வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (04/10/2016)

கடைசி தொடர்பு:10:48 (05/10/2016)

உங்கள் ஃபேஸ்புக் லைக்கும், ஹார்ட்டும் மைனஸ் 30 டிகிரியில் சேமிக்கப்படுகிறது! #FacebookDataCenter


இந்த மூன்று கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? ஒரு வருடத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் எத்தனை ஸ்டேட்டஸ்,, ஃபோட்டோ போட்டிருக்கிறீர்கள்? உங்கள் கணக்கிலிருந்து எத்தனை லைக் போட்டிருக்கிறீர்கள், உங்கள் நண்பர்கள், அவர்களது நண்பர்களுக்கு ஃபேஸ்புக்கில் எத்தனை லைக் செய்திருக்கிறார்? இவற்றுக்கான விடையை மைக்ரோ செகண்டில் உங்களால் கூறமுடியுமா? அப்படியென்றால் அடுத்த கேள்வி இது தான். உலகில் உள்ள மொத்த ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களும் சேர்த்து ஒரு வருடத்தில் எத்தனை லைக் செய்திருக்கிறார்கள் என்று கணக்கு கேட்டால் தலை சுற்றுகிறாதா? ஆனால் ஃபேஸ்புக் இதனை சேமித்து வைத்துள்ளது. அது எப்படி என்பது தான் ஆச்சர்யமான விஷயம்.

ஃபேஸ்புக் டேட்டா சென்டர் தான் நாம் தலைசுற்றும் என்ற வேலையை அசாதாரணமாக செய்து வருகிறது. ஆர்டிக் பகுதியில் உள்ள சிறு கடலோரப்பகுதியான  லூலே பகுதியில் தான் ஃபேஸ்புக்கின் டேட்டா சென்டர் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட புவியின் உச்சிப்பகுதியில் உறைபனிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த டேட்டா சென்டரின் அளவும் 3 லட்சம் சதுர அடியாகும் . இதில் நிறுவப்பட்டுள்ள சர்வர்கள் அதிகப்படியான வெப்பத்தை உமிழும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனை இயற்கையாகவே சமாளிக்கும் வகையில் இந்த டேட்டா சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய வளாகத்தின் அளவு ஆறு ஃபுட்பால் மைதானங்களுக்கு சமமானது. இந்த சர்வர்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் குளிர்காலத்தில் பனியால் பாதிக்காமல் இருக்க சர்வரிலிருந்து வெளியாகும் வெப்பம் பயன்படுகிறது. இது தான் உலகின் மிக அதிக செயல்திறன் மிக்க டேட்டா சென்டர் என்று கூறப்படுகிறது.

உலகில் உயிர்வாழும் ஏழு நபர்களில் ஒருவர் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார் என்கிற‌து ஃபேஸ்புக். இவர்களது கணக்குப்படி பார்த்தால் அவ்வளவு பேரின் கணக்கையும் தங்கு தடையின்றி நிர்வகிக்க உதவும் ஃபேஸ்புக்கின் இந்த டேட்டா சென்டர் உலகின் மிக சிறந்த டேட்டா சென்டர்தான். இவ்வளவு பெரிய டேட்டா சென்டரில் 150 பேர் தான் பணிபுரிகிறார்கள். ஒவ்வொரு 25000 சர்வருக்கும் ஒரு டெக்னீசியனை வேலைக்கு வைத்துள்ளது ஃபேஸ்புக். இதற்குள் டெக்னீஷியன்கள் ஸ்கூட்டர் மூலம் பயணிக்கிறார்கள்.

37.5 லட்சம் சர்வர்களில் நமது டேட்டாக்கள் சேமிக்கப்படுகிறது. உதாரணமாக ஒருவர் பெயரை நீங்கள் தேடினால் அவரது கணக்கு இருக்கும் சர்வரை தேடி அதனை உங்களுக்கு சில மைக்ரோ செகண்டில் தருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பலருக்கும் நீங்கள் கேட்கும் அதே சமயத்தில் இந்த வேலையை செய்கிறது. நீங்கள் ஒரு புகைப்படத்தை விரும்பினால், ஒரு ஸ்டேட்டசை பதிவேற்றினால் என அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்து கொண்டே இருக்கிறது. 

அதிகபட்ச வெப்பத்தை வெளியேற்றக்கூடிய சர்வர்களில் உள்ள பாகங்கள் பாதிக்காத வண்ணம் சர்வர் அறைகளின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிற‌து. ஃபேஸ்புக்கின் ஒவ்வொரு கட்டளையும் அதற்கான சர்வர்களிடமிருந்து பெறப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பழுது ஏற்பட்டால் 2 மணி நேரத்தில் சரி செய்யப்படும் என்ற நிலையில் இருந்து இந்த டேட்டா சென்டரின் பழுது நீக்கு நேரம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

பழைய மற்றும் பழுதடைந்த ஹேர்ட் டிஸ்க்குகள் அகற்றப்பட்டு முழுவதுமாக அழிக்கப்படுகின்றன. ஃப்ரைவஸி நிறைந்த விஷயம் என்பதால் இதில் அதிக அக்கறை எடுத்து கொள்கிறது ஃபேஸ்புக். இங்கு பணிபுரிபவர்களின் அனுபவங்கள் வித்தியாசமானது. அவற்றில் சில...

நம்பிக்கையோடும், பொறுப்போடும் அனைத்து பயன்பாட்டாளர்களுக்காக இங்கு பணிபுரிவது சிறந்த அனுபவத்தை தருகிறது. சிறந்த பணியை அளிப்பதே என் நோக்கம் - கார்ல்சன், மெக்கானிக்கல் சிஸ்டம் ஸ்பெஷலிஸ்ட்

இங்கு பணிபுரிவதில் மிகப்பெரிய சவால் வெளியில் உள்ள -30 டிகிரியை சமாளிப்பது. - எமிலி, டேட்டா சென்டர் டெக்னீஷியன்


உலகில் உள்ள அனைவரும் தங்களது தகவல் ஃபேஸ்புக்கில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதே என் கடமை - கிறிஸ்டர் ஜான்சன், சர்வர் டெக்னீஷியன்

இந்த டேட்டா சென்டரை பாதுக்காப்பது என் பொறுப்பு - ஸ்வால்ஃபொர்ஸ், செக்யூரிட்டி ஆபிஸர்

இப்படித்தான் நமது ஒவ்வொரு தகவலும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இந்த டேட்டா சென்டரில் பதியப்படுகிறது. இது பேரழிவுகளால் பாதிக்கபடாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஃபேஸ்புக் இது தவிர அயர்லாந்தில் தனது இரண்டாவது டேட்டா சென்டரை  நிறுவி வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டேட்டா சென்டரை டென்மார்க்கில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டேட்டஸை நீங்கள் ஃபேஸ்புக் மூலம் படித்திருந்தால் அது லூலேயில் உள்ள எதாவது ஒரு சர்வரிலிருந்து தான் உங்களுக்கு வந்திருக்கும். நீங்க கலக்குங்க மார்க்.

-ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்