வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (12/01/2017)

கடைசி தொடர்பு:17:24 (12/01/2017)

தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்த ஆப்பிள்...போட்டிபோடும் ஃபேஸ்புக், கூகுள்...எதில் தெரியுமா?

ஆப்பிள்

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில், முன்னிலை வகிக்கிறது ஆப்பிள். சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வுப் பட்டியலில் ஆப்பிள் இந்த இடத்தினை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் மரபுசாரா ஆற்றல் பயன்பாட்டில் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள், ஆப்பிளை விட பின்தங்கியுள்ளன. இதுகுறித்து பெருமை அடைவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்.

தற்போதைய நிலையில் உலகின் மொத்த மின்சக்தியில் சுமார் 7 சதவீதத்தை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே எடுத்துக் கொள்கின்றன. அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் இணைய பயன்பாடு ஆகியவற்றால் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. எனவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்று மின்சக்தியை நோக்கி முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அதுவும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற மரபுசார் ஆற்றல் மூலங்கள், புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றொரு நேரடி தொடர்பு கொண்டிருக்கும் நிலையில், இவற்றின் அவசியம் இன்னும் அதிகரிக்கின்றன. எனவே இதனை ஊக்குவிக்கும் வகையில் 2009-ம் ஆண்டு முதல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆற்றல் மூலங்களை கண்காணித்து அதன் முடிவுகளை வெளியிட்டு வருகிறது கிரீன்பீஸ் அமைப்பு.

கூகுள் நிறுவனத்தின் மின் கொள்முதல்

இந்த விஷயத்தில் எல்லா தொழில்நுட்ப நிறுவனங்களுமே தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன. உதாரணமாக '2017-ம் ஆண்டு முதல் 100 சதவீதம் மரபுசாரா ஆற்றல் என்ற இலக்கை எட்டுவோம்' என கடந்த ஆண்டு அறிவித்தது கூகுள். மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் மரபுசாரா மின்சக்தியை கொள்முதல் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. 2015-ம் ஆண்டு மட்டும் தனது 44 சதவீதம் மின்சக்தியை காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் மூலமே பெற்றிருந்தது. 100 சதவீதம் இலக்கு என்றாலும் கூட, கூகுள் முழு மின்சக்தியையும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் மூலம் பெறாது. அதே சமயம் கூகுள் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவும், கூகுள் அந்த ஆண்டு கொள்முதல் செய்த மரபுசாரா மின்சக்தியின் அளவும் சரிசமமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும். இது போன்ற காரப்பரேட்டுகளே முந்திக் கொண்டு மரபுசாரா மின்சக்தியை நோக்கி தற்போது முன்னேறக் காரணம், பருவநிலை மாற்றம் என்ற ஒரு விஷயம்தான். வருங்காலங்களில் அதனால் ஏற்படும் பிரச்னைகளை முன்வைத்தே இந்த முடிவை எடுத்துள்ளன.

அதுவும் இணையம் சார்ந்து இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மரபுசாரா ஆற்றலை நோக்கி எந்தளவு முன்னேறுகின்றன என்பதனை கிரீன்பீஸ் அமைப்பு 2009-ம் ஆண்டு முதல் அளவிட்டு வருகிறது. நிறுவனங்கள் மத்தியில், தற்போது இந்த விஷயத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம்.

கிரீன்பீஸ் அறிக்கை

இதன்படி இந்த ஆண்டு வெளியிட்ட கிரீன்பீஸ் அமைப்பின் ஆய்வு முடிவில், மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் கிளீன் எனெர்ஜி இன்டெக்ஸ்-ல் 83% பெற்று முதலிடத்திலும், ஃபேஸ்புக் 67% பெற்று இரண்டாவது இடத்திலும், கூகுள் 56% பெற்று மூன்றாமிடத்திலும் இருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றின் மின் நுகர்வை அவை பயன்படுத்தும் கருவிகள், நெட்வொர்க்ஸ், டேட்டா சென்டர்கள், உற்பத்தி என நான்காக பிரிக்கலாம். இவற்றில் கருவிகள் 34% , நெட்வொர்க்ஸ் 29%, டேட்டா சென்டர்கள் 21%, உற்பத்தி 16% மின்சக்தியை எடுத்துக் கொள்கின்றன. டேட்டா சென்டர்கள் ஆனது இணையத்தின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றுகின்றன.

அதிகமான முதலீடு, தொழில்நுட்ப வசதிகள் என நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் கூட, மரபுசாரா ஆற்றல் மூலங்களை பெருக்க வேண்டிய மற்றும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வருங்காலங்களில் நிச்சயம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனம். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க, இதுபோன்ற முயற்சிகள் இன்னும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

- ஞா.சுதாகர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்