வீணான மொபைல்களில் இருந்து ஒலிம்பிக் மெடல்கள்..! ஜப்பான் ஆச்சர்யம் | Japan to produce Olympic medal from e-waste

வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (07/02/2017)

கடைசி தொடர்பு:10:12 (07/02/2017)

வீணான மொபைல்களில் இருந்து ஒலிம்பிக் மெடல்கள்..! ஜப்பான் ஆச்சர்யம்

ஒலிம்பிக்

நோக்கியா மொபைல்கள் அழிந்து வரும் இனத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதன் சார்ஜர்கள் இல்லாத வீடுகளையே பார்க்க முடியாது. டப்பாவின் மூடி மாறிவிட்டால் கோவப்படும் நம் அம்மாக்களின் அடுத்த டார்கெட் உபயோகமே படாத அந்த சார்ஜர்கள் தான். எப்போதாவது தேவைப்படும் என அதை சுற்றி சுற்றி பத்திரமாக வைத்திருப்பார்கள். ஈ-வேஸ்ட் எனப்படும் அந்த மின்னணு கழிவுகள்தான் உலகம் சந்திக்கப்போகும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

அந்த ஈ-வேஸ்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகளும், தன்னார்வ அமைப்புகளும் எடுத்து வருகின்றன. அதில் ஒன்றுதான் 2020 ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

2020 ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டி ஜப்பான் மக்களை அவர்களது வீடுகளில் இருக்கும் ஈ-வேஸ்ட்களை கொண்டு வந்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதில் இருந்து பிரிக்கப்படும் உலோகங்களை 2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு தரப்படவிருக்கும் பதக்கங்களை தயாரிக்க பயன்படுத்தப் போகிறார்கள்.

“sustainability” என்ற விஷயத்தை ஒலிம்பிக்-2020 தொடர் மூலம் வலியுறுத்த முடிவு செய்திருக்கிறது ஒலிம்பிக் கமிட்டி. அதன் ஒரு பகுதியாக 8 டன் உலோகத்தை சேகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதில் 40 கிலோ தங்கம், 4 டன் வெள்ளி மற்றும் 3 டன் வெண்கலமும் அடக்கம். ஒலிம்பிக் பதக்கங்களின் உள்ளே சாதாரண உலோகம்தான் இருக்கும். அதற்குதான் ஈ-வேஸ்ட்கள் மூலம் கிடைப்பவற்றை பயன்படுத்த போகிறார்கள். உயர்ரக மின்னணு பொருட்களில் இருக்கும் போர்டுகளில் தங்க இழைகளும் காணப்படும். அதையெல்லாம் கவனமாக சேகரிக்க இருக்கிறார்கள்.

ஒலிம்பிக்

“இயற்கையின் வளங்கள் அளவற்றவை அல்ல. அதற்கு ஒரு முடிவு உண்டு. எனவே மறுசுழற்சி என்பது மனித இனத்துக்கு முக்கியமான ஒன்று. இந்த முயற்சி அதை உலகுக்கு நினைவுப்படுத்தும்” என்கிறார் டோக்கியோ2020 ன் விளையாட்டுத்துறை இயக்குநர் கோஜி. 
ஒலிம்பிக்கின் மிகப்பெரிய வரலாற்றில் ஒரு சிறிய அங்கமாக ஒவ்வொரு ஜப்பானியர்களுக்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு என இதைச் சொல்லலாம்.இந்த முயற்சியில் ஜப்பானின் பெரிய நிறுவனமான NTT DOCOMOவும் கைகோக்க இருக்கிறது. இதன் 2400 ஷோரூம்களிலில் ஈ-வேஸ்ட்டை மக்கள் கொண்டு வந்து கொடுக்க டிராப் பாக்ஸ் வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அது போக, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் டிராப் பாக்ஸ் இருக்கும். 8 டன் உலோகம் சேரும்வரை விடமாட்டோம் என்கிறது ஒலிம்பிக் கமிட்டி. 

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்ஃபோன், கேட்ஜெட்ஸ், மானிட்டர், லேப்டாப் என அனைத்துவகையான மின்னணி பொருட்களையும் சேகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் முக்கியமான பொருட்கள் தான். விலை உயர்ந்தவைதான். ஆனால், வேகமாக மாறிவரும் டெக்னாலஜியால் ஆண்டுதோறும் இவற்றை மாற்ற வேண்டியிருக்கிறது. பழைய பொருட்களை தூக்கி எறியவும் மனம் வருவதில்லை. பயன்படுத்துவதிமில்லை. அதற்கு பதிலாக, ஒலிம்பிக் போன்ற ஒரு உலகளாவிய போட்டிக்கு கொடுப்பதில் ஜப்பானியர்கள் பெருமை கொள்ளலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் மறுசுழற்சி மூலம் கிடைத்த உலோகங்களை கொண்டுதான் 30% பதக்கங்கள் தயாரிக்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக்கில் அது 100% என்பதுதான் ஸ்பெஷல். மேலும், பதக்கங்களுக்கு என ஒரு பெரியத்தொகை செலவாகி வந்தது. அதுவும் குறையும்.

இந்தியாவில் ஒலிம்பிக் நடைபெறும் வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. அதனால், நாமே நம் வீட்டில் இருக்கும் மின்கழிவுகளை தனியாக பிரித்து அரசிடம் சேர்த்து விட வேண்டியதுதான். 

- கார்க்கிபவா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்