யூ டியூப் யூசர்ஸ்... சீக்கிரமே அந்தத் தொல்லையிலிருந்து உங்களுக்கு விடுதலை!

புதிய பாடல், டீசர், ட்ரெய்லர் முதல் படத்தின் விமர்சனம் வரைக்கும்,  நம்மை முழுமையாக என்டர்டெயின் செய்யும் தளம் யூ டியூப். இதில் இருக்கும் பெரிய தொல்லையே, வீடியோக்களுக்கு முன்பு வந்து கடுப்பேற்றும் விளம்பரங்கள்தான்.

யூ டியூப்

யூ டியூப் தளத்தில் எந்த வீடியோக்களைப் பார்த்தாலும், வீடியோவிற்கு முன்னர் ஸ்கிப் செய்ய முடியாதபடி சில விளம்பரங்கள் வந்து நம் பொறுமையை சோதிக்கும். சில விளம்பரங்களை மட்டுமே 5 வினாடிகள் கழித்து ஸ்கிப் செய்துவிட்டு பார்க்க முடியும்; அப்படி செய்ய முடியாத விளம்பரங்களை முழுநேரமும் பார்ப்பதைத் தவிர நமக்கு வேறுவழியில்லை. இதனைத் தடுப்பதற்காக எக்ஸ்டென்சன்கள், ஏட் பிளாக்கர்கள், மென்பொருட்கள் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தியிருப்போம். ஆனாலும் கூட எழுதத்தொடங்கி ஒரு பத்தி தாண்டியும் கூட, இன்னும் மேட்டர் என்ன என்பதேயே சொல்லாத இந்தக் கட்டுரை போல உங்கள் டென்ஷனாக்கும் அந்த விளம்பரங்கள். 

இந்த பிரச்னைக்கு அடுத்த ஆண்டு முதல் சிறிய தீர்வு ஒன்று கிடைக்கவிருக்கிறது. அதாவது ஸ்கிப் செய்யமுடியாமல் 30 நொடிகள் வரை ஓடும் விளம்பரங்களை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். பல பயனாளர்களுக்கு இந்த வசதி எரிச்சலை ஏற்படுத்துவதால் இந்த முடிவினை எடுத்துள்ளது அந்நிறுவனம். "பயனாளர்களுக்கு சிறந்த முறையில் விளம்பரங்களை தர வேண்டும் என நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதனால் 2018-ம் ஆண்டில் இருந்து நிறுத்த முடியாமல் ஓடும், 30 நொடி விளம்பரங்களை நிறுத்தவிருக்கிறோம். அதற்கு பதிலாக பயனாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் இருவருக்கும் ஏற்ற வடிவங்களில் விளம்பரங்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்" என அறிவித்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர்களுள் ஒருவர்.

யூ-ட்யூப் விளம்பரங்கள்

6 நொடிகள் வரை, ஸ்கிப் செய்யமுடியாமல் ஓடும் பம்பர் விளம்பரங்களை கடந்த ஆண்டுதான் யூ டியூப் நிறுவனம் கொண்டுவந்தது. டெஸ்க்டாப் பயனாளர்கள் மட்டுமின்றி, மொபைல் பயனாளர்களையும் கவர்வதற்காக இந்த வசதியினை அறிமுகம் செய்தது. தற்போது 30 நொடிகள் ஸ்கிப் செய்ய இயலாமல் ஓடும் விளம்பரங்களை மட்டுமே நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் மற்ற விளம்பர வடிவங்கள் அப்படியே தொடரும்.

யூ டியூப் மட்டுமல்ல. மற்ற நிறுவனங்களும் மொபைலுக்கு ஏற்றபடி தங்கள் விளம்பரங்களை காட்டுவதில் கவனம் செலுத்துகின்றன. இதேபோல ஃபேஸ்புக் நிறுவனமும் சமீபத்தில் தனது விளம்பரங்களின் அமைப்பில் சில மாறுதல்களைக் கொண்டுவந்தது. தனது புதிய ஆப் அப்டேட்டில் வீடியோக்களை ஆட்டோ ப்ளே செய்யும் வசதியைக் கொண்டுவர உள்ளதாக அறிவித்திருந்தது. இதன்மூலம் டைம்லைனில் வீடியோ விளம்பரங்கள் இருந்தால், அவை சத்தத்துடனேயே ப்ளே ஆகும். விளம்பரங்களை மியூட்டில் பார்ப்பது பயனளிக்காததால் இந்த முடிவை எடுத்திருந்தது. மற்ற விளம்பர வடிவங்களை விடவும், வீடியோ விளம்பரங்கள் இணைய நிறுவனங்களுக்கு லாபகரமாக இருகின்றன. எனவே இவற்றை மெருகேற்றி வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதில் தீவிரமாக இருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

- ஞா.சுதாகர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!