வெளியிடப்பட்ட நேரம்: 22:06 (29/11/2016)

கடைசி தொடர்பு:15:21 (22/03/2018)

யு.பி.ஐ பணப்பரிமாற்றம்: நீங்கள் அறியவேண்டிய வேண்டிய 10 விஷயங்கள் ! #UnifiedPaymentsInterface

யு பி ஐ பணப்பரிமாற்றம்

ரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த நாள் முதலே, சிரமத்தில் இருந்த பலருக்கும் கைகொடுத்தது இணையவழி பணப்பரிமாற்றங்கள்தான். இந்த மின்னணு பரிமாற்றங்களை நோக்கி அதிகம் முன்னேறவும், தற்போது அரசு நம்மை அறிவுறுத்தி வருகிறது.

1. மத்திய அரசின் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் சேவைதான் இந்த யு.பி.ஐ. ஒரு ஸ்மார்ட்போன், ஒரு ஆண்ட்ராய்டு ஆப், உங்கள் மொபைல் நம்பர் ஆகியவற்றை வைத்துக் கொண்டே இதில் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்பவும், பெறவும் முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. 

2. இந்த சேவையை பயன்படுத்த ஏதேனும் ஒரு வங்கியின் யு.பி.ஐ ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் சரி..மற்றொரு வங்கியின் ஆப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம். 

3. இதன் மூலம் நீங்கள் இன்னொருவருக்கு பணம் அனுப்ப அவரது வங்கி கணக்கு எண், IFSC கோட் என எதுவுமே வேண்டாம். நீங்களும் கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு எண், ஆன்லைன் பேங்கிங் விவரங்கள் போன்ற எதையும் கொடுக்க வேண்டாம்.

4. இதன் மூலம் உடனடியாக ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரை அனுப்ப முடியும். நாம் பணம் அனுப்புவதைப் போலவே நீங்கள் மற்றொருவரிடம் இருந்து உடனடியாக நம்மால் பணம் பெறவும்  முடியும்.

5. இதனை பயன்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்ப்போம். முதலில் ஏதேனும் ஒரு வங்கியின் ஆப்பை இன்ஸ்டால் செய்து அதில் உங்கள் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் ஆப்பை திறந்ததுமே, ஆப் உங்களின் அனுமதியைக் கேட்டுவிட்டு எஸ்.எம்.எஸ் மூலமாக உங்கள் போன் எண்ணை உறுதி செய்துகொள்ளும். அதேபோல ஆப்பை பயன்படுத்த பாஸ்வேர்டையும் செட் செய்துகொள்ள வேண்டும்.

6. பிறகு ஆப் உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை இதில் இணைத்துக் கொள்ளும். உங்களது போன் எண் ஆனது எந்த வங்கிகளில் எல்லாம் இணைக்கப்பட்டு உள்ளதோ, அந்தக் கணக்குகளை மட்டுமே இது எடுத்துக்கொள்ளும்.

7. கணக்கு விவரங்களை இணைத்தபிறகு விர்ச்சுவல் ஐடி எனப்படும் தனிப்பட்ட ஐடி.,யை உருவாக்கிக் கொள்ளவேண்டும். விர்ச்சுவல் ஐடி எனப்படும் இந்த முகவரிதான் பணம் அனுப்பவும், பெறவும் பயன்படும் முகவரி. இவற்றுடன் வங்கி மூலம் பெறப்பட்ட எம்.பின்னையும்(M-Pin) பதிவு செய்துவிட்டால், உங்கள் யு.பி.ஐ ஆப் பணம் அனுப்பவும், வாங்கவும் தயாராகிவிடும். இந்த ஆப்பில் உங்கள் ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம். இதன் உதவியுடன் ஆதார் எண் மூலமும் பணம் அனுப்ப முடியும்.

8. அதேபோல பிறரிடம் இருந்து பணம் பெற, பணம் பெற வேண்டியவரின் விர்ச்சுவல் முகவரியைக் கொடுத்து, எவ்வளவு பணம் பெற வேண்டும் என்பதனை கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த பணப் பரிவர்த்தனைக்கு ஒருநாள், ஒருவாரம் என நேர அளவும் செட் செய்துகொள்ள முடியும். நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்த உடனேயே, இந்த கோரிக்கை, நீங்கள் பணம் கேட்டு விண்ணப்பித்தவரின் மொபைலுக்கு சென்று விடும். உடனே அவர் தனது எம்-பின்னை கொடுப்பதன் மூலமாக பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். உடனே உங்கள் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்பது இல்லை. நீங்கள் நிர்ணயித்துள்ள கால அளவுக்குள் அதனை செய்தால் போதும். விர்ச்சுவல் முகவரி தவிர வேறு எதையும் நாம் பகிர்ந்துகொள்வது இல்லை என்பதால் பாதுகாப்பானது.

9. இதன்மூலம் கடைக்காரர்கள் கூட, தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்திற்கு பதிலாக, இதில் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும். ஷாப்பிங் செய்யும் போது கேஷ் ஆன் டெலிவரி போன்றவற்றிலும் இது பயன்படும்.

10. தற்போது இதில் இருக்கும் பெரிய பிரச்னையே, இதில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகள்தான். ப்ளே ஸ்டோரில் இருக்கும் எந்தவொரு யு.பி.ஐ App-ம் நல்ல ரிவ்யூக்களை பெறவில்லை. இதனை பிராக்டிக்கலாக பயன்படுத்தும் போதும், நிறைய சிக்கல்கள் வருகின்றன. டூயல் சிம் போன்களில் போன் எண்ணை உறுதி செய்வது, வங்கி கணக்குகளை இதில் இணைப்பது போன்றவற்றில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை விரைவாக சரிசெய்தால் மட்டுமே இதன் பயன் அனைவரையும் சென்றடையும். அதேபோல இதில் நிறையப்பேர் இணைந்தால் மட்டுமே இது வெற்றிகரமான முறையாகவும் அமையும்.

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்