வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (14/02/2017)

கடைசி தொடர்பு:20:24 (14/02/2017)

ஒரு போனுக்கு இவ்வளவு அக்கப்போரா? அதிகாரிகளிடம் அடம் பிடிக்கும் ட்ரம்ப்

லகமயமாக்கல் காரணமாக இன்று ஸ்மார்ட்போன்கள் கிராமங்களுக்கும் வந்துவிட்டன. மொபைல் வாங்கிய கொஞ்ச நாட்களில், அப்டேட்டோடு புதிதாக இன்னொரு மொபைல் சந்தைக்கு வந்து நம்மை கடுப்பேற்றும். இன்னும் சில பேர் கடன் வாங்கியாவது ஐபோன் வாங்கி விடவேண்டுமென்ற கொள்கையோடு இருப்பார்கள். நிலைமை இப்படியிருக்க, உலகின் வல்லமை பொருந்திய பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர்களுக்கு, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மொபைல் எளிதாக ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பது தான் அதற்குக் காரணம்.

அமெரிக்க சீக்ரெட் சர்வீஸ் அளிக்கும் பலவிதமான என்க்ரிப்சன் சமாச்சாரங்கள் பொருத்தப்பட்டிருக்கும் ப்ளாக்பெர்ரி மொபைலை மட்டும் தான் அமெரிக்க அதிபர் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் குறுந்தகவல்களிலிருந்து மெயில் வரை மொபைலில் இருக்கும் அத்தனை தகவல்களும் என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுவதால் ஹேக்கர்களால் எளிதில் தகவல்களைத் திருட முடியாது.

ட்ரம்ப்

என்க்ரிப்ட் செய்யப்பட்ட மொபைலில் புகைப்படங்கள் எடுக்கவோ, சாட் செய்யவோ, மியூசிக் ப்ளேயரில் பாடல் கேட்கவோ முடியாது. சுருக்கமாக சொன்னால் அதிலிருந்து கால் பேச மட்டும் முடியும். மேலும் அவர் பயன்படுத்தும் மொபைல் எண் சிலரிடம் மட்டும்தான் இருக்கும். இதற்கு முன்பு பதவியில் இருந்த அமெரிக்க அதிபர்களான பில் க்ளின்டன், புஷ் மற்றும் ஒபாமாவுக்கும் இத்தனை கட்டுப்பாடுகளும் இருந்தன. ஜெர்மன் அதிபர், இங்கிலாந்து பிரதமர் ஆகியோரும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ப்ளாக்பெர்ரி மொபைலைத்தான் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அலையும் ட்ரம்ப் இன்னும் ஆண்ட்ராய்டில் இயங்கும் சாம்சங் மொபைலைத்தான் பயன்படுத்தி வருகிறார். அதிலிருந்து தான் தனது கணக்கில் ட்வீட் செய்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் மிஸ்டர் கூலாக இதைத் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் அங்கே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டியில் உறுப்பினர்களாக இருக்கும் செனட் சபையின் உறுப்பினர்களான க்ளேர் மெக்காஸ்கில் மற்றும் டாம் கார்பர் ஆகியோர், அதிபர் எப்படி பாதுகாப்பற்ற மொபைலை பயன்படுத்தலாம் என்பது உள்பட சரமாரியான கேள்விகளுடன் பாதுகாப்புச் செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.  இது குறித்து மார்ச் மாதம் 9-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்ட்ராய்டு மொபைலை ஹேக் செய்யும் ஒருவர் ரெக்கார்டிங் செய்யவும், கேமராவை பயன்படுத்தவும் முடியும். மைக்ரோபோன்கள் வழியாக மொபைலை பயன்படுத்துபவர் பேசுவதைக் கேட்க அவர்களால் முடியும். குறுந்தகவல்கள் மற்றும் மெயில்களை படிக்கவும் முடியும். அது மட்டுமின்றி 'லொக்கேஷன்' மூலமாக ஒருவர் தற்போது எங்கே இருக்கிறார் என்பதுவரை நோட்டமிட முடியும். இதனால் தான் பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க அதிபரை பர்சனல் மொபைலை பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இந்நிலையில் அணு ஆயுதங்கள் கொண்ட, உலகின் மிகப்பெரிய ராணுவத்தின் ரகசியங்களைக் கையாளும் அதிபர் எப்படி பாதுகாப்பற்ற மொபைலை பயன்படுத்தலாம் என்பது செனட் உறுப்பினர்களின் கேள்வி. ஒரு சிறு தவறு நடந்தாலும் அது உலக நாடுகளையே பாதிக்கும் என்பதால், ட்ரம்பின் கவனக்குறைவால் நாம் கூட பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

