வெளியிடப்பட்ட நேரம்: 11:46 (02/02/2017)

கடைசி தொடர்பு:11:45 (02/02/2017)

’ஹேய் கூகுள்... ஹவ் இஸ் விவேகம் ஃபர்ஸ்ட் லுக்?” #GoogleHome

கூகுள்


உலகின் முதல் வாய்ஸ் கமாண்ட் எது என தெரியுமா? அரண்மனையில் ஹாயாக அமர்ந்திருக்கும் மன்னன் ‘யாரங்கே’ எனச் சொன்னதும் 10 பேர் ஓடி வந்து நிற்பார்களே. அதுதான். 

உலகின் முதல் பாஸ்வேர்ட் எது தெரியுமா? 1950களில் வந்த ஒரு படத்தில் ஹீரோ ஒரு குகையின் முன் நின்று ’அண்டா கா கசம். அபு கா ஹூக்கும். திறந்திடு சீசேம்’ என சொன்னதும் கதவு திறக்கும். உலகின் முதல் பாஸ்வேர்ட் அந்த ‘அண்டா கா கசம்’ தான்.

இந்த இரண்டு அரசர்கால காட்சிகளிலும் ‘ஆக்‌ஷன்’ என்பது மனிதர்களால்தான் நடக்கிறது. ஓடி வரும் சேவகன்தான் அரசன் சொன்னதை செய்வான். பாஸ்வேர்டை கேட்டதும் உள்ளிருக்கும் அடிமைகள் சக்கரத்தை சுற்ற சுற்ற கதவு திறக்கும். மனிதர்கள் இருக்கும் அந்த இடத்தில் மிஷின் வந்துவிட்டால், அதுதான் ’ஸ்மார்ட் காலம்’. இந்த ஸ்மார்ட் யுகத்தை ஆளும் கூகுள் நிறுவனத்தின் அதிரடி புராடக்ட் ‘கூகுள் ஹோம்’

நாம் சொல்வதைக் கேட்டு, அதற்குத் தேவையான தகவல்களை கூகுளின் மற்ற சேவைகளில் தேடி நமக்கு பதிலாக தரும் ஒரு சிஸ்டம் தான் ‘கூகுள் ஹோம்’. 

காலையில் எழுந்தவுடன் பாத்ரூமில் பல் விளக்கிக் கொண்டே “இன்னைக்கு மழை வருமா” என்றால், உடனே கூகுள் வெதர்-ல் என்ன அப்டேட் இருக்கிறது என்பதை தேடி, “நல்ல மழையாம். குடையை மறக்காதீங்க” என பதில் சொல்லும். டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்து சட்டையை மாட்டிக்கொண்டே ‘யார் யாருக்கு இன்று அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறேன்’ எனக் கேட்டால், கூகுள் காலண்டரில் தேடி அவர்கள் பெயரை சொல்லும். டைனிங் டேபிளுக்கு வந்து ‘இன்று என் டயட் என்ன’ என்றால் அதையும் சொல்லும். மாலை வீடு திரும்பியதும் ‘வர்லாம் வர்லாம்..வா” என்றால் உடனே பாடல் தொடங்கும்.நேற்று இரவு வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கு ட்விட்டரில் என்ன ரெஸ்பான்ஸ் என்றால் அது தொடர்பான ட்வீட்களை தேடி தரும்.  உங்கள் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், என்ன கேட்டாலும் தேடிப்பிடித்து பதில் சொல்லிவிடும் கூகுள் ஹோம். எப்படி?

கூகுள் ஹோமில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு. ஒன்று, ப்ளூடூத் அல்லது வைஃபை மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ஒரு ஸ்பீக்கர். இரண்டு, உங்கள் குரலை மிக நுண்ணியமாக கண்டறிய கூடிய மைக்குகள். இவை உங்கள் வீட்டின் எல்லா அறைகளிலும் ஒன்று பொருத்தி விட வேண்டும். மூன்று, இதன் ஆர்ட்டிஃபிஷியல் இண்டிலெஜன்ஸ் புராஸசர். நீங்கள் சொல்வதை மைக் மூலம் கேட்டு, தேவையான தகவலை இணையம் மூலம் புராஸசர் தேடி, பதிலை ஸ்பீக்கர் மூலம் உங்களுக்கு சொல்லும். தீர்ந்தது விஷயம்.

