வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (02/02/2017)

கடைசி தொடர்பு:18:42 (02/02/2017)

”உங்களுக்கும் அவரை பிடிக்காதா? வாங்க காஃபி சாப்பிடலாம்” - கலக்கல் டேட்டிங் ஆப் ’ஹேட்டர்’

ஹேட்டர்

ஃபேஸ்புக்கோ... இன்ஸ்டாகிராமோ... எந்த சோஷியல் மீடியாவில் பட்டா போட்டாலும், முதலில் அவர்கள் நம்மிடம் கேட்பது “உனக்கு என்னலாம்ப்பா பிடிக்கும்?”

தளபதி படம் பிடிக்கும் என்றால், அதற்கென இருக்கும் பிரத்யேக பக்கத்தைக் காட்டி லைக் கேட்கும் ஃபேஸ்புக். எனக்கு கேட்ஜெட்ஸ்தான் உசுரு என்றால், அந்த அக்கவுன்ட்களை காட்டி ‘பாலோ பண்ணு மேன்’ எனச் சொல்லும் ட்விட்டர். நமது விருப்பங்களை தெரிந்துகொள்வதுதான் இந்த சமூக வலைதளங்களின் தலையாய பணி. அப்போதுதான் நமக்கு பிடித்த பொருட்களை கண்டுபிடிக்க முடியும். அதை விற்கும் நிறுவனங்களின் விளம்பரங்களை நம் கண்ணில் காட்ட முடியும்.

ஆனால், இதுதான் ஒரே வழியா? நீங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்டிவான ஆசாமி என்றால் ஒரு விஷயத்தை யோசியுங்கள். உங்களுக்கு சசிகலாவை பிடிக்கும்  , அவரை சிலாகித்து ஒரு ஸ்டேட்டஸ் தட்டினால் 100 லைக்ஸ் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அவரை திட்டி ஸ்டேட்டஸ் போட்டால் எவ்வளவு கிடைக்கும்? நிச்சயம் 200 ஆக இருக்கும். தோனியை பாராட்டி ஒரு மீம் போட்டு பாருங்கள். அவரை கலாய்த்து ஒரு மீம் போட்டு பாருங்கள். அதன் ரீச்சின் வித்தியாசம் மில்லிமீட்டரில் அல்ல, கிலோ மீட்டரில் இருக்கும். 

விஜய் ஃபேன்ஸ் என்பதை விட விஜய் ஹேட்டர்ஸுக்கு கூட்டம் அதிகம் சேரும். ஏனெனில், அந்தக் கூட்டத்தில் அஜித், சூர்யா என இன்னும் நிறைய நடிகர்களின் ரசிகர்களும் சேர்வார்கள். உண்மையில், ஒருவரோடு நாம் ஒத்த அலைவரிசையில் வர, லைக்ஸை விட நாம் டிஸ்லைக் செய்யும் விஷயங்கள் தான் அதிகம் உதவும். ஒரு நல்ல மாலை வேளையில் இதை பற்றி தனது நண்பர்களோடு பேசியிருக்கிறார் பிரெண்டன் ஆல்பர் என்பவர். “நாம் வெறுக்கும் விஷயங்கள் தானே நம்மிடையேயான ஒற்றுமை” என நிறைய பேர் ஆமோதிக்க, ஒரு ஸ்பார்க் தெறித்திருக்கிறது பிரெண்டனுக்கு.

இது தொடர்பாக உலகெங்கும் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளை தேடி சேகரித்தார். எல்லோருமே ஃபேன்ஸை விட ஹேட்டர்ஸே அதிகம். இரண்டு பேருக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே, அவர்கள் வெறுக்கும் விஷயங்கள்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அதை அடிப்படையாக வைத்து ஒரு மொபைல் ஆப் உருவாக்கியும் விட்டார் பிரெண்டன். அதுதான் HATER

ஹேட்டர்

இப்போதைக்கு, Late night sleeps தொடங்கி சொந்தக்காரர்கள் வரைக்கும் 2000 தலைப்புகள் இருக்கின்றன. இதில் உங்களுக்கு பிடிக்காதவைகளை Hate செய்ய கீழ் நோக்கி தள்ள வேண்டும். லைக் செய்ய வலதுபக்கமும், டிஸ்லைக் செய்ய இடது பக்கமும் தள்ள வேண்டும். இதில் ஹேட்தான் முக்கியமான விஷயம். இப்படி நாம் ஹேட் செய்யும் விஷயங்கள் யாரோ ஒருவரும் வெறுக்கலாம். அவர்கள் உங்கள் லொகேஷனுக்கு அருகில் இருந்தால், இருவரும் ஒரு காஃபி குடிச்சிட்டே பேசுங்களேன் என்கிறது இந்த ஹேட்டர் ஆப்.

பத்து பொருத்தமும் பொருந்துதான்னு பாக்குற நம்ம தேசத்தில், இந்த லாஜிக் வேலைக்காகுமா என்ற சந்தேகம் எழுவது நியாயம்தான். இன்னும் சில நாட்களில் இதன் வெற்றிக்கான சாத்தியம் தெரிந்துவிடும். உலகமெங்கும் இந்த மாதம் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ஹேட்டர். ஆனால், இப்போதே நீங்கள் ஆப் ஸ்டோரிலே, ப்ளே ஸ்டோரிலே டவுன்லோடு செய்துகொள்ளலாம். 

டொனால்டு டிரம்ப்பை ஹேட் செய்து எனது கணக்கைத் தொடங்கியிருக்கிறேன். நீங்கள் எப்படி?

-கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்