வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (23/01/2017)

கடைசி தொடர்பு:11:42 (23/01/2017)

நேற்றும் இன்றும்... மெரினாவில் என்ன நிலைமை என்பதை விளக்கும் கூகுள்!

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. கூகுள் மேப்ஸ் மூலம்  பார்த்தால் மெரினாவில் குவிந்துள்ள போராட்டக்காரர்களின் எண்ணிக்கையை காண முடியும். இதன் படி நேற்று அந்த இடத்தில் கூட்டம் என்பது முழுவதுமாக இருந்தது. அதனால் நேப்பியர் பாலம் முதல் லைட் ஹவுஸ் வரை மொத்த மெரினாவும் சிவப்பு நிறத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதை கூகுள் மேப்ஸ் விளக்கியது. அதே சமயம் இன்று போராட்டக்காரர்கள் வெளியேற்றம், போலிஸ் தடியடி என நடப்பதால் மெரினாவில் கூட்டம் குறைந்துள்ளது என்பதை கூகுள் காட்டுகிறது.

மெரினா நேற்று

மெரினா

மெரினா இன்று

கூகுள் மேப்ஸ் எப்படி காட்டும்?

2009-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் Crowdsourcing என்று கூறப்படும் தொழில்நுட்பத்திற்கு மாறியது. அதாவது மக்களிடமிருந்தே தகவலை பெற்று அதனை சீர் செய்து மக்களுக்கே திரும்பி அளிக்கும் முறை. இதற்கு முதல் தேவை மக்களின் மொபைல் போனில் “லொக்கேஷன்” வசதி ஆன் செய்திருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் எங்கு இருக்குறீர்கள், எந்த வேகத்தில் நகர்கிறீர்கள் என்பது குறித்த தகவல் கூகுளை சென்றடையும். அது மட்டுமின்றி ஒரே இடத்திலிருந்து பல வாகனங்களின் லொக்கேஷன் வந்து சேருமாயின் அந்த இடத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, என்ன வேகத்தில் நகர்கின்றன என்ற தகவல்களை கூகுள் எளிதாக பெறும்.

நீங்களும், உங்கள் முன்னால் இருக்கும் வாகனமும், அதற்கு முன்னால் இருக்கும் வாகனமும் என பல பேர் ஒரே நேரத்தில் தகவல்களை பகிர்வீர்கள். இது மட்டுமின்றி மெதுவாக அனைத்து வாகனமும் நகர்வது போக்குவரத்து நெரிசலை குறிக்கும். இங்கே கூகுள் நிறுவனம் செய்யும் வேலை என்னவென்றால், எத்தனை வாகனங்கள் இருக்கின்றன, எவ்வாறு நகர்கின்றன என்பதனை வைத்து போக்குவரத்து நெரிசலில்லை, சிறிய அளவு நெரிசல், மிக நெரிசல் என கணக்கிடுவது தான். 

இந்த முறையில்தான் கூகுள் மெரினாவின் கூட்டத்தையும் காட்டுகிறது. போராட்டத்தில் இருக்கும் நபர்களில் 90 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள். ஈஸியாக மக்கள் கூட்டத்தை காட்டுகிறது. 

கூகுள் மேப்ஸில் ட்ராஃபிக்கை பார்ப்பது எப்படி?

maps.google.com என்ற தளத்தில் உள்ள Menu-வை க்ளிக் செய்து Traffic-ஐ தேர்ந்தெடுக்கவும். சென்னையின் மற்ற இடங்களின் டிராபிக்கையும் தற்போது பார்க்கலாம். ஆனால் போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருக்கும் மெரினா கடற்கரையை காட்டும் போது, சிவப்பு நிறத்தில் காட்டுகிறது கூகுள்.

-ச.ஸ்ரீராம்


டிரெண்டிங் @ விகடன்