ஆன்சைட் ஆண்டனி... கேம்ஸ் கேமரூன்... ஃபேஸ்புக்ல இவங்கள்லாம் யாரு?

ஃபேஸ்புக்

தோழின்னா ரொமாண்ட்டிக்கா தெரியும். தோழர்ன்னா புரட்சியா தெரியும். இந்த இரண்டும் சரியா கலந்தா அதுதான் ஃபேஸ்புக். சே குவேரா டிபி வச்சிருக்கிற அங்கிள்தான் இன்பாக்ஸ்ல “சாப்ட்டியாம்மா”ன்னு அதிகாலை ஏழரைக்கே மெஸெஜ் பண்ணிட்டு இருப்பாரு. இந்த மாதிரியான புரியாத புதிர்கள் பலர் உலவும் இடம்தான் ஃபேஸ்புக்.  ஃப்ரெண்டுக்கு கல்யாணம்னு பொய் சொல்லிட்டு கோவாக்கு போய் ஃபோட்டோ போட்டா மேனேஜர் ஷேர் பண்ணுவாரு. ஆஃபீஸ்ல சம்பளத்த ஏத்திட்டாங்கன்னு சந்தோஷ ஸ்டேட்டஸ் போட்டா ஹவுஸ் ஓனர் லைக் போட்டு திகில கூட்டுவாரு. இப்படி தினுசு தினுசா பல தீவிரவாதிங்க கொடுக்கிற லந்து இருக்கே.. வாங்க.. மெனு வாரியா பாக்கலாம் 

1)  முனுசாமி க்ளிக்ஸ்:

புண்ணாக்கு விக்குறவன்லாம் தொழிலதிபருன்ற மாதிரி, கேமரா வாங்கினவன்லாம் ஃபோட்டோகிராஃபரா ஃபார்ம் ஆயிடுறாங்க. திடீர் மழைக்கு வீட்டுக்குள்ள வர்ற புழு பூச்சிய எல்லாம் குச்சில எடுத்து வெளிய போட சொன்னா ஃபோட்டோ புடிச்சு ஃபேஸ்புக்ல போடுறாங்க. பூக்கள படமெடுக்கிறன்னு ஒருத்தன் வாழப்பூவ க்ளோசப்ல எடுத்து அப்லோடுபண்றான். இன்னொருத்தன் பெரிய வித்துவானா இருப்பான் போல. என்ன கேமரா, என்ன லென்ஸ்,அபெர்ச்சர் என்ன, ஷட்டர் ஸ்பீடு என்னன்னு எல்லாம் டீட்டெயிலும் கொடுப்பான். மொத கமெண்ட்ல அப்பாவி ஒருத்தன்  “இது பூனையா, நாயா”ன்னு கேட்டிருப்பான். ஃபோகஸ் அந்த லட்சணத்துல இருக்கும். முதல்ல கை நடுங்காம ஃபோட்டோ எடுத்து பழகுங்கப்பா. அப்புறமா முனுசாமி க்ளிக்ஸ்னு வாட்டர் மார்க் போடலாம்.

2)  செல்ஃபி புள்ள:

முனுசாமி பரவால்ல. செல்ஃபின்னு ஒண்ணு இருக்கே. அத கண்டுபிடிச்சவன் இந்நேரம் வாஷ் பேசின்ல தலையை விட்டு அழுதுட்டு இருப்பான். ஃபேஸ்புக்க தொறந்தா 4 டொக்கு விழுந்த மூஞ்சிக முன்னாடி வந்துடுது. தினமும் குளிச்சு டிரஸ் மாத்துறாங்களோ இல்லையோ ஒரு செல்ஃபி போட்டுடுறாங்க.  எடுத்த ஃபோட்டோ நல்லா இல்லைன்னா வேற எடுக்க மாட்டானுங்க முண்டாசுப்பட்டிக்காரனுங்க. இதுல என்ன ஃபிலிம் ரோலா வேஸ்ட் ஆகுது? பாக்குறவன் கண்ணுதானேன்னு கேர்லெஸ். இன்னும் கொஞ்சம் தைரியம் இருக்கிறவன் “இந்த இன்னொசெண்ட் லுக்குக்கு எத்தனை லைக்ஸ்?”ன்னு வேற கேட்பான். கவுண்டர் கண்ணுல மட்டும் இது பட்டா “குல்ஃபி விக்கிறவன் மாதிரி இருந்துட்டு செல்ஃபியாடா நாய நாய”ன்னு திட்டியிருப்பாரு. முத்தம் கொடுக்கிற டிஸ்டன்ஸ்ல இருந்து முகரக்கட்டையை எடுக்கிறதாலதான் வெள்ளைக்காரன் செல்ஃபி ஸ்டிக்கன்னு ஒண்ண கண்டுபிடிச்சான். மூணு அடிக்கு முன்னால இருந்து எடுத்தா போதும்னுட்டான். இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா மக்களே?

selfie

3)  சாதி சனம்:

