ஆஸ் தளம் kat.cr .2008-ம் ஆண்டு இந்த தளம் தொடங்கப்பட்டாலும், 2015-ம் ஆண்டு தான் ,பைரேட் உலகின் டான் ஆக உருவெடுத்தது கிக்ஆஸ். கொடிகட்டிப் பறந்துகொண்டு இருந்த பைரேட்பே சிக்கியதும் அதே ஆண்டு தான். பைரேட்பேயின், மூன்று ஓனர்கள் கைது செய்து, பைரேட்பேயை முடக்கினார்கள். அதற்குப்பின்னர் பல பெயர்களில், பைரேட் பே வலம் வந்தாலும், முதல் இடத்தை மீண்டும் அதனால் பிடிக்க முடியவில்லை. கிக்ஆஸ் தளத்திற்கு, மாதம் ஒன்றிற்கு, 50 மில்லியன் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அதிக நபர் பார்க்கும் வலைதளங்கள் பட்டியலில், உலக அளவில், கிக்ஆஸ் 68வது இடத்தில் இருக்கிறது.

பல்வேறு டொமைன்களில் ராஜாவாக சுற்றி வந்த ஒரு நபரைப் பிடிக்க வழிதெரியாமல் அமெரிக்க காவல்துறை விழிபிதுங்கி நின்றதுஆனால்,நேற்று இவரது கைதுக்குப் பின் இருக்கும் கதை சுவாரஸ்யமானது.

டோரென்ட் என்பது ஒரு ஃபைல் ஷேரிங் தலம் என்பதால், அது அப்லோட் செய்பவர்களின் பிரச்னையே அன்றி, அர்டெமின் பிரச்னை அல்ல. ஆனால், அப்படி பதிவேற்றப்பட்ட ஃபைல்கள், காப்பிரைட் சம்பந்தப்பட்டது என பலமுறை சொல்லியும், விளம்பர நோக்கிற்காக, அதை அழிக்காமல், அதை வைத்து பலமடங்கு லாபம் பார்க்க முயற்சி செய்தது தான் பிரச்னை.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு உளவு ஏஜென்டை வைத்து, கிக்ஆஸ் வலைதளத்தை அணுகுகிறது அமெரிக்க காவல்துறை.ஒரு நாளைக்கு 300 டாலர்கள் என விலைபேச்சி ஆர்டெமுடன், ஒப்பந்தம் செய்கிறது அமெரிக்கா.இதெல்லாம் செய்வதற்கு பின்னால் இருக்கும் காரணம், குறிப்பிட்ட நபரின் விவரங்களைப் பெறத்தான். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், எந்த வங்கிக் கணக்கில் பணம் பெறப்பட்டது என்பதை கண்டு அறிந்தது அமெரிக்க காவல்துறை.அந்த அக்கௌன்ட்டில், 2015 ஆகஸ்ட்டில் இருந்து, மார்ச் 2016 வரை 31 மில்லியன் டாலர்கள், விளம்பரத் தொகையாக பெறப்பட்டு இருந்தது.


இவர்களுக்குக் கிடைத்த ஈ-மெயில் முகவரியான  pr@kat.cr தான், ஃபேஸ்புக்கில் official.KAT.fanclub என்ர பக்கத்தையும் மெயின்டெய்ன் செய்ய, உஷாரானது காவல்துறை. சில வலைதள ட்ரேக்கர்களை வைத்து அர்டெமிற்கு சொந்தமான தளங்களை ( kickasstorrents.com, kat.cr, kickass.to, kat.ph, kastatic.com, thekat.tv and kickass.cr ) டொமைனை ட்ரேக் செய்தார்கள்.இந்தத் தகவல்களை வைத்து இந்த டொமைன்களின் உரிமையாளர், முகவரி, ஈமெயில் ஐடி, மொபைல் எண் போன்றவற்றை வைத்து அது உக்ரைனை சேர்ந்த அர்டெம் வௌலின் என்பவரைக் கண்டுபிடிக்கிறார்கள்.

ஆப்பிள் மொபைல் வாடிக்கையாளர்கள் ஏதேனும் அப்ளிகேஷன் அல்லது ஃபைல்களை டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால், ஐட்யூன்ஸில் பணம் கட்டித்தான் பெற முடியும். அர்டெம் மாட்டிக்கொண்டது இங்கு தான். உலகிற்கே, பைரேட்டட் , அதாவது திருட்டுத்தனமான ஃபைல்களைத் தரும் வலைதளத்தின் ஓனர், ஐட்யூன்ஸில் அந்த குறிப்பிட்ட வங்கியின் அக்கௌன்ட்டில் இருந்து பணம் செலுத்தி சில அப்ளிகேசன்களை வாங்குகிறார்.

இந்த எல்லா தகவல்களையும் ஒன்றிணைத்து, அர்டெமை கைது செய்து இருக்கிறது அமெரிக்காவின் ஹோம்லாண்டு செக்யூரிட்டி.

கார்த்தி.கே.ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!