வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (04/01/2017)

கடைசி தொடர்பு:14:39 (04/01/2017)

ஐபோன் 8, ஒன் ப்ளஸ் 4, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்... 2017-ன் ஸ்மார்ட்போன்களில் என்ன விசேஷம்?

ஸ்மார்ட்போன்ஸ் 2017

 

2016 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஐபோன் 7, ஏமாற்றம் அளித்த கேலக்ஸி நோட் 7, கூகுளின் பிக்ஸல் என எக்கச்சக்க ஏற்ற இறக்கங்கள். இதற்கிடையே தனது புதிய 4G சேவையான ஜியோவின் ஆட்டத்தை துவக்கி வைத்த ரிலையன்ஸ், Lyf என்ற பிராண்டில் வரிசையாக 4G வசதி கொண்ட பட்ஜெட் போன்களையும் வெளியிட்டது. இதையடுத்து 4G போன்களுக்கு புதிய மவுசையும் உருவாக்கிவிட்டது. 2015-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் 2016-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் இருந்த அம்ச வித்தியாசங்கள் மிகவும் பெரியது.

மிகப்பெரிய அளவில் முன்னேற்றங்களை ஸ்மார்ட் போன்கள் கண்டன. முக்கியமாக பேட்டரியின் அளவை முன்னேற்ற அனைத்து நிறுவனங்களும் முயற்சி செய்தன. 4000 mah அளவு பேட்டரிகள் கொண்ட போன்கள் நிறைய சந்தைக்கு வந்தன. அது மட்டுமல்லாமல் USB Type-C Port என்று கூறப்படும் புது வகை நவீன சார்ஜிங் முறை பிரபலமடைந்தது. ஐ போன் 7 வெளியான போது 3.5 மில்லிமீட்டர் ஆடியோ ஜாக் வசதி இல்லாதது பெரிய அதிர்வலையை உருவாக்கியது. இதே போல இந்த வருடமும் புதுப்புது பாய்ச்சல்களை நிகழ்த்த காத்திருக்கின்றன நிறுவனங்கள். அப்படி இந்த வருடம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் குட்டி அறிமுகம் இங்கே...

ஆப்பிள் ஐபோன் 8: 

ஐபோன் 8

அடுத்த ஐபோனை மெல்லிய கண்ணாடி அளவு மட்டுமே தடிமன் கொண்டதாக உருவாக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக ஒளிபுகும் போன்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் ஜானி ஐவ் இவ்வருடம் அதை சாத்தியமாக்குவார் என்கின்றனர் வல்லுநர்கள். ஆப்பிள் நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு விழா என்பதால் பெரிய அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கலாம். முக அடையாளம், விழி அடையாளம் என்று நிறைய பாதுகாப்பு அம்சங்களையும் எதிர்ப்பார்க்கலாம். ஆனால் இது ஐபோன் 8 என வெளிவராது. ஐபோன் 7S என மட்டுமே வரும் என்றும் செய்திகள் உலா வருகின்றன. காத்திருப்போம்!

எச்.டி.சி 11:

HTC 11

போன வருடம் கொஞ்சம் சைலன்ட்டாக இருந்த HTC நிறுவனம் இந்த ஆண்டு, கொஞ்சம் இறங்கி அடிக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த போனாக HTC 11 போனை களமிறக்க இருக்கிறது அந்நிறுவனம் . அதில்  8 ஜி.பி ரேம், 256 ஜி.பி மெமரி, ஸ்னாப் டிராகன் 835, சிறந்த பேட்டரி, $G வோல்டே, குயிக் சார்ஜிங் வசதி அடங்கிய போனை எதிர்பார்க்கலாம். 2 வேரியன்ட்களின் வரவிருக்கிறது.

LG ஜி6:

LG ஜி 6

சென்ற வருடம் போனின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் கொண்ட ஹூடை கழற்றி மாட்டும் ஸ்பிரிட் G5 வகை போனை அறிமுகப்படுத்திய இந்நிறுவனம், அதன் தொடர்ச்சியாக G6 வகை போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இணைப்பில்லா சார்ஜிங் வசதியை அடுத்த கட்டத்துக்கு இந்த போன் அழைத்துச் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்நிறுவனம், இந்த போனிலும் அதற்குத் தேவையான அம்சங்களை கொண்டுவரும் என நம்பலாம்.