மேனேஜர்ட்ட வேலை ஒழுங்கா செய்யாததுக்கு கைக்கட்டி திட்டு வாங்கினவன் சீட்டுக்கு வந்ததும் ஸ்டேட்டஸ் போடுவான் “ஆண்ட பரம்பரைடா நாங்க”.  கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா சாதிக்கும் தனித்தனி பேஜ் கிரியேட் பண்ணி வச்சிருக்காங்க. இவங்க சொல்ற எண்ணிக்கைய கூட்டி பாத்தா தமிழ்நாட்டோட மக்கள் தொகை 50 கோடிய தாண்டும். ஒருத்தனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கலாம். ரெண்டு சாதி எப்படிப்பா இருக்கும்? எல்லோருமே ஆண்டீங்கன்னா யார்தாண்டா குடிமக்கள்னு கமெண்ட் போட்டவன 100 பேர் சேர்ந்து திட்டிட்டு இருப்பான். “வீரம் எங்கள் சொத்து.. முடிஞ்சா மூஞ்ச பாத்த குத்து”ன்னு ரைமிங் பஞ்ச்சோடதான் காலை வணக்கமே வைப்பானுங்க அந்த க்ரூப்புல. பேருக்கு பின்னாடி BE போட வேண்டிய சில்வண்டுங்க எல்லாம் சாதிப்பட்டத்த போட்டு  சுத்துற இடம்தான் ஃபேஸ்புக். இதுல உச்சக்கட்ட காமெடியே சாதி வேண்டாம் என்று கூறி, அதை எதிர்த்து வாழ்ந்த தலைவர்களை எல்லாம் ‘அவர் எங்க சாதி’ தெரியுமான்ற அலப்பறைதான்.

4)  ஆன்சைட் ஆண்டனி:

உள்ளூர்க்காரங்க. இவங்கள மன்னிச்சு விட்டுடலாம். ஆன்சைட்டுக்கு போனவன் பண்ற அலப்பறை இருக்கே. 3 வருஷமா தோய்க்காத பெட்ஷீட்ல தூங்கினவன் “இந்தியா மாதிரி இல்ல. இங்க எல்லாம் க்ளீன்”ன்னு ஸ்டேட்டஸ் போடுவான். மச்சான் எதோ பீட்டர் ஃபிகர பத்தி சொல்றான்னு அந்த பெட்ஷீட் பார்ட்னர் லைக் போட்டு வைப்பான். இந்தியாக்கு திரும்பறப்ப முட்டிக்கு மேல ஷார்ட்ஸ் போட்டுட்டு நம்ம ஊர் ஏர்போர்ட்ட பாத்து “இப்படிலாம் இருந்தா எனக்கே குண்டு வைக்கணும்னு தோணுது. டெர்ரரிஸ்ட்க்கு தோணாதா”ன்னு ஸ்டேட்டஸ் போடுவான். அடேய்.. உன் சொந்த ஊரு “மாலையிட்டான் குப்பம்” தான? ஏ ஃபார் ஆப்பிள்னு படிச்சவன் ஆட்டோக்காரண்ட்ட Pardon me ன்னு பாடம் எடுப்பான். என்னவோ இவன் அமெரிக்காவுக்கு போனப்ப சென்னைல பனிமழை பெஞ்ச மாதிரி “இட்ஸ் டூ ஹாட் இன் சென்னை”ன்னு துபாய் போன வடிவேல் கணக்கா சலம்புவான். உங்களுக்கெல்லாம் ஒரு பார்த்திபன் வராமலா போயிடுவான்?
 
5) ரூமர் ருத்ரய்யா:

“சென்னை சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வாக்-இன் நடக்கிறது. உங்கள் ரெஸ்யூம்களை உடனே kavithahr@gmail.comக்கு அனுப்பவும்”னு ஒருத்தன் ஸ்டேட்டஸ் போடுவான். உடனே, இளைஞர்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவன்கள், அனாதை ரட்சகர்கள் பாஞ்சு போய் ஷேர் பண்ணுவாங்க. சத்யம் கம்பெனிய மூடி எத்தனை வருமாச்சுன்னு யோசிக்க மாட்டாங்க. அவ்ளோ பெரிய கம்பெனிக்கு சொந்தமா டொமைன் இல்லாம ஜிமெயில்லயா இருக்கும்? ஷேர் பண்ணிட்டா அவங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்க.. இப்படித்தான் ஒரு நாள் 7 வயசு பையன் ஒருத்தன் காணாம போயிட்டான்ன்னு செய்தி. அந்த பையன் முகத்த கூட சரியா பாக்காம லைக்கும், ஷேரும் பறந்துச்சு. அந்த பையனே இவங்க எதிர்க்க வந்தாலும் இவங்களால கண்டுபிடிக்க முடியாதுன்றதுதான் ஹைலைட்டே. ரத்தம் வேணும்னு கேட்டாலும் இதே கதைதான். யாருக்கு ரத்தம் வேணுமோ அவரு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தப்புறமும் அந்த போஸ்ட் ஷேர் ஆகி, அதுக்கு அவரே லைக் போட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கு. 

