ஜெயலலிதா இறப்பு அறிவிப்புக்கு முன்னரே ட்விட் செய்தாரா மோடி? உண்மை என்ன?!

அனைவரது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில்  ஒரு செய்தி பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பாகவே இந்திய பிரதமர் மோடி ட்விட் செய்துவிட்டார். மோடிக்கு எப்படி இது தெரிந்தது என்று பல சர்ச்சைகளை எழுப்பி வந்தனர். உண்மையில் என்ன தான் நடந்தது, மோடி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு தான் ட்விட் செய்துள்ளாரா? என்ற கேள்விகளுக்கு பின் உள்ள மர்மம் தற்போது நீங்கியுள்ளது.

ட்விட்டர் கணக்கு துவங்கும் போது நீங்கள் எந்த நாட்டுடைய நேரத்தில் இருக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கும் அதனை பெரும்பாலும் யாரும் கவனிப்பதே இல்லை. இந்திய நேரமான GMT 05:30 நேரத்தில் இருந்தால் மட்டுமே நமது நாட்டின் நேரம் தெரியும் மற்ற நேரங்களில் இருந்தால் அந்த நாட்டில் நம் நாட்டுக்கு இணையான நேரம் கிடைக்கும். 

அப்படி இருக்கும் போது வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவும் புகைப்படத்தில் மோடியின் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் 11 மணி 09 நிமிடத்திக்கு ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்ததாக பரவியது. அதன்படி பார்த்தால் இந்தியாவிலிருந்து 1 மணி 30 நிமிடம் தொலைவில் உள்ள ஒரு நாட்டில் அந்த ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி துபாய் அல்லது கல்ஃப் நாடுகளில் இந்த ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஃபேஸ்புக் பதிவு உங்கள் மொபைல் அல்லது கணினியின் நேரப்படி தான் நேரம் காட்டும். உங்கள் கணினி அல்லது மொபைலில் நீங்கள் நேரத்தை துபாய் நேரத்துக்கு மாற்றிவிட்டால் உங்கள் கணக்கில் மோடி 11 மணிக்கு ட்விட் செய்ததாகவே தோன்றும். இதனால் மோடி முன்னரே அறிவித்தார் என்று அர்த்தமில்லை. அதே சமயம் நீங்கள் இந்திய நேரத்தில் செட் செய்து பார்த்தால் 6-ம் தேதி 00:30  என்ற நேரமே காட்டும். 

ட்விட்டரில் இதனை சோதிக்க நீங்கள் கணினி அல்லது மொபைல் நேரத்தையெல்லாம் மாற்ற வேண்டாம். உங்கள் ட்விட்டர் கணக்கை லாக் இன் செய்து அதன் செட்டிங்கில் உங்கள் டைம்ஜோனை மாற்றினாலே போதும் மோடியின் ட்விட் நேரம் மாறிவிடும். இதன் மூலம் மோடி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ட்விட் செய்தார் என்ற மர்மம் விலகியுள்ளது. 

மோடியின் இரங்கல் ட்விட் மஸ்கட் நேரப்படி

மோடி

மோடியின் இரங்கல் ட்விட் இந்திய‌ நேரப்படி

இப்படி பிரபலங்கள் இறக்கும் போது, தேர்தலில்  வெற்றி பெற்றதை வாழ்த்திய போது என மோடியின் பெயர் சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்த முறை இதனை சில வதந்தி பேர்வழிகள் வேண்டுமென்றே செய்திருக்கலாம். இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற விஷயம் தான் இது போன்ற செயல்களுக்கு காரணம். இது போன்ற செய்திகள் வரும் போது உங்கள் நேரத்தில் உங்கள் ட்விட்டர் கணக்கு இருக்கிறதா என சோதித்து பார்த்து கொள்ளுங்கள்.  

- ச.ஸ்ரீராம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!