வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (18/11/2016)

கடைசி தொடர்பு:15:09 (18/11/2016)

அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles

ஸ்பெக்டக்ல்ஸ்

டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது.

புதுமையான இன்ட்ரோ..!

ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க் மூலமாக இதனை வெளியிட்டுள்ளது.  Spectacles பற்றி செப்டம்பர் மாதமே அறிவித்திருந்தாலும், எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி அந்நிறுவனம் கூறவில்லை. அதேபோல ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை போன்று தாங்கள் அறிமுகப்படுத்தும் புதிய தயாரிப்பின் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கூட முன்கூட்டியே தகவல் அளிக்காமல், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வெனிஸ் கடற்கரையில் “Snapbots” என்னும் இயந்திரங்கள் மூலம், “Spectacles”ஐ ஸ்னாப்சாட் நிறுவனம் சர்ப்ரைசாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியை வைத்து என்னென்ன செய்யலாம்? 

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியில் வீடியோ எடுப்பதற்கு அது உங்கள் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வீடியோக்களை எடுத்த பின்னர் அதை மொபைலில் உள்ள ப்ளூடூத்தை ஆன் செய்து, பிறகு ஸ்னாப்சாட் ஆப்பை திறந்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆப்ஷன் மூலமாக மட்டுமே பகிரவோ அல்லது பார்க்கவோ இயலும்

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியின் மூலம் உங்களின் இரு கண்கள் பார்க்கும் விஷியங்களை 115 டிகிரி கோணத்தில், அதிகபட்சமாக 10 நொடிகள் கொண்ட வீடியோக்களை மட்டுமே எடுக்க முடியும் என்றாலும், நீங்கள் தொடர்ந்து எடுக்க விரும்பினால் அது தனித்தனி வீடியோவாக சேமிக்கப்படும்.

கண்ணாடியின் வலதுப்புறத்தில் வீடியோ எடுப்பதற்கான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. கண்ணாடியின் இடதுப்புறத்தின் மேற்பகுதியில் வீடியோவை ஆரம்பிப்பதற்கான பட்டன் உள்ளது,  நீங்கள் அதை அழுத்தியவுடன் வீடியோ எடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் விதமாக, கண்ணாடியின் இடதுப்புற ஓரத்தில் வெள்ளை நிறத்தில் எல்.இ.டி விளக்கு ஒளிரும்.

வீடியோவை ஆன் செய்வதற்கு பயன்படுத்திய அதே பட்டனை மீண்டும் அழுத்துவதன் மூலம், 10 நொடிக்கு முன்னதாகவே வீடியோவை முடிக்கவியலும்.

சில நிமிட வீடியோக்களை சேமிக்கும் திறன் கொண்ட நினைவகத்துடன் கூடிய இந்த கண்ணாடியில் சிறியளவில் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 

கண்ணாடியை சார்ஜ் ஏற்றவும், இருக்கும் பேட்டரி அளவை தெரிந்துகொள்ளவும் கண்ணாடியை அதன் உறையில் வைக்க வேண்டும். கண்ணாடி உறையிலேயே அதன் மேற்பகுதியில் USB உள்ளதால் எளிதாக சார்ஜ் செய்யலாம்.

ஸ்பெக்டக்ல்ஸில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, உங்கள் மொபைலில் போர்ட்ரைட் அல்லது லாண்ட்ஸ்கேப் ஆகிய இரண்டு முறைகளில் பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே எவ்வித மாற்றமும் இல்லாமல் காணவியலும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே இது நேரடியாக விற்கப்படுகிறது. ஸ்பெக்டக்ல்ஸ் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் ஸ்பெக்டக்ல்ஸில் எடுக்கப்பட்ட விதவிதமான வீடியோக்களும் தற்போது ஸ்னாப்சாட்டில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. 

ஸ்னாப்ச்சாட்டின் பயணமும் ஸ்பெக்டக்ல்ஸின் அறிமுகமும்:

2011-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்னாப்சாட் செயலி, உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதற்கு போதிய அறிமுகமும், பிரபலமும் இல்லாததால் பேஸ்புக் மற்றும் ட்விட்டரை போன்று அதிக எண்ணிக்கையிலான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. எனினும்  ஸ்னாப்சாட்டின் எதிர்கால பயன்பாட்டாளர்களில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

மக்கள் ஒருவரையொருவர் தொடர்புக்கொள்ளும் மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் முறையில் தொழில்நுட்பமானது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதுமையான குறுந்செய்தி முறைகளை போட்டோ, வீடியோ மற்றும் ஸ்டோரி போன்ற பல்வேறு வழிகளில் அளித்து வரும் ஸ்னாப்சாட் நிறுவனம் தற்போது $130 விலையில் ஸ்பெக்டக்ல்ஸை  அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களிடையே இன்னும் எதிர்பார்ப்பையும், சக நிறுவனங்களிடையே போட்டியையும் உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். 
பேஸ்புக் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஸ்னாப்சாட்டை கையகப்படுத்துவதற்கு ஆர்வமாக இருந்தாலும் எங்கள் நிறுவனத்தை எக்காலத்திலும் விற்பதில்லை என்பதில் ஸ்னாப்சாட் உறுதியாக உள்ளது.

 

 

 

தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்கப்படும் இந்த ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடிகள் கூடிய விரைவில் நம்ம மெரினா கடற்கரையிலோ அல்லது பாரிஸ் கார்னரிலோ கிடைக்கும் என்று நம்புவோம்!

- ஜெ. சாய்ராம்,  (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்