வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (14/11/2016)

கடைசி தொடர்பு:16:59 (14/11/2016)

படமும் பார்க்கலாம்..பாடமும் படிக்கலாம்! #YouTubeKids

YouTube Kids

லகம் முழுக்க, வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு பெற்ற தளமான யூ-டியூப் நிறுவனம் குழந்தைகளுக்கான யூ-டியூப் கிட்ஸ் (YouTube Kids) சேவையை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அந்த சேவையை சமீபத்தில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது யூ-டியூப் நிறுவனம். வழக்கமான யூ-டியூப்பே மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக விளங்கினாலும், அதில் சில நேரம் குழந்தைகள் வழிதவறி செல்லவும் வாய்ப்புண்டு. அதனை மனதில் வைத்து இந்த சேவையை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம். பள்ளியில் பாடம் மட்டுமே படிக்கும் உங்கள் சுட்டீஸ்களுக்கு, அனிமேஷன் படமும் பார்க்க உதவுகிறது இந்த Youtube kids.

ஆப்பை முழுக்க முழுக்க குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மிக அழகாக வடிவமைத்துள்ளது யூ-டியூப். எனவே குழந்தைகள் குழப்பமே இல்லாமல், கையாள முடியும். ஆப்பின் பாதுகாப்பு அம்சங்களை பெரியவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இருக்கிறது. ஆப்பை திறந்ததுமே பள்ளி செல்வதற்கு முன், பள்ளி செல்லும் மற்றும் அனைத்து குழந்தைகள் என மூன்று வகையான ஆப்ஷன்களை தருகிறது இந்த ஆப். இதில் சரியானதை தேர்வு செய்வதன் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கு ஏற்றவற்றை தருவதற்கு வசதியாக அமையும்.

யூ-டியூபில் உங்கள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி, அதுவே சில வீடியோக்களை ஹோம் பேஜில் காட்டும். அதற்கு மேலும் பார்க்க வேண்டுமானால் வழக்கம் போல சர்ச் என்னும் தேடும் ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆப்ஷனை ஆன் செய்வதும், ஆஃப் செய்வதும் பெற்றோர்களின் விருப்பம். ஒருவேளை உங்கள் குழந்தை சர்ச் ஆப்ஷனில் 'singam' என டைப் செய்தால் கூட, சாதாரண யூ-டியூப் போல சிங்கம் படம் தொடர்பான வீடியோக்கள், பாடல்கள், டீசர்கள் என எதுவும் வராது. மாறாக நிஜமான சிங்கம் தொடர்பான கதைகள், அனிமேஷன் படங்கள் ஆகியவையே காட்டப்படும். வாய்ஸ் சர்ச் ஆப்ஷனும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு எளிதாக இருக்கிறது. 
மேலும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான் இந்த ஆப்பை உபயோகிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு ஏற்றபடி டைமர் செட் செய்துவிடலாம். அதற்கு மேல் குழந்தைகள் இதனை பயன்படுத்த முடியாது. ஒரு பாஸ்கோடை நாம் செட் செய்துவிட்டால், அதன் மூலம் மட்டுமே செட்டிங்க்ஸ்-ஐ மாற்ற முடியும். எனவே குழந்தைகள் அதிக நேரம் இதனை பயன்படுத்தாமலும் தடுக்க முடியும்.

நிகழ்ச்சிகள், இசை, கல்வி மற்றும் தேடுதல் என 4 ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. நிகழ்ச்சிகள் ஆப்ஷனில், அனிமேஷன் ஷோக்கள், கார்ட்டூன் நாடகங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. இசை ஆப்ஷனில் குழந்தைகளுக்கான ரைம்ஸ், இந்தி மற்றும் ஆங்கில பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. Learning என்னும் கற்றுக்கொள்ளும் ஆப்ஷனில் குழந்தைகளுக்கு தேவையான அறிவியல் அனிமேஷன் வீடியோக்கள் கிடைக்கின்றன. Explore ஆப்ஷனில் பிரபல யூ-டியூப் சானல்களின் நிகழ்ச்சிகள் காணக் கிடைக்கின்றன. உலகின் குழந்தைகளுக்கான பிரபல சானல்களின் பெயர்களும் இதில் இருக்கின்றன. அவற்றை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலமாக அவற்றின் வீடியோக்களை பார்க்க முடியும்.

4 முதல் 10 வயது வரையான குழந்தைகளுக்கு இந்த ஆப் சிறந்த ஆசிரியராக அமையலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஏராளமான வீடியோக்கள் கிடைக்கின்றன. தமிழிலும் சில வீடியோக்கள் கிடைக்கின்றன. புராணக்கதைகள், ரைம்ஸ், அறிவியல் வீடியோக்கள் அனைத்தும் அனிமேஷன் மற்றும் வீடியோ வடிவில் இருப்பதால், குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருப்பதோடு, அறிவை வளர்க்க நல்ல வழியாகவும் அமையும். ப்ளே ஸ்டோரில் இருந்து இலவசமாக ஆப்பை டவுன்லோடு செய்துவிட்டு ஸ்மார்ட்போனையோ, டேப்லெட்டையோ குழந்தைகளிடம் தந்துவிட்டால் கற்றுக்கொள்வதற்கு ஒரு நல்ல ஊடகமாக இது அமையும்.

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்