தல தளபதி ரசிகர்களே..!உங்க ஃபேவரிட் ஹேஷ்டேகின் வரலாறு தெரியுமா?! #HashtagHistory | Who is the inventor of hashtags? #RevolutionOfHashtags

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (05/02/2017)

கடைசி தொடர்பு:11:37 (05/02/2017)

தல தளபதி ரசிகர்களே..!உங்க ஃபேவரிட் ஹேஷ்டேகின் வரலாறு தெரியுமா?! #HashtagHistory

ட்விட்டர் ஹேஷ்டேக்

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வைன் என பல சோஷியல் மீடியாக்களில் இந்த ஹேஷ்டேக்ஸ்தான் ஹீரோ. புதுப்படம், புது மொபைல், புது கேம், தேர்தல், ஊரில் நடக்கும் வம்புதும்பு சண்டைகள், சமூக பிரச்னைகள், தல தளபதி சண்டை, காதலர் தினம், கண்ணீர் அஞ்சலி என எல்லாமே இந்த ஹேஷ்டேக்கிற்குள் அடக்கம். பொதுவான ஒரு கருத்து சார்ந்து உரையாடும், உலகத்தினரின் குரலை, ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்க செய்வதுதான் இந்த ஹேஷ்டேக். இன்று ஹேஷ்டேக்கிற்காக # என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. இந்த குறியீடு எதற்காக எல்லாம் பயன்பட்டது தெரியுமா?

1. 1960-களுக்கு முன்பு இந்த குறியீடு, எந்தவித தனிப்பட்ட பயன்பாடும் இல்லாமல்தான் உலகம் முழுக்கவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

2. பிறகு 1960-களில் இந்த குறியீடு, தொலைபேசி எண்களை குறிக்கப் பயன்பட்டது. லேண்ட்லைன் டெலிபோன்களின் டயலர்களில் கூட, இந்த குறியீட்டை நீங்கள் பார்த்திருக்கலாம். உதாரணமாக #7 என்றால், ஆங்கிலத்தில் 'Number 7' என அர்த்தம். இதற்கு பெல் ஆய்வகம் 'Octothrope' எனப் பெயரிட்டது. இதற்கு காரணம், # குறியீட்டில் இருக்கும் எட்டு முனைகள்தான்!

ஹேஷ்டேக் Hashtag

3. பள்ளியிலோ, கல்லூரியிலோ பறந்து பறந்து C புரோகிராமை எழுதியவர்களுக்கு நிச்சயம் இந்த குறியீட்டை மறந்திருக்க முடியாது. #include எனத் துவங்கும் அந்த புரோகிராம்களில், இந்த ஹேஷ்டேக் குறியீடு எப்போது மாட்டியது தெரியுமா? 1978-ல்தான்.  அப்போதுதான் இது C புரோகிராமிங்கில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு பின்பு பல்வேறு புரோகிராமிங் மொழிகளிலும் இதன் பயன்பாடு விரிந்தது. 

4. 1993-ம் ஆண்டு முதல் Internet Relay Chat (IRC) எனப்படும் ஆன்லைன் தகவல் தொடர்பு பரிமாற்ற முறையில், குறிப்பிட்ட சில தலைப்புகளை குறிக்க இந்த குறியீடு பயன்படுத்தப்பட்டது.

5. 2007-ம் ஆண்டு இதனை ட்விட்டரில் அறிமுகம் செய்வது பற்றி அறிவித்தார் கிரிஸ் மெஸ்ஸினா. 

இவர்தான் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பயன்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர். இதற்கு காப்புரிமை கூட வாங்கவில்லை கிரிஸ். அதற்கு அவர் சொன்ன காரணம், 'காப்புரிமை வாங்கினால், இதனை அனைவரும் பயன்படுத்த முடியாது. எனவே காப்புரிமை என்பது 'இதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும்' என நினைக்கும் என்னுடைய நோக்கத்திற்கே எதிரானது" என்றார் கிரிஸ். இதனை பவுண்ட் குறியீடு என அழைத்தவர்கள், இதன் பிறகே ஹேஷ்டேக் என அழைத்தார்கள். இப்படித்தான் உருவானது நாம் இன்று பயன்படுத்தும்  ஹேஷ்டேக்குகள்.

sandiegofires

6.'#' குறியீட்டை ஹேஷ்டேக் என பெயரிட்டு முதன்முதலில் அழைத்தவர் ஸ்டவ் பாய்ட். 2007-ம் ஆண்டில் சான் டியாகோ நகரில் தீ விபத்து நடந்த போது, அது தொடர்பான செய்திகளை ட்விட்டரில் தேடினர் நெட்டிசன்ஸ். அப்போது அவர்களுக்கு உதவ, #sandiegofires என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி கொடுத்தார் கிரிஸ் மெஸ்ஸினா.

7. 2009-ல் ட்விட்டர் இந்த ஹேஷ்டேக்கை அதிகாரப் பூர்வமாக அறிமுகம் செய்தது. அப்போது 2009 மற்றும் 2010­ ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஈரானில் தேர்தல் நடந்த சமயம், மக்களிடையே இந்த ஹேஷ்டேக் பயன்படுத்தும் பழக்கமும், அதற்கேற்றபடி ட்வீட் செய்யும் வழக்கமும் அதிகரித்தது. பிறகு ட்விட்டர் 'Trending' ஆப்ஷனை கொண்டுவர பிறகு இந்த ஹேஷ்டேக் வெகுவிரைவில் பிரபலமடைந்தது. 

ட்விட்டர்

8. இப்போது முழுக்க முழுக்க ஹேஷ்டேக்குகளாலேயே இயங்கி வருகிறது நம் மெய்நிகர் உலகு. சமூக விழிப்புணர்வு, கொண்டாட்டங்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள், எச்சரிக்கை, செய்தி, விளையாட்டு என இந்த ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு பிரச்சார வடிவமாகவே மாறிவிட்டது. 

9. ட்விட்டர் மூலம் பிரபலம் அடைந்தாலும், ஹேஷ்டேக் ஆனது ட்விட்டரில் மட்டுமே பயன்பாட்டில் இல்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், ரெட்டிட், வைன், விமியோ, சவுன்ட் கிளவுட், கூகுள் ப்ளஸ் என பல சமூக வலைதளங்களில் இந்த ஹேஷ்டேக்தான் ட்ரென்ட்டிங் கிங்.

இன்ஸ்டாகிராம்

10. இந்த ஹேஷ்டேக்கின் சிறப்பம்சம் இதனை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். யார் வேண்டுமானாலும் உரையாடலை, விவாதத்தை துவக்க முடியும். #JusticeForJallikattu #weNeedJallikattu #ISupportJallikattu போன்றவை எல்லாம் இப்படி, ஏதோ ஒரு கணினியில் இருந்தோ, மொபைலில் இருந்தோ உருவானவைதான்!

- ஞா.சுதாகர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்