வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (27/12/2016)

கடைசி தொடர்பு:11:00 (27/12/2016)

இணைய வேகம்... இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்... யாருக்கு சாதகம்?

இந்தியாவில் ஒரு பக்கம் கேஷ்லெஸ் பொருளாதாரம்; பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என கூறும் நேரத்தில் இணைய வேகம் பற்றி  வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் "நிஜமாவா” என அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் இணைய வேகத்தில் நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைவிடவும் பின் தங்கியுள்ளோம். இணைய பாதுகாப்பு, இணைய பயன்பாட்டு வேகம் ஆகியவற்றில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது. இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?

இணைய பாதுகாப்பு:

ஹேக்கர்களின் கைவரிசை உலக அளவில் அதிகரித்து வருகிறது. இணைய பாதுகாப்பு என்பது உலக அளவில் சவாலான விஷயம்தான். சமீபத்தில் இணைய பாதுகாப்பு குறைவு காரணமாக ஹேக்கர்கள் இந்தியாவில் உள்ள 32 லட்சம் ஏ.டி.எம் கார்டுகளின் பின் நம்பர்களை திருடியது குறிப்பிடத்தக்கது. இதே போல அரசு இணையதளங்கள், முக்கிய பிரமுகர்களின் மின்னஞ்சல்கள் முடக்கப்படுவதும் வழக்கமாகியுள்ளது. இணைய தாக்குதலுக்கு உள்ளாகும் உலகின் டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 

ஒட்டு மொத்தமாக ஒப்பிட்டால் உலக அளவில் இங்கிலாந்தில் 25.6 சதவிகித தாக்குதல்களும், சீனாலில் 20.7 சதவிகிதமும், அமெரிக்காவில் 17.04 சதவிகிதமும் இணைய தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவில் 6.95 சதவிகித தாக்குதல்கள் நடபெறுகின்றன.

இணைய வேகம்:

இந்தியாவில் என்னதான்  4ஜி தொழில்நுட்பம் வந்துவிட்டாலும் இன்னும் பல கிராமங்கள் இணையத்தால் இணைக்கப்படாத நிலையில் தான் இருக்கிறது. அடிப்படை இணைய வசதிகளுக்கான முயற்சி தொடர்ந்து இருந்தாலும் மக்களை இணையம் மூலம் இணைக்க போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறை தான்.

இணைய வேகத்தில் இந்தியா 96-வது இடம் பிடித்துள்ளது. இந்தியாவை விட பொருளாதார ரீதியாக பின் தங்கிய நேபால் மற்றும் பங்களாதேஷ் முறையே 90 மற்றும் 91-வது இடத்தைப் பிடித்துள்ளன. 

சராசரி இணைய வேகம்:

சராசரி இணைய வேகத்தில் சவுத் கொரியா முதலிடத்தில் உள்ளது. அதன் சராசரி இணைய வேகம் நொடிக்கு 26.3 மெகாபைட்டாக உள்ளது. ஹாங்காங் 2-வது இடத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் முறையே 6 மற்றும் 7-வது இடத்தில் உள்ளன. இந்தியாவில் சராசரியாக நொடிக்கு 4.1 மெகாபைட் இணையத்தையே மக்கள் பெறுகின்றனர்.

பாதிப்பை ஏற்படுத்துமா இணைய வேக குறைபாடு?

இன்னும் இந்தியாவில் வங்கிகள் முழுமையாக இணையத்தால் இணைக்கப்படவில்லை. இணைய சேவை என்பதும் நாடு முழுவதும் ஒரே அளவில் இன்னமும் போய்ச் சேரவில்லை. இந்த காரணங்கள் வங்கி பரிவர்த்தனை, கல்வி, சேவைகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா போன்ற பொருளாதார ரீதியாக மேம்பட்ட நாடு இணைய வேகம், பாதுகாப்பில் பின் தங்கியிருப்பது கவலையளிக்கும் விஷயம் தான். 

கேஷ்லெஸ் பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு முன்னால் அனைத்து வங்கிகளும் இணையத்தின் மூலம் இணைக்கப்படுவதும், முறையான இணையப்பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதும் அவசியமாகியுள்ளது. டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் நல்ல முடிவுகள் கிடைத்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா டிஜிட்டல் புரட்சியில் கால்பதிக்க முடியும்.

- ச.ஸ்ரீராம்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்