தீவிரமாக வேலை தேடுகிறீர்களா? உங்களுக்கு கைகொடுக்க வருகிறது ஃபேஸ்புக்! #FacebookJobs

ஃபேஸ்புக்கில் வேலை தேடலாம்

ங்களுடைய அப்டேட் செய்யப்பட்ட 2 ரெஸ்யூம்கள், பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, இவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொள்ள ஒரு ஜிப் ஃபைல் ஆகியவற்றுடன் கழுத்தில் கட்டிய டையுடன் கூடிய, ஃபார்மல் டிரஸ்கோடுடன் கம்பெனிகளைத் தேடி அலையும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் குறையலாம். இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு அளித்துவரும் இணையதள சேவைகளின் வளர்ச்சியே இதற்குக் காரணம்.

ஏற்கெனவே லிங்கிடு இன், நௌக்ரி போன்ற தளங்கள், இளைஞர்கள் இணையத்தில் இருந்தபடியே வேலை தேடுவதற்காக உதவிவருகின்றன. தற்போது அந்த வரிசையில் ஃபேஸ்புக்கும் இணைந்துள்ளது. வேலைக்கு ஆள் தேடுவோர் மற்றும் வேலை தேடுவோர் ஆகிய இருவரையும் இணைக்கும் வகையில் ஜாப்ஸ் என்னும் வசதியை கனடா மற்றும் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக்.

பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்கள் பற்றிய அறிவிப்பை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன. ஆனால், தற்போது அதனை முறைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது இந்த ஜாப்ஸ் வசதி. இதன் மூலம், நீங்கள் நேரடியாக அந்த நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். நிறுவனங்கள் காலியிடங்கள் குறித்த அறிவிப்பைத் தங்களது ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது புதிதாக இதற்கெனத் துவங்கப்பட்டுள்ள 'jobs' பக்கத்திலோ பதிவிடலாம். அதில் பணியின் பெயர், அது பற்றிய அறிமுகம், போட்டோ, வேலைக்கு ஆட்கள் தேவைப்படும் இடம், சம்பள விவரங்கள், பணிநேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு போஸ்ட் செய்வார்கள்.

அதனைப் பயனாளர்கள் பார்த்து, விண்ணப்பித்துவிட்டால் போதும். விண்ணப்பம், நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்க அட்மினுக்குச் சென்றுவிடும். அவர் அதனை நிர்வகிக்கவோ, விண்ணப்பித்தவருடன் ஃபேஸ்புக் மெசெஞ்சர் மூலம் உரையாடவோ முடியும். 

ஃபேஸ்புக்கில் அறிவிப்பை வெளியிடும் வீடியோ:

 

 

அதேபோல வேலைதேடுவோர்கள் பணிபுரிய விரும்பும் இடம், வேலையின் தன்மை, எதிர்பார்க்கும் வேலை, சம்பளம், வேலை நேரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வேலைகளைத் தேட முடியும். நிறுவனங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருக்கும் 'Apply Now' பட்டன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கும்போது, அதில் கேட்டிருக்கும் விவரங்களை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும். அப்போது, உங்கள் ஃபேஸ்புக் புரொஃபைலில் குறிப்பிட்டிருக்கும் பள்ளி, கல்லூரி, முகவரி, பிறந்த தேதி, இதற்கு முன்னர் வேலை பார்த்த நிறுவனங்களின் பெயர்கள் போன்ற விவரங்களை தானாகவே அப்டேட் செய்துகொள்கிறது ஃபேஸ்புக். ஒருவேளை, தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்தால், நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். 

வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பான வீடியோ:

 

 

 

இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பணி தேடுவதோ, விண்ணப்பிப்பதோ புதுமையான விஷயம் கிடையாது. ஏற்கெனவே பல இணையதளங்கள் இந்த சேவைகளை அளித்துவருகின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில், அதிகம் பேர் பயன்படுத்தும் ஃபேஸ்புக் போன்ற பிரபல தளங்களில் இதுபோன்ற சேவைகள் துவங்கப்படுவதால் பலருக்கு பயனளிக்கலாம். நீங்கள், உங்கள் நியூஸ் ஃபீடிலேயே தினமும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளைப் பார்க்கவும், பயன்படுத்திக்கொள்ளவும் முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். மொபைல் அப்ளிகேஷனிலும் இந்த வசதி உண்டு. விரைவில் கனடா மற்றும் அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுதும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்படலாம்.

- ஞா.சுதாகர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!