Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக ஹலோ!- ஆர்குட் இஸ் பேக்

"  'ஹலோ', வெறும் லைக்குகள் பெறுவதற்கான இடம் அல்ல; அன்பைப் பெறுவதற்காக, பகிர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது” என்கிறார், 'ஹலோ' என்னும் புதிய சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ள ஆர்குட் பயுகோக்டன்.

ஃபேஸ்புக்கில் பல மணிநேரத்தை செலவிடுவது, நம்மில் பலருக்கு  தினசரி வேலைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது தற்போது. புதிதாக அறிமுகமாகும்  நபரிடம்,  அவரது ஊர் பெயரை விசாரிப்பது என்பது மாறி  ஃபேஸ்புக் ஐடியை கேட்கும் டிஜிட்டல் காலத்தில் வாழ்கிறோம்!

வெறுமனே நட்பை உருவாக்குவது, பழைய நட்பைத் தொடர்வது, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வது, எண்ணங்களை பகிர்ந்துகொள்வது என்று மட்டுமில்லாமல் தொழிலை பிரபலப்படுத்தும் மற்றும் விளம்பரப்படுத்தும் இடமாகவும் ஃபேஸ்புக் உள்ளது.

2000 ன் மத்தியிலேயே, சமூக வலைதளங்கள் தவிர்க்க முடியாதவை என்ற நிலையை அடைந்துவிட்டன. ஆனால் அன்றைக்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது, ஃபேஸ்புக் அல்ல; ஆர்குட்!

ஆம், ' இணையத்தின் மூலம் உலக மக்களை இணைக்க வேண்டும்' என்ற கூகுள் மென்பொறியாளரான ஆர்குட் பயுகோக்டன் என்பவரின் கனவால்தான், கூகுள் நிறுவனத்தின் பிராண்டிங்குடன், 2004ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி, “ஆர்குட்” வெளியானது. அந்த ஆண்டின் ஜூலை மாதத்திலேயே பத்து லட்சம் பேரையும், அடுத்த இரு மாதங்களில் இருபது லட்சம் பேரையும் கவர்ந்திழுத்த ஆர்குட், 2008ம் ஆண்டு பல மில்லியன் பயனாளிகளுடன் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

அபரிமிதமாக வளர்ந்து வந்த ஆர்குட், ஃபேஸ்புக்கின் புதுமையான போட்டியை சமாளிக்க முடியாமல், 2010ம் ஆண்டு சரியத் தொடங்கியது. கூகுள் மற்றும் ஆர்குட் பயுகோக்டனின் பல்வேறு மீட்பு முயற்சிகளும் படுதோல்வி அடைந்ததால் 2014ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதியோடு, ஆர்குட் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.

ஆர்குட் இணையதளம் தன் சேவையை நிறுத்திக்கொண்டாலும், அதை உருவாக்கிய ஆர்குட் பயுகோக்டன் , தனது முயற்சியை சிறிதும் நிறுத்திக் கொள்ளவில்லை. தற்கால சமூகத்திற்கு தேவையான கட்டமைப்பு உடைய ஒரு புதிய சமூக வலைதளத்தை உருவாக்கும் பணியில், தனது கூகுள் நண்பர்களான இருபது பேர் கொண்ட அணியுடன் தொடர்ந்து கடுமையாக பணியாற்றினார்.

'சமூக வலைதளத்தின் பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிச் செய்யத் தவறிய தற்போதைய சமூக வலைதளங்களுக்கு மாற்றாக, தனது இணையதளம் இருக்கும்' எனக்  கூறியுள்ள ஆர்குட் பயுகோக்டன், கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய எட்டு நாடுகளில் 'ஹலோ' என்ற பெயரில், தனது புதிய சமூக இணையதளத்தை  வெளியிட்டுள்ளார்.

'ஹலோ' எப்படி செயல்படுகிறது?

ஹலோ,  உங்களைப்போன்ற ஒரே எண்ணமுடைய, ஆர்வமுடைய மக்களுடனும், தகவல்களுடனும் உங்களை இணைக்கும் என உறுதியளிக்கிறது. மேலும், நீங்கள் யார் என்றும், உங்களுக்கு பிடித்தவை என்னவென்றும்  இந்த உலகத்துக்கு வெளிப்படுத்தும் இடமாகவும், அர்த்தமுடைய நட்பு வட்டத்தை உருவாக்கப் பயன்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹலோவின் கட்டமைப்பானது, பேஸ்புக்கின் சமூக அமைப்பையும், ட்விட்டரின் வடிவமைப்பையும் மற்றும் இன்ஸ்டாகிராம், ரெடிட், கூகுள் பிளஸின் முக்கிய அம்சங்களை கொண்டதோடு மட்டுமல்லாமல் அதன் பயனர்களுக்கு பாயின்ட்ஸ், காய்ன்ஸ், ரிவார்ட்ஸ் மற்றும் லெவெல்ஸ் போன்றவற்றுடன் கூடிய ஒரு கேமிங் அனுபவத்தை ஜாலியாக அளிக்கிறது. தற்போதைக்கு ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் மட்டுமே வெளியிடப்பட்டாலும், விரைவில் வெப் வெர்சனும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.  

நீங்கள் ஹலோவின் செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், பயனர் கணக்கைத் தொடங்கும்போது, முதலாவதாக உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் (அதை இங்கு “பெர்சோனஸ்” என்று அழைக்கிறார்கள்), அதாவது புகைப்படக்காரர், சினிமா, உணவுப்பிரியர், பயணங்கள் செய்ய விரும்புபவர், விலங்குகளை விரும்புபவர் போன்று நூற்றுக்கும் மேற்பட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. ஆனால் நீங்கள் ஏதாவது ஐந்தை மட்டுமே தேர்வு செய்ய வேண்டுமென்றாலும், இதை உங்களுக்கு வேண்டும்போது மாற்றிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் தேர்வு செய்யாதவற்றை சார்ந்த தகவல்களையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு, நீங்கள் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவேற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் நீங்கள் ஆப்-ல் லாக்-இன் செய்ததற்கு சில பாய்ன்ட்ஸ், புகைப்படம் போஸ்ட் செய்ததற்கு சில பாயின்ட்ஸ் என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பாயின்ட்ஸ், காய்ன்ஸ், ரிவார்ட்ஸ் அளிக்கப்பட்டு அதற்கேற்ற லெவெலும் முன்னேறும்.

உங்களுக்குப் பிடித்ததை பிடித்தவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும், பலரை புதிதாக தெரிந்துகொள்வதற்கும், இவை அனைத்தையும் ஒர் அற்புதமான கேமிங் அனுபவத்தோடு பெறுவதற்கு நீங்கள் ரெடிதானே!

ஓ! நீங்கள் கேட்பது புரிகிறது. இது எப்போது இந்தியாவில் கிடைக்கும் என்றுதானே, கவலை வேண்டாம்! இந்த மாதத்திற்குள்ளாக இந்தியா, ஜெர்மனி மற்றும் மெக்ஸிகோவில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

ஃபேஸ்புக்குக்கு ஈடு கொடுத்து 'ஹலோ' வெற்றி பெறுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். இது டிஜிட்டல் உலகம் பாஸ், எது, எப்போது, எப்படி நடக்கும்னே சொல்லமுடியாது... சோ, வெய்ட் அண்ட் ஸீ மக்களே..!


- ஜெ. சாய்ராம்
(மாணவப் பத்திரிகையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement