வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (01/02/2017)

கடைசி தொடர்பு:12:06 (02/02/2017)

சைக்கிளில் டீ விற்பவர்களுக்காக ஒரு ’வாவ்’ முயற்சி! #Tea2go

டீ

வேலை தேடுபவர்களாக இருந்தாலும், நிறுவனங்களில் பணியில் இருப்பவர்களாக இருந்தாலும், தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இங்குள்ள பலருக்கும் இருக்கிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், சுயத்தொழில் துவங்குவது போன்றதொரு சுலபமான காரியமும் இல்லை, அதை விட ஒரு கடினமான வேலையும் இல்லை. காரணம் இன்றைய சூழலில், தொழிலில் வெற்றி பெறுவதற்கு முதலீடு, ராசி, யோகம் போன்றவைகளை காட்டிலும் தனித்துவமான திட்டங்கள், நுணுக்கமான புதிய யோசனைகள் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தொழிற்துறை, தொழில்நுட்பம் இரண்டின் போக்கை சற்று ஆழமாக கணித்து, எதிர்கால மாற்றங்களுக்கு தகுந்தவாறு திட்டமிடுவது ஒரு வழி என்றால், பயன்பாட்டில் உள்ள தொழில்களில் புதுமைகளை புகுத்தி, மாற்றங்களை கொண்டு வருவது மற்றொரு வழி. அப்படி பயன்பாட்டில் உள்ள சைக்கிள் டீ விற்பனையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், சிவராஜ் முத்துராமன். கடந்த சில வருடங்களாக தொழில் துவங்குவதற்கு தேவையான புதிய யோசனைகளை, பலருக்கு வழங்கிவரும் இவர், கடந்த 2012ஆம் ஆண்டில் சுற்றுசூழலுக்கேற்ற எலக்ட்ரிக் ரிக்‌ஷாவை வடிவமைத்திருந்தார். இவர் வடிவமைத்த ரிக்‌ஷா, சர்வதேச அளவில் சிறந்த வடிவமைப்பிற்கான பல விருதுகளை பெற்றது. இவர் தற்போது, Tea2go எனும் புதிய தொழில் திட்டத்தை துவங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

அது என்ன Tea2go ? 

இந்தியர்களாகிய நாம் டீ பழக்கத்திற்கு அடிமையானவர்கள். தெருவிற்கு நான்கு டீ கடைகள் இருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக சைக்கிள் டீ விற்பனையில் இந்தியா முக்கிய இடம் பிடித்திருக்கிறது. வெகுநாட்கள் ஆய்விற்கு பிறகே இந்த துறையினை தேர்வு செய்தேன். அமைப்பு சாரா தொழிலான, சைக்கிள் டீ விற்பனையில் தன்னால் முடிந்த மாற்றங்களை கொண்டு வர நினைத்தேன். tea2go அப்படி தான் உருவானது. முதலீடு செய்பவர்களுக்கும், வேலை தேடுபர்களுக்கும், tea2go ஒரு பாலமாக இருந்து செயல்படும். அதிக அளவிலான முதலீட்டாளர்கள் கிடைத்தால், சைக்கிள் டீ விற்பனை மூலம், போதிய வருவாயினை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திதர முடியும், இதோடு வேலை தேடுபவர்களுக்கும், எளிய வழியில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும். சைக்கிள் டீ விற்பனையாளராக விளிம்பு நிலை பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும் முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளேன். சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை விளைவிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். 

Tea2goவில் உள்ள மற்ற அம்சங்கள் என்ன ? ஒரு பிராண்டை மக்களிடம் கொண்டு செல்வது சுலபமா ?

எல்லா பிராண்டுகளையும் மக்கள் விரும்புவதில்லை, மாறாக எல்லா விதங்களிலும், தனித்துவம் கொண்டவைகளை மக்கள் அதிகம் ரசிக்கின்றனர். எனவே தான் சைக்கிள் அமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். டீ கொண்டு செல்லும் பாத்திரம், ஸ்டெயின் லஸ் ஸ்டீல் ஃப்ளாஸ்காக இருப்பது வழக்கம், எனது சைக்கிளில் தெர்மோ ஃப்ளாஸ்கினை பொருத்தினேன். பார்வையாளர்களை கவரும் விதத்தில் சில நுணுக்கங்களை புகுத்தினேன்.

இன்று காபி விற்பனையில் பல கார்ப்ரேட் நிறுவனங்கள் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறார்கள். மக்களும் தரம், சேவை, தனித்துவமான வியாபாரம் போன்றவைகளுக்காக ப்ராண்டட் கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

டீ

உங்களின் எதிர்கால திட்டம் என்ன ?

வணிக ரீதியான வெற்றிக்கு, புரட்சிகரமான மாற்றங்கள் அவசியமான ஒன்று. எனவே தான், முன்பு நான் வடிவமைத்த ரிக்‌ஷாவில் கூட அதன் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். தொடர்ந்து மூன்று ரிக்‌ஷாக்கள் தயார் செய்து, சென்னையின் முக்கிய இடங்களில் சில நாட்கள் பார்வைக்கு வைத்தேன். பல இடங்களில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைத்திருந்தால் எனது எக்கோ ப்ரண்ட்லி ரிக்‌ஷா இன்று பல வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும். இருப்பினும் தொடர்ந்து நம்பிக்கையோடு இருக்கிறேன். தற்போது முயற்சி செய்துள்ள Tea2go, சைக்கிள் டீ விற்பனையில் புதிய பரிணாமம் படைக்கும்.

சிவராஜிடம் வாழ்த்து தெரிவித்துவிட்டு, விடைபெற்ற போது, அவர் நம்மிடம், சார் என்னிடம் இது போன்ற பல யோசனைகள் இருக்கிறது, ஆனால் எல்லாவற்றிற்கும் முதலீடு ஒன்று தான் தடையாக உள்ளது. இருந்தாலும் கூட எனக்குள் உதயமாகும் கண்டுபிடிப்புகளை, மூலதனமாக மாற்றி வணிகரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார்.

-ஜோ.கார்த்திக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்