வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (16/10/2016)

கடைசி தொடர்பு:11:15 (17/10/2016)

''நோ'' சொன்ன தோனி ''ஓகே'' சொன்ன கோலி - டி.ஆர்.எஸ், ப்ளஸ் - மைனஸ் என்ன?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2008-ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டது எல்லாருக்குமே ஞாபகம் இருக்கும். வெற்றி, தோல்வி ஆகியவற்றைத் தாண்டி நடுவர்களின் தீர்ப்பு மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. இஷாந்த் ஷர்மா பந்தில் சைமண்ட்ஸ் அவுட் ஆனது 80 மீட்டருக்கு வெளியே இருக்கும் ஆடியன்ஸுக்கு கூட எளிதில் தெரியும். ஆனால் நடுவர் ஸ்டீவ் பக்னர் மறுத்துவிடுவார். இது மட்டுமின்றி  இந்தப் போட்டியில் பல முடிவுகள் இந்திய அணியை பாதித்த போதும் இந்திய அணி டி.ஆர்.எஸ் எனும் கள நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறையை கையில் எடுக்கவில்லை.

முன்னாள் டெஸ்ட் கேப்டன் தோனியும், பிசிசிஐ-யும் இந்த தொழில்நுட்பத்தை மறுத்து வந்தன. அதற்கு முன் டி.ஆர்.எஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். டி.ஆர்.எஸ் என்பது கள நடுவர்களின் முடிவை மறு பரிசீலணை செய்து முடிவை அறியும் தொழில்நுட்பமாகும். இதில் மூன்று விதமான சோதனைகள் நிகழ்த்தப்படுகிறது.  ஹாட் ஸ்பாட் - இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? மற்றொன்று ஸ்னிக்கோ மீட்டர் அதாவது பந்து பேட்டில் பட்டதா இல்லையா என கண்டறியும் தொழில்நுட்பம், மூன்றாவது Hwak-Eye எனும் பந்துவீச்சாளர் வீசிய பந்தின் திசையை ட்ராக் செய்யும் தொழில்நுட்பம். இவை மூன்றும் சேர்ந்த கள நடுவரின் தீர்ப்பை மறு பரிசீலணை செய்யும் முறைதான் டி.ஆர்.எஸ்

ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணங்களின் போது இந்திய டெஸ்ட் அணி மோசமான தோல்வியை சந்தித்தபோது நடுவர்களின் சில முடிவுகள் இந்திய அணிக்கு எதிராக அமைந்தது. ஆனாலும் இந்திய அணி டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்தை கையில் எடுப்பதாக இல்லை.

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமான சத்தங்களுக்கு நடுவே நடக்கும் ஆடுகளங்களில் ஸ்னிக்கோ மீட்டர் பேட்டில் பந்து படுவதை உறுதி செய்வதில் பிரச்னை உள்ளது,  Hwak-Eye மூலம் பந்தின் திசை சரியாக கணிக்க முடியவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான தொடரில் டிவில்லியர்ஸ் போல்டானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அவுட்டான பந்தின்  Hwak-Eye ட்ராக்கிங் பந்து ஸ்டெம்புகளுக்கு மேல் சென்றதாக வந்தது. 

இந்திய கிரிக்கெட் வாரியம் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே வந்தது, இந்நிலையில் தற்போது ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் டி.ஆர்.எஸ் குறித்த தொழில்நுட்ப விளக்கத்தை அளிக்கவுள்ளது. இதற்கிடையில் கேப்டன் கோலியும், சிலசமயங்களில் தொழில்நுட்பத்தின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் மேம்படுத்தப்பட்ட டி.ஆர்.எஸ் உதவியை பயன்படுத்தும் எண்ணம் உள்ளது என்றும் கூறியிருந்தார். தற்போது பிசிசிஐ  இங்கிலாந்து தொடரில் டி.ஆர்.எஸ்க்கு ஓ.கே சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் கூல் இதில் நம்பிக்கை இல்லை என அதிருப்தி தெரிவித்த விஷயத்தை தற்போது கோலி தலைமையிலான அணி டிக் செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் ஐசிசி அளிக்கும் விளக்கத்தில் உள்ளது என்பது தான் பதிலாக உள்ளது. அனுராக் தாக்கூர் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் குழு இந்த முறை டி.ஆர்.எஸ்க்கு ஓகே சொல்லும் என்ற நம்பிக்கையில் ஐசிசி விளக்கம் அளிக்க உள்ளது.

- ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க