6) கேம்ஸ் கேமரூன்:

    ”ஹே டூட். நீ என்ன ப்ளாண்ட் போட்டிருக்க?”
     “சன்ஃப்ளவர் அண்ட் பேடி மேன்”
 என்னடா இது இயற்கை விவசாயம் இங்க்லீஷ் விவசாயம் ஆயிடுச்சுன்னு பாத்தா, ஃபேஸ்புக்ல ஃபார்ம்வில் விளையாடுறத பத்தி பேசிட்டு இருப்பாங்க. கிரிக்கெட்ல ஆரம்பிச்சு விவசாயம் வரைக்கும் கம்ப்யூட்டர்லயோ, மொபைல்லயோ விளையாடுறதுதான்  ஃபேஸ்புக் கல்ச்சர். எப்ப பாத்தாலும் கேம்ஸ் ஆடுற புருஷன பாத்து ஒரு மனைவி கடுப்பாகி “கோ.கெட் எ லைஃப்”ன்னு சொல்லிட்டு போனா அந்த புருஷன் கூலா “ஆல்ரெடி 4 லைஃபு இருக்கு. இந்த லெவலுக்கு போதும்”ன்னு சொல்ற காலம் இது. உலகம் முழுக்க கேண்டி கிரஷ்ல லைஃபு கேட்டு வர்ற மனுக்களோட எண்ணிக்கை இந்திய மக்கள் தொகைக்கு சமம்னு ஒரு குண்ட வேற தூக்கி போடுறாங்க. இப்படியே போனா இந்தியாவோட தேசிய விளையாட்டா கேண்டி கிரஷ்ஷ அறிவிக்க சொல்லி போராட்டம் நடந்தாலும் நடக்கலாம்.. லைஃப விளையாட்டா எடுத்துக்கிறாங்க. விளையாட்டை லைஃபா எடுத்துக்கிறாங்க நம்ம ஃபேஸ்புக்கர்ஸ்.

candy crush

7) ட்ரோல்ஸ்:

ஃபேஸ்புக்குல பிரபலம், அறிவாளி, பெரியவங்கன்னு யாரும் கிடையாது. எல்லோருமே மாமன் மச்சான்ஸ்தான்.. பிரபல நிறுவனங்கள் அவங்க கஸ்டமர்ஸோட பிரச்சினைகளை தீர்க்க ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சிருப்பாங்க. அதுல போய் “ஹே அட்மின் எனக்கொரு டவுட்”னு கேட்கிறவண்ட்ட பொறுப்பா “சொல்லுப்பா.. என்ன வேணும்”னு அட்மின் கேட்பாரு. “கட்டப்பா ஏன் பாகுபலிய கொன்னான்.. உனக்கு தெரியுமா”ன்னு லந்த கொடுப்பாங்க. நடிகர்கள்கிட்ட போய் “பாஸ்..ஃப்ரீயா”ன்னா அவரும் தீவிர ரசிகர் போலன்னு “ஃப்ரீதான்..சொல்லுங்க”ன்னுவாரு. “எதாச்சும் வேலை பாருங்க. இப்படி வெட்டியாவே இருந்தா எப்படி சூப்பர்ஸ்டார் ஆகுறது”ன்னு கலாய்ப்பாங்க. ஹைவேஸ்ல போறப்ப டோல் கட்டாம எஸ்கேப் ஆனவன் கூட உண்டு. ஆனா இந்த ட்ரோல்ல இருந்து எஸ்கேப் ஆன செலிபிரட்டீஸ்ன்னு யாருமே கிடையாது.

8)  நவரச நடிகர்கள்:

சக்கரை பொங்கலுக்கு வடைகறிய சைட் டிஷ்ஷா வைக்கலாமா? அந்த மாதிரி தான் இந்த டப்மேஷ் கலாச்சாரம். தெனாலி கமல் வாய இப்படி குவிக்கையில ஆரோ டப்பிங் கொடுத்த மாதிரி வந்துடுச்சு இந்த டெக்னாலஜி. வாரணம் ஆயிரம் சூர்யா வசனத்த எஸ்.ஜே சூர்யா பாடி லேங்குவேஜுல பேசிட்டு வெட்கமே இல்லாம ஷேர் பண்ணுவாங்க. இப்பலாம் டப்ஸ்மேஷ் வேற லெவல். ஜோடி போட்டு பாடுறதும், பாடி காட்டி ஆடுறதும்ன்னு...ஒரு மினி மானாட மயிலாடவையே நடத்துறாங்க...

யார் எப்படி போனா நமக்கு என்னங்க... இந்த போஸ்டுக்கு ஒரு லைக்கும், ஷேரும் பண்ணிட்டா எல்லாம் வல்ல மார்க் ஸுக்கர்பெர்க் உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டாரு

-கார்க்கிபவா

ஓவியம் - கார்த்திகேயன் மேடி 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!