வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (23/12/2016)

கடைசி தொடர்பு:10:25 (23/12/2016)

"போதும்ப்பா...போதும்" கூகுள் இந்த ஆண்டு மூடுவிழா நடத்திய 8 சேவைகள்!

'கூகுள்' நெட் உலகின் சூப்பர்ஸ்டார்தான். பிக்ஸல் ஸ்மார்ட்போன் தொடங்கி விர்சுவல் ரியாலிட்டி முப்பரிணாமத்திரை வரை கூகுளின் அனைத்து அப்ளிக்கேஷன் மற்றும் ஹார்டுவேர் டிவைஸ்கள் மக்கள் மத்தியில் தாறுமாறு கலெக்‌ஷன் தான். ஆனால், கூகுளிடமும் ஃப்ளாப் லிஸ்ட் உண்டு. கடந்த சிலஆண்டுகளில் கூகுள் தயாரித்து வெளியிட்டு பல்வேறு காரணங்களால் முடக்கப்பட்ட எட்டு அப்ளிகேஷன்ககளைப் பற்றிப் பார்ப்போம். 

பிகாஸா (Picasa)

2002-ம் ஆண்டு, லைப்ஸ்கேப் நிறுவனம் உருவாக்கிய பிச்சர் வியூவர் அப்ளிகேஷன்தான் பிகாஸா. அதன் குறுகியகால வளர்ச்சியைப் பார்த்து 2004-ம் ஆண்டு கூகுள் அதனை வாங்கியது. டிஜிட்டல் படங்களைப்பார்க்க மட்டுமல்லாமல் எடிட் செய்ய, இணையத்தில் பகிர உதவும் இந்த அப்ளிகேஷனின் கண்கவர் தோற்றம் அனைவரையும் வசீகரித்தது. மிகச்சிறிய அப்ளிகேஷனாக இருந்தாலும் தேவையான படங்களை தேடித்கண்டுகொள்ளவும் அவற்றை இனம்பிரித்து நேர்த்தியாக ஒழுங்குபடுத்திக் காட்டுவதற்கும் பிகாஸா சிறந்த அப்ளிகேஷனாக இருந்துவந்தது. 'கூகுள் போட்டோஸ்' என்ற ஒருங்கிணைக்கப்பட்ட பிச்சர் வியூவர் அப்ளிகேஷனை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கித்தருவதற்காக மார்ச் 16, 2016 அன்று பிகாஸா அப்ளிகேஷன் முடக்கப்பட்டது.    

மை ட்ராக்ஸ் (My Tracks)

உலகமுழுவதும்  பிட்னஸ் பிரியர்களுக்குப்பிடித்த அப்ளிகேஷன் மை டிராக்ஸ். காலை நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் பயிற்சி செய்பவர்கள், தங்களது ஸ்மார்ட்போனை உடன் எடுத்துக்கொண்டால்  இந்த அப்ளிகேஷன் மூலமாக எவ்வளவு தூரம் ஓடுகிறோம், எவ்வளவு வேகமாக ஓடுகிறோம், ஓடும்போது எங்கெங்கு நின்று ஓய்வெடுக்கிறோம் எனத்தெரிந்துகொள்ளலாம். ஜிபிஎஸ் உதவியுடன் இயங்கிவந்த இந்த ஆன்லைன் அப்ளிகேஷன், 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சைக்கிள் பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள், தங்கள் வேகத்தைக்கணக்கிட சிறந்த அப்ளிகேஷனாக விளங்கிய 'மை டிராக்ஸ்', இந்த ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முடக்கப்பட்டது. இந்த அப்ளிகேஷனை முடக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட கூகுள், இதைவிட சிறந்த டிராக் அப்ளிகேஷன் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன எனவும் விரைவில் அவை  கூகுள் பிளேஸ்டோருக்கு வரும் எனவும் அறிவித்தது.

 

பெனோராமியோ (Panoramio)

2007-ம் ஆண்டு கூகுளின் ஸ்விட்சர்லாந்து பிரிவில் தொடங்கப்பட்டது 'பெனோராமியோ' அப்ளிகேஷனின் உருவாக்கம். பின்னர் கலிபோர்னியா மாகாணத்தின் மவுண்டைன் வியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. கூகுள்மேப் போன்ற அப்ளிகேஷன்தான் இது. கூகுள்மேப்பில் உலகின் பல்வேறு நாடுகள், ஊர்கள் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றின் பெயர், போகும் திசை ஆகியவற்றைப் பார்க்க முடியும். ஆனால் அந்தந்த இடங்களின் தெளிவான புகைப்படங்களை சரியாகப் பார்க்கமுடியாது. உலகிலுள்ள சிறந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் தாங்கள் எடுத்துவந்த, உலகின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை பெனோராமியோ அப்ளிகேஷனில் பதிவிட்டனர். இதன்மூலமாக இதுவரை பார்க்காத சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல திட்டமிடுபவர்கள் பெனோராமியோ மூலமாக அந்த இடத்தின் படங்களைப்பார்த்து ரசிக்க முடியும். மேலும் சிறந்த படத்துக்கு கமெண்டுகள் மூலமாக வாடிக்கையாளர்கள் பாராட்டு தெரிவிக்கலாம். பிடித்த படங்களை சேவ் செய்துகொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் நவம்பர் 4, 2016 அன்று முடக்கப்பட்டது. பெனோராமியோ, கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இருசிறந்த அப்ளிகேஷன்கள் இணைவதான் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு எதிர்காலத்தில் மேலும் சிறந்தசேவை வழங்கமுடியும் என்பது தான் கூகுளின் திட்டம். 

