வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (29/12/2016)

கடைசி தொடர்பு:18:45 (29/12/2016)

வெடித்த சேம்சங் மொபைல்...திருடு போன யாகூ டேட்டா...வீழ்ந்த ஸ்மார்ட்வாட்ச்! #2016TechDisasters

ஒட்டுமொத்த சோஷியல் மீடியா உலகமும் இந்த ஆண்டின் பெஸ்ட், டாப் என பட்டியல் போட்டுக்கொண்டிருக்கிறது. மொபைலோ, லேப்டாப்போ... அதன் வழியேதான் இந்த லிஸ்டு எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த டெக்னாலஜி ஏரியாவில் 2016ல் நிகழ்ந்த முக்கியமான சறுக்கல்களை பற்றி ஒரு ஃப்ளாஷ்பேக்...

சேம்சங்கின் சோ சேட் சம்பவம்:

சேம்சங்


ஆப்பிள் 7 மாடலுக்கு உலகம் “வாவ்” போட்டுக்கொண்டிருந்தது. சும்மா இருக்குமா எதிர்க்கட்சியான சேம்சங்? அதுவும் தனது ட்ரம்ப் கார்டாக நோட் 7 மாடலை களத்தில் இறக்கியது. வயர்லெஸ் சார்ஜிங், தண்ணில போட்டாலும் பிரச்னையில்லை, எவ்ளோ கிட்ட வச்சு செல்ஃபி எடுத்தாலும் முகம் அழகா காட்டும் என்ற ரீதியில் பாசிட்டிவ் ரிவியூக்களாக குவிந்தன. ஒரே இரவில் மார்க்கெட்டின் ஹாட் மொபைல் ஆனது சேம்சங் நோட் 7. அந்த ஹாட்டேதான் சில நாட்களில் பிரச்னை ஆகியது.

ஃபோன் சூடாகுதுப்பா என சிலர் ஆரம்பிக்க, எனக்கு கொதிக்குது என சிலர் எண்ணெய் ஊற்ற... “என்னுடையது வெடிச்சே விட்டதுப்பா” என ஒருவர் முடித்து வைத்தார். அடுத்தடுத்து பல ஏரியாக்களில் சேம்சங் வெடிக்க, எல்லா மொபைலையும் திரும்ப பெற்றது சேம்சங். இந்த ஒரு சம்பவத்தால் சேம்சங் இழந்தது எவ்வளவு தெரியுமா? 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 


நிஜமாகவே ஸ்மார்ட்டா ஸ்மார்ட்வாட்ச்கள்?


”இன்னும் யார் யாரெல்லாம் ஸ்மார்ட்வாட்ச் தயாரிக்கல” - “ரமேஷ் அப்பாவும், சுரேஷ் அப்பாவும்” என்றற ரேஞ்சுக்கு எல்லா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் இறங்கின. “நிஜமாவே இதுதான் எதிர்காலமா” என்றெல்லாம் பட்டிமன்றங்கள் சென்ற ஆண்டு நடந்தன. ஆனால், மார்க்கெட் நிலவரமோ கலவரமாக இருந்தது. ஆப்பிள் தொடங்கி எல்லா நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பைக் குறைத்தன. மிகச் சொற்ப காலத்தில் ஸ்மார்ட் வாட்ச்களின் எதிர்காலம் இருண்டு போனது. எந்த “வாட்ச் மெக்கானிக்களாலும்” அதன் விற்பனையை அதிகரிக்க வைக்க முடியவில்லை.


யா.....ஹூஊஊஊஊஉ..டேட்டா திருட்டு


மெயில்ல சேவ் பண்ணி வச்சா பத்திரமா இருக்கும்னுதான் பல விஷயங்களை அதுல போட்டு வைக்கிறோம். பாஸ்வேர்டு இல்லாம படைச்சவனால கூட பார்க்க முடியாதுன்னு நம்பிட்டு இருக்கிறப்ப, அங்கங்க ஹேக்கிங் பத்தின செய்திகள் வந்து கதி கலங்க வைக்கும். “நாம சிம்ம ராசி... அதெல்லாம் நமக்கு நடக்காது"ன்னு நம்பிட்டு இருந்தப்பதான் அந்த அதிர்ச்சியான தகவல் வந்துச்சு. 500 மில்லியன் யூஸர்ஸோட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் என அறிவித்தது யாகூ. நாம கூகுள் ஆளுப்பா என நிறைய பேர் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்தச் சம்பவம்.


ஐஃபோன் 7 ஹெட்ஃபோன்


ஒரு பாடகரோட தோள்பட்டைல குத்தினா கூட 3.5 எம் எம் ஜாக் மூலமா பாட்டுக் கேட்கலாம் நம்பிட்டு இருக்கிறவங்கதான் இசை ரசிகர்கள். அந்த அப்பிராணிகளை சீண்டியது ஐஃபோன். இனிமேல வர்ற ஆப்பிள் மொபைல்கள்ல சி டைப் போர்ட் தான் இருக்கும். 3.5 எம் எம் ஜாக் இருக்காதுன்னு சொன்னதும், அரண்டு போயிட்டாங்க ம்யூஸிக் பாய்ஸ். ஒரு ஆர்டினன்ஸ் போட்டு ஒருநாள் முதல்வராகவே ஆக முடியுறப்ப, ஒரு அடாப்டர் போட்டு இத தீத்துக்கலாம்னு சைனாக்காரன் ஷைனிங்கா சொன்னாலும், லேசா கிர் அடிச்சுத்தான் போச்சு இசையுலகம்.

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்