கூகுள் அலோ பற்றி எச்சரிக்கிறார் ஸ்னோடென்

 

 

சாட் செய்வதற்கான மொபைல் அப்ளிகேஷன்கள் பல்கிப் பெரும் காலம் இது. அதுவும்       வாட்ஸ்-அப் நம் விவரங்களை, ஃபேஸ்புக்கிற்கு அனுப்ப முடிவு செய்திருப்பதால், சற்றே ஜாக்கிரதையாக டெலிகிராம், சிக்னல் பக்கம் ஒதுங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 


சில மாதங்களுக்கு முன்னர் வீடியோ சாட் அப்ளிகேசன்களான  IMO மற்றும் ஆப்பிளின் ஃபேஸ்டைமிற்குப் போட்டியாக கூகுள் நிறுவனம் டூயோ என்னும் அப்ளிகேஷனை வெளியிட்டது. அது பலரிடமும் வரவேற்பைப்பெற்றது.தற்போது கூகுள் அலோ, கூகுள் ட்ரிப்ஸ் என்னும் இரு அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இதில் , கூகுள் அலோ என்னும் சாட் அப்ளிகேஷன்  சில நாட்களிலேயே வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்ற மெசெஜிங் அப்ளிகேஷன்களுக்கு போட்டியாக வரலாம். 


கூகுள் அலோவிற்கு ஆதரவாக பலர் எழுதவும் தொடங்கிவிட்டார்கள்.ஆனாலும், அலோவும் பாதுகாப்பானது அல்ல என்கிறார்கள் எட்வார்ட் ஸ்நோடென் போன்ற டெக்கிகள். 
எட்வார்ட் ஸ்நோடென் அலோவை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கிறார். உலகில் உள்ள அனைத்து தகவல்களையும், நமக்கு ஒருங்கிணைத்து கூகுள் அலோவில்  தருவதாக  நமக்கு உறுதி அளிக்கிறது கூகுள்.அதுவும், அதில் இருக்கும் கூகுள் அசிஸ்டென்ட் நாம் தொடர்ச்சியாக அனுப்பும் பதில்களை வைத்து, நமக்கு வரும் கேள்விகளுக்கு என்ன பதில் அனுப்பலாம் என நமக்கு பரிந்துரைக்கவும் செய்யும் என்கிறது கூகுள். 


இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பிரைவசி பாலிசி பற்றி பேசிய கூகுள் நிறுவனம், கூகுள் அலோவில் நம் தகவல்கள் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் , பின்னர் மறைந்துவிடும் என்றனர்.ஆனால்,தற்போது அது எப்போதும் சர்வரில் இருக்கும் என அவர்களது பிரைவசி பாலிசியை தளர்த்தி இருக்கிறார்கள். 


கூகுள் இப்படி நம் தகவல்களை சேமிப்பதை நாம் தடுக்க முடியும். டெலிகிராம் அப்ளிகேஷனில் இருக்கும் சீக்ரெட் சாட் போல், அலோவில் இன்காக்னிட்டோ சாட் incognito chat என்ற வசதி இருக்கிறது. இதில் , நாம் நண்பர்களுக்கு அனுப்பும் தகவல்களை கூகுள் சேகரிக்காது. ஆனால், இதில் கூகுள் அசிஸ்டென்ட் வேலை செய்யாது.ஆக, கூகிள் அலோவில் இருக்கும் சிறப்பம்சம், நம் தகவல்கள் பதிந்து கொண்டு தான் நமக்கு உதவுகிறது.


நம்முடைய தகவல்களை வைத்து விளையாடுவது கூகுளுக்கு முன்னோடியாக ஃபேஸ்புக் இருக்கிறது, அதன் காரணமாகத்தான், செப்டம்பர் 25-ம் தேதியில் இருந்து வாட்ஸ்அப் தகவல்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய இருக்கிறார்கள்.நாங்கள் வேறு என சொல்லிவிட்டு, இப்போது அதையே கூகுளும் செய்கிறது என குற்றம் சாட்டுகிறார் ஸ்நோடென். தகவல்களைத் தர மாட்டோம் என end to end encryption-ஐ ஆதரித்த ஆப்பிளின் ஐமெசேஜும், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப்பும் பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்தது.அதை, தவிர்க்க கூகுள் முயற்சி செய்து இருக்கலாம். 


ஆனால், அதற்காக நம் பிரைவசியை விட்டுத் தர முடியுமா என்பதுதான் தலையாய கேள்வி 

-கார்த்தி


 

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!