பில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது தனது சொந்த செல்போனில் இருந்து இரண்டு முறையும், புஷ் ஜனவரி 2001-ம் ஆண்டு தனது சொந்த செல்போனில் இருந்து ஒரே ஒருமுறையும் இ-மெயில் அனுப்பினர். அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் இதை உடனடியாக கண்டுபிடித்து, செல்போனையே பறிமுதல் செய்துவிட்டனர். 'பொது வாழ்க்கையில் ஈடுபட்டதால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பறிபோய்விட்டது' என்று ஃபீல் ஆனார் புஷ். சோஷியல் மீடியாக்களை அதிகம் பயன்படுத்தி வந்த ஒபாமா, விடாப்பிடியாக தனது சொந்த மொபைலை பயன்படுத்தி வந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் கடும் கண்டிப்போடு பின்னர் அதைப் பறிமுதல் செய்தனர். இவ்வளவு ஸ்ட்ரிக்ட் பேர்வழிகள் கூட கேள்வி கேட்கமுடியாத எல்லையில் ட்ரம்ப் இருக்கிறார் என்பதுதான் சோகமான விஷயம்.

மொபைல்

 

அதிபர் மட்டும்தான் என்க்ரிப்ட் பண்ண முடியுமா என்ன?

அப்படியெல்லாம் இல்ல பாஸ். நாமே கூட நமது மொபைலை எளிதாக என்க்ரிப்ட் செய்யலாம். செட்டிங்ஸ் பகுதியில் ஸ்க்ரீன் லாக் ஆப்சனுக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது. நம்பகமான Anti-Virus மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலை வைரஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கலாம்.

இன்னும் சில விஷயங்களில் கூடுதலாக நீங்கள் கவனம் செலுத்துனா, உங்க போன் இன்னுமே பாதுகாப்பானதாக இருக்கும்.அது என்னென்னே தெரியுமா?

ஸ்க்ரீன் லாக் விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில வழிகள் மூலம் உங்கள் பேட்டர்ன் லாக்கை எளிதில் கண்டுபிடிக்கும் அபாயம் இருக்கிறது. அதேபோல பாஸ்வேர்ட் உருவாக்கும்போது செய்யக்கூடாத சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது, பிறர் எளிதாக கண்டுபிடிக்கும் அளவு பாஸ்வேர்ட் வைக்கக் கூடாது. இதனால் சிலர் மிக எளிதான பாஸ்வேர்ட் வைத்து தகவல்களை பறிகொடுத்திருப்பார்கள். அதன்பின் வேறு எவராலும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வலிமையான பாஸ்வேர்டை உருவாக்கியிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு தவறு செய்வார்கள். அது என்னவென்றால் வலிமையான அந்த பாஸ்வேர்டை அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்துவார்கள். பொது இடங்களில் உள்ள வைஃபை வசதியை பயன்படுத்தும்போதோ, என்க்ரிப்சன் குறைவான தளங்களை பயன்படுத்தும்போதோ உங்கள் பாஸ்வேர்ட் திருடப்பட்டு, அதன் மூலமாக அனைத்து கணக்குகளும் ஹேக் செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது. எனவே பாஸ்வேர்ட் விஷயத்திலும், பேட்டர்ன் லாக் விஷயத்திலும் கவனம் தேவை. இதுபோன்ற சின்னச்சின்ன வழிகள் மூலமாக உங்கள் மொபைலின் தகவல்களையும் எளிதாக பாதுகாக்க முடியும் பாஸ்.

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்