இதற்காக... இப்படி... இப்போதுதான் மொபைல் பயன்படுத்துகிறார்கள்-அதிர்ச்சி சர்வே முடிவுகள்!

மொபைல்

மொபைலை தங்கள் உடலின் இன்னொரு பாகமாக பார்க்கிறது இன்றைய உலகம். தன்னிடம் இருந்து ஐந்து அடிக்குள் மொபைல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பாத்ரூமோ, பாட்டு கிளாஸோ.. அலுவலக மீட்டிங்கோ, காதலியுடன் டேட்டிங்கோ. எங்கு சென்றாலும் மொபைல் இல்லாமல் செல்வதில்லை. எடுத்து செல்வதும் கூட சரி. அங்கேயும் மொபைலை நோண்டி கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய சிக்கல். மொபைலை பிரிய நேர்ந்தால் பசலை நோய் ஆட்கொண்ட மாதிரி பதறிவிடுகிறார்கள். 

இப்போதெல்லாம் மொபைல் வைத்திருப்பவர்களின் முக்கிய கடமையே அவ்வபோது வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்துருக்கா? பேஸ்புக்ல யாராவது நமக்கு லைக் போட்டங்களா? என்று செக் செய்வது தான். இதில்  தூங்கி எழுந்தவுடன் மொபைலை கையில் எடுப்பவர்கள் பலர்!

இது தொடர்பாக உலகளவில் ஒரு சர்வேயை டிலோய்ட் என்ற ஒரு நிறுவனம் நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களிடம் அவர்களது மொபைல் பயன்பாட்டை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் கொஞ்சம் எதிர்பார்த்தவை தான் என்றாலும்,  எச்சரிக்கை மணியையும் அடிக்கின்றன

61% பேர் காலையில் கண் விழித்த 5 நிமிடங்களுக்குள் தங்கள் மொபைலை செக் செய்வதாக தெரியவந்துள்ளது.மேலும்,

88% பேர் எழுந்த 30 நிமிடங்களுக்குள் தங்கள் போன்களை செக் செய்வதாகவும்,96% பேர் ஒரு மணிநேரத்துக்குள் செக் செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ,

74% பேர் தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தங்கள் மொபைலை செக் செய்கின்றனர்.

இதில் காலை எழுந்தவுடன் மொபைலில் சோஷியல் மீடியாக்களையே அதிக பேர் பார்க்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில்  வாட்ஸ்அப்  போன்ற மெஸெஜிங் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. 

இந்த சர்வே உலகம் முழுவதும் உள்ள 53000 பேரிடம் எடுக்கப்பட்டது, அதில் 2000 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்தவர்களில் 50% பேருக்கு மேல் பணவர்த்தனைகளை மொபைல் மூலமாகவே செய்கின்றனர் . 54% பேர் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு என்பதை மொபைல் ஆப் மூலமாகவே பார்க்கிறார்கள். மின்கட்டனம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றை 52% மொபைல் மூலம் செலுத்துகிறார்கள்.

2000 இந்தியர்களில் 53 % தங்கள் மொபைலை ஆன்லைனில் வாங்கியிருக்கிறார்கள். மற்றவர்கள் கடைகளுக்குச் சென்று நேரில் வாங்கியிருக்கிறார்கள்.

இந்த சர்வேயிலிருந்து தினசரி வாழ்க்கையை சில ஆண்டுகளில் திறன்பேசிகள் எந்தஅளவு மாற்றியுள்ளது என்பது நன்றாக தெரியவந்துள்ளது.

 

- மு.காசி விஸ்வநாதன்

மாணவப் பத்திரிகையாளர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!