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் போன்:

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோக்கியாவின் உரிமத்தை பெற்று விண்டோஸ் வகை போன்களை வெளியிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.நோக்கியாவின் பெயர் இருந்தவரை லூமியா வகை போன்கள் நன்றாக விற்றன. ஆனால், நோக்கியாவின் பெயரை எடுத்தவுடன் அவ்வளவாக விற்பனை இல்லை. எனவே, கூகுளின் நெக்சஸ்,ஆப்பிள் ஐபோன் போன்று தனக்கென ஒரு பிராண்ட் உருவாக்கிக் கொள்ள நினைக்கிறது மைக்ரோசாஃப்ட்.  எனவே சர்ஃபேஸ் புக், சர்ஃபேஸ் போன் என வரிசையாக வெளியிடவுள்ளது. வெளியிடப்பட்டால் 4 ஜி.பி ரேம் 128 ஜி.பி மெமரி, 21 எம்.பி, 8 எம்.பி கேமராக்கள், சர்ஃபேஸ் பென் வசதி, USB Type-C வசதி என உயர்தர போனாக வரலாம்.

ஒன் பிளஸ் 4:

ஒன் பிளஸ் 4

ஒன் பிளஸ் நிறுவனமானது மிட் ரேஞ் ஆப்பிள் என கூறலாம். மிகக் குறைந்த விலைக்கு போன்களை செய்கிறோம் என்று தரமற்ற போன்களை செய்யாமல், அதே போல் உயர் தர போன் என்று மிக அதிக விலைக்கும் விற்காமல் மிட் ரேஞ்சில் கோல் அடிக்கும். 6 ஜி.பி ரேம், மிகத்தரமான கேமரா என ஒன் பிளஸ் 3 வைரல் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து ஒன் பிளஸ் 3Tயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த வருடம் ஒன் பிளஸ் 4 வெளியாகவுள்ளது. 8 ஜி.பி ரேம், 23 அல்லது 21 எம்.பி கேமரா, 4000 mAh பேட்டரி என உயர்தர வசதிகளுடன் வரவிருக்கிறது இந்த போன். 

சாம்சங் நோட் 8:

சாம்சங் நோட் 8

சேம்சங் நிறுவனத்துக்கு இது கத்தி மேல் நடக்கும் காலம். மிகக்கவனமாக அறிவுப்புகளை செய்ய வேண்டும். மிக எதிர்ப்பார்ப்புகளுடன் வந்த சாம்சங் நோட் 7 வெடித்து ஏமாற்றத்தை தந்தது. சாம்சங் S7 போனும் வெடித்ததாக தகவல்கள் பரவின. நோட் வகை போன்களை சாம்சங் விட்டுவிடும் என்று சிலர் கூறினாலும், நோட் 7 ஏற்படுத்திய காயங்களை சரி செய்ய நோட் 8 கண்டிப்பாக வெளிவரும் என்கின்றனர் சிலர். அப்படி வந்தால் கண்டிப்பாக நோட் 7-ஐ விட மிக அதிக அம்சங்களை கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்சி S8 மற்றும் S8 பிளஸ்:

சாம்சங் கேலக்சி S8 மற்றும் S8 பிளஸ்

 சாம்சங் நிறுவனம் தனது எட்ஜ் வகை போன்களையும் கேலக்சி வகை போன்களையும் இணைத்தது. இதனை தொடர்ந்து S7 எட்ஜ் போன் வெளிவந்தது. S7, S7 எட்ஜ் வகைகளை போலவே, இந்தபோன்களுக்கும் இடையே ஸ்க்ரீன் அளவு தான் வித்தியாசம் இருக்கும். மேலும், S7 போலவே, மெடல் கண்ணாடி வடிவத்தைக் கொண்டு வெளிவரலாம். மேலும் முழு HD அமோலெட் வகை ஸ்க்ரீனை பெற்றிருக்கலாம். அது மட்டுமன்றி கேமராவில் பெரிய வளர்ச்சியை எதிர் பார்க்கலாம். 

சோனி எக்ஸ்பீரியா Z6:

சோனி எக்ஸ்பீரியா Z6

சோனி நிறுவனம் காலத்துக்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. குறைந்த விலையில் ஓரளவுக்கு சிறப்பம்சங்களைக் கொண்ட போன்களை அந்நிறுவனம் வெளியிடுவதில்லை. உயர்தர போன்களை மட்டுமே செய்து வருகிறது. அதன் வகையில் நாம் எதிர்பார்க்கும் அடுத்த வெளியீடு எக்ஸ்பீரியா Z6 போன். 

- ம. சக்கர ராஜன்
மாணவப் பத்திரிகையாளர் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்