ஃப்ளூயிட் டைனமிக்ஸ், ஃபிபனாஸ்ஸி சீரிஸ்... இந்தப் புதிய ஸ்ட்ராவுக்குள்ள இவ்ளோ விஷயமா? | New straw innovated by engineers based on fluid dynamics and Fibonacci series for McDonald

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (17/02/2017)

கடைசி தொடர்பு:17:53 (17/02/2017)

ஃப்ளூயிட் டைனமிக்ஸ், ஃபிபனாஸ்ஸி சீரிஸ்... இந்தப் புதிய ஸ்ட்ராவுக்குள்ள இவ்ளோ விஷயமா?

'தேவையே கண்டுபிடிப்பின் தாய்' என்பது அறிவியல் முதுமொழி. சமீபத்தில் உலகம் முழுக்க ஒரு ஸ்ட்ரா பற்றிய செய்தி வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது. மெக்டொனால்ட் நிறுவனத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது சின்ன விஷயம் என்றாலும் அதற்கான உழைப்பும், முயற்சியும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு பிரச்னைக்கு அறிவியல் மூலமாக எப்படியெல்லாம் தீர்வு காணலாம் என்பதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. அதைப்பற்றி பார்க்கும் முன், நீங்கள் இரு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உள்பட பல முன்னணி நிறுவனங்களுக்கு, அவுட்சோர்சிங் முறையில் விண்வெளி மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவிகளை ஜேஸ் மற்றும் என்.கே.லேப்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் ஒன்றிணைந்து செய்து வருகின்றன. மொபைலில் உள்ள கேமரா மற்றும் ஸ்பீக்கர் ஆகியவற்றை நமக்கு விருப்பமான இடத்திற்கு நகர்த்திக் கொள்ளும், கூகுளின் கனவுத்திட்டமான 'ஆரா' உள்பட பல விஷயங்களுக்கு, இந்நிறுவனங்கள் இணைந்து தொழில்நுட்ப வடிவமைப்பு உதவிகளைச் செய்துள்ளன. ஆனால் அந்தத் திட்டத்தை அதன்பின் கூகுள் கைவிட்டது வேறு கதை.

மெக்டொனால்ட் உணவகம்

உலகப் புகழ்பெற்ற மெக்டொனால்ட் உணவகம் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக 'சாக்லேட் ஷாம்ராக் ஷேக்' ஒரு பானத்தை உருவாக்கியது. இந்த பானமானது அடிப்பகுதியில் சாக்லேட் ஷேக்கும், மேற்பரப்பில் ஷாம்ராக் எனப்படும் வாசனை இலை கொண்டு உருவாக்கிய ஷேக்கும் சரிபாதியாக நிரப்பப்பட்டுத் தரப்படுவது.

தற்போது விஷயத்திற்கு வருவோம். மேற்சொன்ன சாக்லேட் ஷாம்ராக் ஷேக்கை 'ஸ்ட்ரா' இல்லாமல் குடித்தால் முதலில் மேலே உள்ள ஷாம்ராக் பகுதி காலியாகும். அதன்பின் கீழே உள்ள சாக்லேட் நிரம்பிய பகுதி காலியாகும். சரியா? ஒருவேளை வாடிக்கையாளர் 'ஸ்ட்ரா' மூலமாகக் குடித்தால், ஏதாவது ஒரு ஷேக்கை மட்டும்தான் ருசி பார்க்கமுடியும். ஆனால் இந்த பானத்தை உருவாக்கிய மெக்டொனால்ட் நிறுவனம், ஸ்ட்ரா மூலமாக பருகும் வாடிக்கையாளர் இந்த இரு சுவைகளையும் ஒரே நேரத்தில் உணரும்படி, புதிதாக ஒரு ஸ்ட்ரா உருவாக்கித் தர வேண்டும் என்று நாம் முதலில் பார்த்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் கில்லிகளான ஜேஸ் மற்றும் என்.கே.லேப்ஸ் நிறுவனங்களிடம் டாஸ்க்கை ஒப்படைத்தது.

'இரண்டு ஸ்ட்ராக்களைப் பயன்படுத்தினால் பிரச்னை தீர்ந்தது' என ஒருவர் பதில் சொல்ல... 'ஏதாவது ஒரு பகுதி தீர்ந்தாலும் ஸ்ட்ராவில் காற்று மட்டும் தானே வரும். அதெல்லாம் முடியாது' எனப் பதில் வந்திருக்கிறது. வாடிக்கையாளர் பருக ஆரம்பித்தால், ஷேக் கிளாஸில் இருந்து குறையும். அப்போதும் மேலே சொன்னபடி, சரிவிகிதமான சுவையில் பருகும் விதமாக தீர்வு வேண்டும் என நிபந்தனை வைத்தது மெக்டொனால்ட். (இதை வாசிக்கும்போது உங்களுக்கு 'புறாவுக்கெல்லாம் போரா! பெரிய அக்கப்போராக அல்லவா உள்ளது!' என்ற வசனம் மைண்ட் வாய்ஸாகக் கேட்டால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல).

இதாங்க அந்த 'J' வடிவ ஸ்ட்ரா!

அந்த நிறுவனங்கள் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, அறிவியல் மற்றும் கணிதங்களை கலந்துகட்டி பல்வேறு பரிசோதனைகளில் இறங்கினார்கள். இதற்காக அறிவியல் மற்றும் கணித விதிகளைக் கலந்துகட்டி 'J' வடிவத்தில் ஒரு ஸ்ட்ராவை உருவாக்கினார்கள். ஃப்ளூய்ட் டைனமிக்ஸ், ஃபிபனாஸ்ஸி தொடர் விதிகளைப் பயன்படுத்தி இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். இந்த ஸ்ட்ராவின் அடிப்பகுதியிலும், பக்கங்களிலும் துளைகள் இருக்கும். இயற்பியல் விதியின் படி, ஸ்ட்ராவின் பக்கங்களில் இருக்கும் துளைகளின் வழியே இரண்டு சுவைகொண்ட ஷேக்கும் ஒரே நேரத்தில் உறிஞ்சப்படும். அதைத் தாண்டி ஷேக் கீழே இறங்கும்போது ஸ்ட்ராவின் அடிப்பகுதியில் இருந்து ஷேக் உறிஞ்சப்படும். இதற்காக ஒரு தொழில்நுட்பக் குழு இணைந்து பல நாள்கள் உழைத்து 3டி தொழில்நுட்பம், நூற்றுக்கணக்கான மாதிரிகளைப் பயன்படுத்தி, இந்த ஸ்ட்ராவிற்கு இறுதிவடிவம் தந்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 'டைம்' பத்திரிக்கை உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளைப் பட்டியலிடும். 2017-ம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புகள் பட்டியலில் இது தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, இந்த ஸ்ட்ராவை தனது மார்க்கெட்டிங் யுக்தியாகப் பயன்படுத்தி வருகிறது மெக்டொனால்ட் நிறுவனம். வெறும் 2,000 ஸ்ட்ராக்களை மட்டுமே முதற்கட்டமாக உருவாக்கியதால் தற்போது அந்த ஸ்ட்ரா மூலமாக 'சாக்லேட் ஷாம்ராக் ஷேக்' பருகுவதற்கு அமெரிக்க மக்களிடையே செம டிமாண்ட்டாம்!

ஸ்ட்ரா உருவான கதை வீடியோவில் :

 

 

 

- கருப்பு

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்