வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (20/01/2017)

கடைசி தொடர்பு:08:02 (20/01/2017)

போராட்ட இளைஞர்களிடம் தீயாக பரவும் Firechat ஆப்! #HowItWorks

ஃபயர்சாட் firechat App

ல்லிக்கட்டு மற்றும் விவசாய பிரச்சனைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் நடக்கும் மாணவர்களின் போராட்டத்தில், சமூக வலைத்தளங்களின் பங்கு அளப்பரியது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருக்கும் மக்களை ஓரிடத்தில் குவிய செய்ய இவை உதவி புரிகின்றன. கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும் கூட, கல்லூரிகளின் வாட்ஸ்அப் க்ரூப்களில் அருவியாக கொட்டுகின்றன உணர்ச்சி கொந்தளிப்புகள். இன்னொரு பக்கம் ஃபேஸ்புக்கில் களநிலவரங்கள் நொடிக்கு நொடி அப்டேட் செய்யப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் போராட்ட வீடியோக்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன. இவை அனைத்தும் வழக்கமான விஷயங்கள்தான். இந்த வரிசையில் தற்போது புதிதாக ஒரு விஷயம் இணைந்துள்ளது. அதுதான் இந்த ஃபயர்சாட் (FireChat). வாட்ஸ்அப் போலவே மெசேஜிங் அப்ளிகேஷன்தான் இந்த ஃபயர்சாட். ஆனால் செயல்படும் விதம், பயன்பாடுகள் அனைத்தும் வேறு மாதிரியாக இருக்கிறது.

அதுவும் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் தீவீரம் அடையத் துவங்கியதுமே, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி, எல்லா வாட்ஸ்அப் க்ரூப்களிலும் வந்து விழுகின்றன மெசேஜ்கள். 'போலீசார் ஜாமர் வைத்தாலோ, இணைய வசதியை துண்டித்தாலோ கூட இதன் மூலம் சாட் செய்யலாம். எனவே இன்ஸ்டால் செய்யுங்கள்' என தகவல்கள் வர, உடனே இன்ஸ்டால் செய்து கொண்டிருக்கின்றனர் இளைஞர்கள். 

எப்படி செயல்படுகிறது ஃபயர்சாட்?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் போன்ற ஆப்கள், இணைய உதவியுடன் இயங்குகின்றன. உங்கள் போனில் இணைய வசதி இருக்கும் போது மட்டுமே இவற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால் இந்த ஃபயர்சாட்டில் இணையவசதி தேவையில்லை. உங்கள் மொபைல் போனின் ப்ளூடூத் அல்லது வைஃபை ஆகிய இரண்டில் ஒன்று இயங்கினாலே போதும். இதற்கும் உங்கள் மொபைல் டேட்டாவிற்கும் தொடர்பு கிடையாது.

ஃபயர்சாட் firechat App

முதலில் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, உங்களுடைய மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு உங்கள் மொபைலின் ப்ளூடூத் ஆன் ஆகிவிடும். உங்கள் மொபைலில் இன்டர்நெட் வசதி இல்லையென்றால் 200 மீட்டர் வரையிலும் இதன் மூலம் தகவல் அனுப்ப முடியும் என்கிறது ஃபயர்சாட். இணைய வசதி இருந்தால், வாட்ஸ்அப் போல உலகம் முழுவதும் இருக்கும் அனைவர்க்கும் அனுப்பலாம்.

நீங்கள் இதனை ஆன் செய்ததுமே, உங்களுக்கு அருகில் இருப்பவர்களின் பெயர்களை பரிந்துரை செய்கிறது. உங்களை சுற்றிலும் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால், நீங்களே அவர்களின் யூசர் நேம் கொடுத்து கண்டறியலாம். இதன்மூலம் இரண்டு நபர்கள் தனியாகவும் மற்றும் அனைவருக்கும் தெரியும் வகையில் பொதுவாகவும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும். 

இதன் சிறப்பம்சம்:

ஆனால் இதன் மூலம் அதிக தூரத்திற்கு செய்திகளை அனுப்ப முடியாதே என்ற சந்தேகம் வரலாம். அங்குதான் இதன் இன்னொரு சூட்சுமம் இருக்கிறது. சென்னையில் இருக்கும் ஒரு நபர் கோவையில் இருப்பவருக்கு இணைய வசதி இல்லாத இடத்தில் இருந்து, செய்தி அனுப்ப வேண்டும் என்றாலும் தாரளமாக அனுப்பலாம். எப்படி செய்தி பரவும் தெரியுமா?