ஹேங்அவுட்ஸ் ஆன் ஏர் (Hangouts on Air)

கூகுளின் ஆன்லைன் எஸ்எம்எஸ் சேவையான கூகுள் டாக், சமூக வளைதள சேவையான கூகுள் பிளஸ், கூகுள் பிளஸ்ஸுடன் இணைக்கப்பட்டிருந்த வீடியோசாட் செய்யஉதவும் ஹேங்அவுட் ஆகிய மூன்றின் கலவைதான் 'ஹேங்அவுட்' சேவை. பேஸ்புக் மெஸஞ்சர், வாட்சாப் ஆகியவற்றைப் போல பிச்சர் மற்றும் வீடியோக்களைப்பகிர உதவிய ஹேங்அவுட்டின் பரிணாம வளர்ச்சியே ஹேங்அவுட் ஆன் ஏர். இதன்மூலமாக 'லைவ் ஸ்ட்ரீமிங்' எனப்படும் நேரலைக்காட்சி பதிவிடுதல் மற்றும் ஒளிபரப்பு சாத்தியமானது. வைபர், ஹைக் உள்ளிட்ட மெஸஞ்சர்களில் 'லைவ் ஸ்ட்ரீமிங்' சேவை போட்டியாக உருவாகவே, ஹேங்அவுட்ஸ் ஆன் ஏர் சற்று பின்தங்கியது. இந்தச் சேவையை இன்னும் மேம்படுத்த கூகுள் முடிவெடுத்தது. அதனால் கடந்த செப்டம்பர் மாதம் முடக்கப்பட்டது. மேம்படுத்தப்பட்ட அப்ளிகேஷன் வரும்வரை,  தற்காலிகமாக யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் வசதியைப் பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு கூகுள் அறிவுறுத்தியது.

கூகுள் கம்பேர் (Google Compare)

அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை அடமானம் வைக்கஏற்ற தனியார்வங்கிகள், சிறந்த ஆஃபர்கள் கொண்ட கிரெடிட்கார்டுகள், சிறந்த காப்பீட்டுத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒப்பிட்டுப்பார்க்க உதவும் அப்ளிகேஷன்தான் கம்பேர் டாட் காம் (Compare.com). இது 2013ம் வருடம் அட்மிரல் குழுமத்தால் தொடங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக கூகுளோடு இணைந்து செயல்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் கம்பேர் டாட் காம்- கூகுள் தொடர்பு முறிந்தவுடன், இந்த வலைதளத்தின் கூகுள் அப்ளிகேஷன் முடக்கப்பட்டது.

 

 

மேக், விண்டோஸ், லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் கூகுள்கிரோம் அப்ளிகேஷனின் பயன்பாடு (Chrome apps on Mac, Windows, Linux)

கூகுள் கிரோம் பிரவுசர் சேவைகளை ஆண்டிராய்டு ஓஎஸ் மட்டுமல்லாமல், ஆப்பிள், விண்டோஸ், லீனக்ஸ் உள்ளிட்ட ஓஎஸ்களிலும் பயன்படுத்த கூகுள் முயற்சிகள் மேற்கொண்டது. இந்தத் திட்டம் தடைப்பட்டதையொட்டி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட்களில் விண்டோஸ், லீனக்ஸ், மேக் ஓஎஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், 2018 முதல் கிரோம் ஸ்டோரைக் காணமுடியாது. மேலும் அதிலிருந்து எந்த கிரோம் அப்ளிகேஷன்களையும் பதிவிறக்கம் செய்ய முடியாது என கூகுள் அறிவித்தது. 

பிராஜக்ட் ஆரா (Project Ara)

ஸ்மார்ட்போன்களின்  எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, கூகுளால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சித்திட்டம் தான் 'பிராஜக்ட் ஆரா'. இந்தத் திட்டத்தில் ஸ்மார்ட்போன்களில் நிரந்தரமாகப் பொருத்தப்பட்ட, கேமரா, ஸ்பீக்கர் உள்ளிட்ட பகுதிகளை, வாடிக்கையாளர் தங்களது தேவைக்கேற்ப வேறுபகுதிகளுக்கு நகர்த்தும்படிசெய்ய, கூகுள் விஞ்ஞானிகள்குழு ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இந்த ஆராய்ச்சி 2016-ம் ஆண்டின் பாதியிலேயே கைவிடப்பட்டது.

கூகுள் நெக்சஸ் லைன் (Google Nexus line)

கூகுள் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான நெக்ஸஸ் ரக ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்களிடம் மிகுந்தவரவேற்பைப் பெற்றது. இதுவரை கூகுள் நெக்ஸஸ், எட்டு ரக ஸ்மார்ட்போன்கள், நான்கு  ரக டேப்லெட்கள், இரண்டு ரக மீடியா பிளேயர்களைத் தயாரித்து, அவற்றை விற்பனையில் களமிறக்கி வெற்றிக்கண்டது.  இந்த ஆண்டு கூகுளின் அதிநவீன பிக்ஸல் ரக ஸ்மார்ட்போன்களின் அறிமுகம், நெக்சஸ் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 

- வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்