வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (18/02/2017)

கடைசி தொடர்பு:16:51 (18/02/2017)

வசீகரன் வேலையைப் பிடுங்க வரும் ’சிட்டி’க்கள்..! #RobotVsHumans

ரோபோ

ஒரு காலத்தில் மனிதர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோக்கள், எதிர்காலத்தில் மனிதர்களின் வேலை வாய்ப்பை முற்றிலும் தட்டிப்பறிக்கும் என்று அதை உருவாக்கியவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அது அவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைத்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்த 9 வருடங்களில் இந்தியாவில் 20 கோடி இளைஞர்கள் ரோபோக்களின் வருகையால் வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று சில காலத்துக்கு முன் எச்சரிக்கை விடுத்தார், தொழில்துறை முன்னோடிகளில் ஒருவரான டி.வி.மோகன்தாஸ்.

”2025-ம் ஆண்டில் 21 முதல் 41 வயது வரையிலான 20 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிப்பார்கள். உலகில் அதிக அளவில் இளைஞர்களைக்கொண்டுள்ள இந்தியாவுக்கு, இது மிகவும் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். ஆனால், இவ்வளவு பெரிய வேலைவாய்ப்பு  இழப்பை சமாளிக்கும் அளவுக்கு மாற்று வழிகள் இந்திய அரசிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்” என்று குறிப்பிட்டுள்ளார் மோகன்தாஸ்.

இவர் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் எதிர்காலத்தில் ரோபோக்களால் மனிதர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். இப்போது, நமது வாழ்வில் இயந்திரங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன என்றும், ரோபோக்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இதுவரையிலும் நாம் கற்பனையில் மட்டுமே நினைத்து பார்த்தவை நிஜத்தில் நடக்க  ஆரம்பித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக மொபைல் உதிரிப்பாகங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், முழுமையாக ரோபோக்களால் இயங்கும் தொழிற்சாலையை நிறுவிவிட்டது. தானியங்கி கார்கள் ஆராய்ச்சியில், கூகுள் மற்றும் பல நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன. டிரைவர்களே இல்லாமல் இயங்கும் கார்கள் பல நாடுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. டெல்லி மெட்ரோ ரயில் தானியங்கி மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

ரோபோ


ஆட்டோமொபைல் துறையில் ரோபோக்கள் நுழைந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்தத் துறையில் ஆறு மனிதர்களின் வேலையை ஒரே ஒரு ரோபோ செய்துவிடுகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரோபோவை நிலாவுக்கு அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். 

பல நாடுகள் பணப்பரிவர்த்தனைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியதன் காரணமாக, அந்த நாடுகளின் வங்கிப்பணியாளர்கள் வேலையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நம் நாட்டில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புகூட டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது வங்கிகளில் பணியாளர்களை குறைப்பதற்கான ஒரு முதற்படியாக இருக்கலாம்.. ஏடிஎம்-களின் வருகையால் நாம் வங்கிக்குச்  செல்வது குறைந்தது உங்களுக்கு நினைவுக்கு வரலாம். அனைத்தும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டால், நமக்கு வங்கிகளும் அதில் பணியாற்ற வங்கிப்பணியாளர்களும் தேவைப்பட மாட்டர்கள். அவர்களது பணிகளை இயந்திரமே கவனித்துக்கொள்ளும்.ஏற்கெனவே, உங்கள் வங்கி உங்களது மொபைலில் என்றே வங்கிகள் விளம்பரப்படுத்துகின்றன.

ரோபோக்களுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் என்று யோசித்தீர்களானால், ரோபோக்களால் 24 மணி நேரமும் பணி செய்ய முடியும். உணவு, குடிநீர் போன்றவை எதுவும் ரோபோக்களுக்குத் தேவைப்படாது. ரோபோக்கள் பதவி உயர்வோ அல்லது சம்பளமோ கேட்காது. அவற்றை கண்காணிக்க மற்றும் கட்டளைகளை இடுவதற்கு கணினி மட்டும் போதுமானது.. செய்யும் வேலையில் தவறு என்பது எப்போதாவது தான் நிகழும் போன்ற பல காரணங்களால் ரோபோக்கள் மனிதர்களைவிட பல படிகள் முன்னிலையில் இருக்கின்றன. அதனால், வேலை வாய்ப்புகளையும் எளிதாக பறித்துவிடுகின்றன.

நம் அன்றாட வாழ்விலும் மற்ற துறைகளிலும் இயந்திரங்களின் இருப்பைப்  பரிசீலனை செய்வதற்கான காலம் இது. இதன் பாதிப்பு பற்றி புரியாதவர்களுக்கு,  புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் கூற்று ஒன்று அதை விளக்கக்கூடும், "இயந்திரங்கள் இன்னும் சுயமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறவில்லை. அப்படிப் பெற்றுவிட்டால், அதுதான் மனித அழிவிற்குத் தொடக்கப்புள்ளி."

- மு.ராஜேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்