ஃபயர்சாட் firechat App

உதாரணமாக 100 பேர் கொண்ட ஒரு குழுவில், ஒருவர் சென்னையில் இருந்து கோவைக்கு செய்தி அனுப்புகிறார்கள் என்றால், அந்த செய்தியானது அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொபைலுக்குமே ப்ளூடூத் மூலம் செல்லும். 

ஒருவேளை அந்த குழுவில் இருக்கும் யாரேனும் ஒருவரின் மொபைலுக்கு இணைய வசதி கிடைத்தால், அதன் மூலம் கோவையில் இருக்கும் நபருக்கு வந்துசேரும். செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இடையே எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இருக்கலாம். இருவருக்கும் இடையே எத்தனை பேர் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த செய்தி மற்ற அனைவரின் மொபைல் உதவியுடன் உரிய  இடத்திற்கு வந்து சேரும்.

ஆனால் மெசேஜ் அனைத்துமே End to End என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்பதால், இடையே யாரும் படிக்க முடியாது. மாறாக ஒவ்வொரு மொபைலும் இதே போல மற்றவர்களின் மெசேஜ்களை உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்க்க ஒரு தபால்காரர் போல செயல்படும். இதன் பலமே, இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இணைய இணைப்பு இருக்கும் போது பிரச்னையில்லை. அது இல்லாத சமயங்களில், அதிகமான பேர் இந்த ஆப்பை பயன்படுத்தினால் அதிகம் பேரை இணைக்க முடியும். peer-to-peer நெட்வொர்க் மூலம் இப்படி அனைவரையும் இணைக்கிறது இந்த ஃபயர்சாட். போராட்டங்கள், அதிகம் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இதனை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும். ஆனால் நமக்கு இணைய வசதி இருப்பதால், இதன் பயன்பாடு நம்மிடையே அதிகமாக இல்லை.

ஹாங்காங் புரட்சியும், ஜல்லிக்கட்டும்:

2014-ம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற குடை புரட்சியின் போது, அதிகமான மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் பெரும்பாலும் இணைய இணைப்பு மற்றும் மொபைல் சேவைகளையே நம்பியிருந்தனர். அப்போது அந்நாட்டு அரசு மொபைல் சேவைகள் மற்றும் இணைய சேவையை துண்டிக்கப்போவதாக தகவல்கள் வர, அவர்கள் உடனே இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த துவங்கினர். அப்போது ஹாங்காங்கில் பிரபலம் அடைந்தது இந்த ஆப். சில தொழில்நுட்ப குறைபாடுகள், ப்ளூடூத் மற்றும் வைஃபை தேவை என்பதால் குறையும் மின்சக்தி போன்றவை இதன் சிக்கல்கள். பொதுவாக இதன் மூலம் பேசிக்கொள்ளும் போது, காவல் துறையினர் கூட, உங்கள் தகவல்களை பார்க்க முடியும். 

அதே சமயம், போராட்ட குழுவில் உடனடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ள இது மிக உதவியாக இருக்கிறது எனலாம். தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் அனைவரும், தங்கள் ஊரில் நடக்கும் போராட்ட விவரங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆப், உங்களுடைய இருப்பிடத்தையும் காட்டுவதால், யார் எந்த ஊரில் இருந்து பேசுகிறார்கள் என்பதையும், மற்றவர்கள் கண்டறிய உதவுகிறது. தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களில் சில இங்கே...

ஃபயர்சாட் ஆப் Firechat app


ஆந்திராவில் இருந்து சென்னை நிலவரத்தை கேட்கிறார் ஒருவர். அனைவரையும் சென்னை மெரினாவை நோக்கை அழைக்கிறார் இன்னொருவர். காவல் துறையினர் கைது செய்ய திட்டமிடுகின்றனர் என இடையே தகவல்களை பரிமாறுகிறார் மற்றொருவர். இப்படி ஒவ்வொரு ஊரில் இருந்தும், தகவல்கள் தற்போது விழுந்தவண்ணம் இருக்கின்றன.

எந்த தொழில்நுட்பத்தை தடுக்க நினைத்தாலும், அதை இன்னொரு தொழில்நுட்பம் உடைத்து விடுகிறது. தடுப்பதும் அதுவே! உடைப்பதும் அதுவே!

இதுகுறித்த வீடியோ...

 

 

- ஞா.சுதாகர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்