சொல்லி அடித்த மொபைல்! முடிவுக்கு வருகிறதா டெஸ்க்டாப் கலாசாரம்!

 

உங்க‌ வீட்ல கம்ப்யூட்டர் இருக்கா? 2000-களின் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரபலமான கேள்வி, ஆனால் இன்று இதே கேள்வியை யாராவது கேட்டால் ''என்னது உங்க வீட்ல கம்ப்யூட்டர் தான் இருக்கா? '' என மாறியுள்ளது. இதற்குக் காரணம் டெஸ்க்டாப் கணினிகளை விட கையடக்க செல்போன்களே கணினியின் சேவைகளை வழங்க ஆரம்பித்தது தான். சமீபத்திய அறிக்கை ஒன்றும் இதனை உறுதி செய்யும் விதமான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் மாத இணையதள தேடல் விகிதங்களின் படி டெஸ்க்டாப்பில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 48.7 சதவிகிதமாகவும், மொபைல் போன்களில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 51.3 சதவிகிதமாகவும் கூறப்பட்டுள்ளது.  முதல் முறையாக மொபைல் போன்கள் இணைய பயன்பாட்டில் டெஸ்க்டாப் கணினிகளை பின்னுக்கு தள்ளியுள்ளன.

இந்த வளர்ச்சி கணிக்கப்பட்டது தான் என்றாலும், இதன் வேகம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக உள்ளது. இதற்கு மூன்று காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகிறது. 

முதலாவது மொபைல் போன்களின் எண்ணிக்கை - கிட்டத்தட்ட உலக மக்கள் தொகையில் 60 சதவிகித மக்கள் ஏற்கெனவே மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில் 2017-ம் ஆண்டில் சுமார் 5 பில்லியன் எண்ணிக்கையையும், 2020-ம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் முழு அளவான 6.77 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மொபைல் போன்கள் வேகமாக ஊடுறுவி வருகின்றன. சில நேரங்களில் ஒரு நபரே 2-க்கும் அதிகமான மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர்.

இரண்டாவது காரணம், உலகின் கிராமப்புற பகுதிகள், ரிமோட் ஏரியாக்களுக்கும் இணைய சேவை சென்றடைவது தான். அதே நேரத்தில் குறைந்த விலை போன்களின் மார்க்கெட் அதிகரித்து வருவதும், இணைய சேவை பல பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படுவதும் தான் என்கிறது புள்ளிவிவரங்கள். சமூக வலைதளங்கள், உடனடி தகவல் பரிமாற்ற ஆப்ஸ்கள் வரை அனைத்துமே யூஸர் ஃப்ரெண்ட்லியாக இருப்பதால் கிராம மக்களையும் எளிதில் சென்றடைந்துவிடுகிறது.

மூன்றாவது இணையதள நிறுவனங்களின் மொபைல் உத்தி, டெஸ்க்டாப்களில் வழங்கப்படும் சேவை அனுபவம் என்பது மொபைல் போன்களில் வழங்கப்படும் சேவை அனுபவத்தைவிட குறைவாக உள்ளதே ஆகும். நிறுவனங்கள் தெரிந்தே தான் இதனை செய்கின்றன. விளம்பரதாரர்களும் மொபைல் போன்களில் விளம்பரம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர் என்கிறது கூகுள். கூகுளின் AMP, ஃபேஸ்புக்கின்  Instant Articles என மொபைல்களை குறிவைக்கும் உத்திகளுக்கு வரவேற்பு அதிகம் உள்ளதும் காரணமாக கூறப்படுகிறது.

முடிவுக்கு வருகிறதா டெஸ்க்டாப் கலாசாரம்:

இணைய வேகம் குறைவாக இருந்தால்கூட செல்போன்களில் வீடியோக்களையும், மற்ற ஃபைல்களையும் பார்க்க முடியும். பயன்படுத்த முடியும். வரும் காலங்களில் டெஸ்க்டாப் பயன்படுத்துவது குறையலாம் என்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உத்தியை மாற்ற துவங்கியுள்ளன. விண்டோஸ் சர்ஃபேஸ் கணினியை டச் பேனலுடன் வடிவமைத்தும், ஆப்பிள் தனது மேக் ப்ரோவை அப்டேட் செய்தும் தனது டெஸ்க்டாப் ஸ்பேஸை குறைத்துக் கொள்கின்றன. பழைய கால மிகப்பெரிய டெஸ்க்டாப் கணினிகள் இப்போது அலுவலகங்களில் இருந்து கூட வெளியேறிவிட்டன. எல்.இ.டி ஸ்க்ரீன் கணினிகள் இந்த இடத்தை ஆக்கிரமித்துவிட்டன. சில அலுவலகங்களில் லேப்டாப்பும், மொபைலும் போதும் என்ற நிலைக்கு மாறிவிட்டன.

இதுபோன்ற அதிரடி உத்திகளும், யூஸர் ஃப்ரெண்ட்லி விஷயங்களும் டெஸ்க்டாப் கணினிகளை ஓரங்கட்டி ரேஸில் முந்துகின்றன. டெஸ்க்டாப் தயாரிப்பு நிறுவனங்களும் மாற்றங்களை புரிந்துகொண்டு மொபைல் சேவைகளை நோக்கி செல்லத் துவங்கிவிட்டன.  இந்த கட்டுரையை கூட பெரும்பாலானவர்கள் மொபைலில் படித்துக் கொண்டிருக்கலாம். அடுத்த தலைமுறைக்கு கணினி என்பது மிக பழைய தொழில்நுட்பமாக தெரியும் அளவுக்கு வளர்ந்து வருகிறது மொபைல். இனி எல்லாம் மொபைல் மயம்.

- ச.ஸ்ரீராம்


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!