கோடி ரூபாய் பரிசளிக்குமா மோடியின் 'பீம்'! | Modi Introduces BHIM App for cashless transaction

வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (31/12/2016)

கடைசி தொடர்பு:09:49 (31/12/2016)

கோடி ரூபாய் பரிசளிக்குமா மோடியின் 'பீம்'!

டெல்லியில்  நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பணமில்லா பரிவர்த்தனையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக பீம் என்ற ஆண்ட்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தினார்.Bharat Interface for Money என்பதன் சுருக்கமாக பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியின் மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர் இனிமேல் பொதுமக்களின் விரல்நுனியில் வங்கிச்சேவைகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களில் சில..

அம்பேத்கர் அவர்கள்  எப்படி ஏழைகளுக்காகவும்,தாழ்த்தப்பட்டோர் வாழ்க்கை தரம் உயர பாடுபட்டாரோ அதைப்போன்று இந்த செயலி செயல்படும். அதனால் தான் அவரது முதல் பாதி பெயரான பீமாராவ் என்பதும் இந்த செயலியின் பெயரில் உள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகையில் 65 சதவிகிதம் பேர் இளைஞர்களே. அதாவது 35 வயதிற்கும் குறைவானவர்களே. அவர்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனையை உபயோகப்படுத்தினால் இந்தியாவின் வரலாற்றில் அது மகத்தான மாற்றமாக இருக்கும்.

பீம் செயலி அரசின் அதிகாரப்பூர்வ செயலியாகும். இது மிகவும் பாதுகாப்பான பணமில்லா பரிவர்த்தனைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வசதி இல்லாதவர்கள் தங்கள் விரல்ரேகையை பயண்படுத்தலாம்.

பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படுகிறது .இருந்தாலும் தற்போது பணமில்லா பரிவர்த்தனைகள்  சாத்தியமில்லை என சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்.

சில அரசியல்வாதிகள் டிமானிட்டைசேஷன் நடவடிக்கையை எலியை பிடிக்க மலையை உடைக்கிறார் என விமர்சிக்கின்றனர். அது உண்மைதான் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டும் எலிகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கைகள்.

ஏழை நாடான இந்தியா மின்னணு முறை வாக்களிக்கும் முறையை கொண்டுவந்தபோது உலக நாடுகள் வியந்து பார்த்தனவோ அப்படியே தற்பொழுதும் இந்த நடவடிக்கைகளை வியந்து பார்க்கின்றன.

நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ஏழை மக்களையும் இந்தியாவையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காகாவே.

"பீம்" செயலி உபயோகத்தை அதிகப்படுத்த அடுத்த 100 நாட்களுக்கு 15000 பேருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களும்,ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளன்று குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 1 கோடி பரிசளிக்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக 2017 ஜனவரி முதல்  தினசரி குறைந்தபட்சமாக ஐந்து பணப் பரிவர்த்தனைகளை பீம் செயலி மூலம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

"பீம்" செயலியை பயன்படுத்துவது எப்படி..

ஏற்கனவே வங்கி பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் UPI செயலியை ஒருங்கிணைத்து மேம்படுத்தப்பட்டது தான் "பீம்" செயலி

கூகுள் பிளேஸ்டோரில் இருந்து "பீம்" செயலியை தரவிறக்கலாம்.

செயலியின் உள்ளே நுழைந்தவுடன் மொபைல் எண் தானாகவே உறுதி செய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயலியை உபயோகப்படுத்த வங்கி கணக்கிற்கு கொடுக்கப்படுள்ள மொபைல் எண் உபயோகிக்கும் மொபைலில் இருப்பது அவசியம்.

பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நமக்கென்று தனியாக பாஸ்கோடை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்.

பணம் அனுப்பவும், பெறவும் மொபைல் எண்,வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம்.

தற்பொழுது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே சேவைகளை பயன்படுத்த முடியும்.

பீம் செயலியை டவுன்லோடு செய்வதற்கு க்ளிக் செய்யவும்

மு.ராஜேஷ்
மாணவப் பத்திரிகையாளர்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்