உங்க சாதா லேப்டாப்பை டச் ஸ்க்ரீனாக மாற்றுவது எப்படி தெரியுமா?

ஸ்மார்ட்ஃபோன்களின் வரவை அடுத்து நமது விரல்கள் 'டச்' செய்தே பழக்கப்பட்டுவிட்டன. சிலநேரம் நம்மை அறியாமலேயே லேப்டாப்பின் திரையில் அனிச்சைச் செயலாக ஸ்க்ரோல் செய்வதற்காக தொட்டுவிட்டு 'அடச்சே!' என சுதாரித்திருப்போம். பொதுவாக சாதாரண லேப்டாப்பை விட, டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்களின் விலை கிட்டத்தட்ட இருமடங்கு அதிகம். ஆனால் உங்கள் சாதாரண லேப்டாப்பைக் கூட எளிதாக டச் ஸ்க்ரீன் வசதி கொண்ட லேப்டாப்பாக மாற்றிக் கொள்ளும் வசதிகள் தற்போது கிடைக்கின்றன.

ஆப்டிக்கல் சென்சிங் டெக்னாலஜியில் தேர்ந்த நியோனோட் நிறுவனம் புதிதாக 'ஏர்பார்' என்ற தயாரிப்பை வெளியிட்டுள்ளது. இது கண்ணுக்குப் புலப்படாத ஒளியை உமிழ்ந்து அதன் மூலம் தொடுதலை உணர்ந்து, கணினிக்குத் தெரிவிக்கும் தன்மை கொண்டது. இதற்கு அந்நிறுவனம் 'ஜீரோ ஃபோர்ஸ் சென்சிங் டெக்னாலஜி' எனப் பெயரிட்டுள்ளது.

ஏர்பார் லேப்டாப்

இந்த ஏர்பாரை உங்கள் லேப்டாப்பில் பொருத்தினால் போதும். உங்கள் சாதாரண லேப்டாப்பை தொடுதிரை வசதிகொண்ட லேப்டாப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். கண்ணுக்குத் தெரியாத ஒளியை வெளியிட்டு அதைக்கொண்டு தொடுதலை உணரும் தொழில்நுட்பத்தில் இது செயல்படுகிறது. இதன் மூலம் உங்கள் விரல், பெயின்ட் ப்ரஷ் என எதைக் கொண்டும் நீங்கள் மடிக்கணினியின் திரையில் வேலை செய்யலாம். ஃபோட்டோஷாப் போன்ற அப்ளிகேசன்கள் பயன்படுத்தவும், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடவும் கூட இதை பயன்படுத்த முடியும். வழக்கமான டச் ஸ்க்ரீனைப் போல தொடுதல், ஜூம் செய்வது போன்ற அத்தனை வேலைகளையும் இதன் முலம் செய்ய முடியும் என நியோனைட் ஏர்பார் உத்தரவாதம் அளிக்கிறது. ஒரே நேரத்தில் பல தொடுகைகளையும் இது உணர்ந்து செயல்படுகிறது.

நீள வடிவில் இருக்கும் இதன் இரு முனைகளிலும் சின்ன காந்தம் இருப்பதால், மடிக்கணினியின் கீழ் இதை எளிதாக பொருத்திக் கொள்ளலாம். அதன்பின் இதை யூ.எஸ்.பி. மூலமாக நமது லேப்டாப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் நமது லேப்டாப் திரையை, தொடுதிரை போல பயன்படுத்தலாம். இதற்கென தனியாக மென்பொருள் எதையும் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு. ஆனால் அதே நேரத்தில் விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10 போன்ற ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட லேப்டாப்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும்.

ஏர்பார்

இதைப் பயன்படுத்தும்போது அதிகபட்சமாக 50 மில்லிவாட் மின்சக்தியும், மற்ற நேரங்களில் 5 மில்லிவாட் மின்சக்தியும் மட்டுமே இதற்குத் தேவைப்படுகிறது. யூ.எஸ்.பி. மூலமாக லேப்டாப்பில் இருந்து மின்சக்தியை எடுத்துக் கொள்ளும். இதனால் சார்ஜ் தீர்ந்துவிடுமோ என்ற கவலையில்லை. அது மட்டுமின்றி நமக்கு விருப்பமான நேரத்தில் மட்டும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லாத நேரத்தில் இதை எளிதாக நீக்கிக் கொள்ளலாம்.

சந்தையில் பொதுவாக 13.3", 14" மற்றும் 15.6" திரையின் அளவுகொண்ட லேப்டாப்களே கிடைக்கின்றன. இதை மனதில் கொண்டு இம்மூன்று அளவுகளிலும் இந்த ஏர்பாரை வெளியிட்டுள்ளது நியோனோட் நிறுவனம். ஆனால் இந்தியச் சந்தையில் 15.6" அளவுகொண்ட திரைக்குப் பயன்படுத்தும் ஏர்பார் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 7 ஆயிரம் இதன் விலை. புதிதாக இரண்டு மடங்கு விலைக்கு தொடுதிரை வசதிகொண்ட லேப்டாப் வாங்குவதை விட, இது லாபகரமானதுதான் என்கிறார்கள் வல்லுநர்கள்.

கூகுள்ல தேட கிளம்பிட்டீங்களா பாஸ்!

இதைப்பற்றிய வீடியோ :

- கருப்பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!