பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி | If you want burger just tweet to google

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (10/12/2016)

கடைசி தொடர்பு:18:27 (10/12/2016)

பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி

கூகுள்


திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம்,  ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்தால் போதும். உங்கள் கணக்கை டேக் செய்து கூகுள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தகவலை வழங்கிவிடும்.

உதாரணமாக நீங்கள் பர்கர் இமோஜியை டைப் செய்து அதோடு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்ய வேண்டும். உங்கள் ஜிபிஎஸ் தகவலின் படி பர்கர் நியர் பை என கூகுள் தேடலின் லின்க்கை உங்கள் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கூகுள் பாட் ட்விட் செய்யும். அப்பறம் என்ன அதன் வழியாகவே நீங்கள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஏற்கனவே குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் தங்களது தகவல் மற்றும் சேவைகளை பாட் மூலம் வழங்கி வருகின்றன. பாட் சேவையை பெரும்பாலான நிறுவனங்கள் மக்களுடன் இணைப்பில் இருக்க பயன்படுத்தி வருகின்றன. 

தெரியாத இடத்தில் இந்த சேவையை பயன்படுத்தி இடங்களை அறிவது வசதியாக உள்ளது என இதனை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஹோட்டல், வாகனம் என அனைத்தையும் எளிதில் தேர்ந்தெடுக்க இந்த சேவை வசதியாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இதன் தேடல் தளம் கூகுள் தேடல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் சமீபத்தில் டெக்ஸ்க்டாப் தேடலையும், மொபைல் தேடலையும் தனித்தனியே மாற்றிய‌மைத்தது குறிப்பிடத்தக்கது. மொபைல் தேடலின் துல்லியம் டெஸ்க்டாப்பை விட அதிகம் என்பதால் கூகுள் இதற்கு மொபைலை மீடியமாக தேர்ந்தெடுத்துள்ளது. அதிகமான ரேட்டிங், தேடல் ஆகிய அடிப்படையில் தேடல்கள் வரிசைப்படுத்தப்படுகிறது. இதனால் பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் தேடல் தரத்தில் தகவல்களை வழங்க முடியும் என்கிறது கூகுள்.

கூகுள், ஃபேஸ்புக் இரண்டுமே டேட்டாவை வைத்து மேஜிக் காட்டும் நிறுவனங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் இதுபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளது. மக்கள் பயனடையும் இது போன்ற விஷயங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

இதில் எல்லாம் சரியாக இருந்தாலும் ஜி.பி.எஸ் மூலம் ட்ராக் ஆகும் இடம், இமோஜியின் பெயர் ஆகியவற்றை சில நேரங்களில் த‌வறாக புரிந்து கொள்வது என சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் எழுகிறது. அதனைத் தாண்டி 80 சதவிகிதத்துக்கும் அதிகமான ட்விட்டுகள் சிறப்பான சேவையை வழங்குவதாக கூறப்படுகிறது. 

இப்போதே உங்கள் செல்போனில் ட்விட்டர் ஆப் மூலம் இந்த சேவையை பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்களோடு சேர்ந்து நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள விஷயங்களை இமோஜிக்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். 

- ச.ஸ்ரீராம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்