கூகுள்

ஆப்பிள் மொபைல்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிரி’யின் விஸ்வரூப வெர்ஷன்தான் கூகுள் ஹோம் எனச் சொல்லலாம். அது மொபைல் அளவில் செய்வதை இது வீடு முழுக்க செய்கிறது. இது போலவே அமேசான் நிறுவனமும் ‘எக்கோ’ என்ற புராடக்டை வெளியிட்டது. ஆனால், வித்தியாசம் கூகுள்தான். கூகுள் தரும் பல சேவைகளைதான் பெரும்பாலோனோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதையெல்லாம் கூகுள் ஹோம் ஒருங்கிணைத்து தருவதால் மற்ற வாய்ஸ்- அஸிஸ்டெண்ட்களை விட கூகுள் ஹோம்க்கு மவுசு அதிகம் இருக்கும்.

கூகுள் தனது சேவைகளை தாண்டி பல முன்னணி நிறுவனங்களுடன் கைகோக்க இருக்கிறது. டிவி, வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகுள் ஹோம் இணையும்போது அந்த ஸ்மார்ட் பொருட்களையும் நம் குரல் மூலமே செயல்படுத்த முடியும். இனி, ரிமோட்டுக்கு சண்டை வராது. ”ஓவர் சத்தமா இருக்கு. கொஞ்சம் சவுண்ட் குறை எல்ஜி” என அம்மா கிச்சனில் இருந்தே சொல்லிவிடுவார். யார் குரலை அது கேட்க வேண்டும் என்பதில் குடும்பப் போரே வரலாம் என்பது வேறு விஷயம். 

கூகுள் ஹோமின் இன்னொரு ஸ்பெஷல், இதன் கூடவே வரும் க்ரோம் காஸ்ட் மென்பொருள். வீட்டில் இருக்கும் எல்லா அறைகளையும் கோ-ஆர்டினேட் செய்யும் வேலையை கச்சிதமாக செய்யும். கூகுள் ஹோம் ஸ்பீக்கரும் பார்க்க “ஸ்லீக்’ ஆக இருக்கிறது. இதன் அடிப்பாகத்தை அந்தந்த அறையின் சுவர் நிறத்துக்கு ஏற்றது போல மாற்றிக்கொள்ள முடியும் என்பது ஹைலைட். 

ஆப்பிளின் சேவைக்கு ’சிரி’ என பெயர். அமேஸானின் புராடக்டை “அலெக்ஸா” என அழைத்தார்கள். மிஷின் என்றாலும் நாம் கேட்பவைகளுக்கு பதில் சொல்வதால், அதையும் சக மனிதனாகவே நாம் உணர்வோம். அதனால் அதற்கு சிரி, அலெக்ஸா போன்ற பெயர்கள் ஒரு நெருக்கத்தை கொடுக்கும். “சிரி... இப்ப என்ன படம் சத்யம்ல ஓடுது”, “அலெக்ஸா... பெங்களூருக்கு அடுத்த ஃப்ளைட் எப்போ” எனக் கேட்கும்போது அவையும் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல நினைப்போம். கூகுள் அப்படி ஒரு பெயரை இன்னும் சூட்டவில்லை. இதை ஒரு முக்கியமான குறையாக நினைக்கிறார்கள் டெக்கி விமர்சகர்கள். 

இந்த மேஜிக் எல்லாமே ஆங்கிலத்தில் மட்டுமே செல்லுபடியாகும். ’தமிழுக்கு இப்ப வராதா’ என்ற கேள்விக்கு கபாலியை போல கையை பிசைகிறார்கள் கூகுள் ஃபேன்ஸ். அப்படியே வந்தாலும் சென்னைத்தமிழ், கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ் என பல விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கும். அது நடக்கும்வரை “ஹே கூகுள்... வில் இட் ரைன் டுடே” தான். 

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்